ஆதவன் 🌞 796🌻 ஏப்ரல் 03, 2023 திங்கள்கிழமை
"மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது." ( மத்தேயு 23 : 25 )
நானும் எனது நண்பர் ஒருவரும் பணி நிமித்தமாக ஒருமுறை ஒரு கிராமத்துக்குச் சென்றிருந்தபோது மதியம் தாகத்துக்குக் குடிக்க ஒரு வீட்டில் தண்ணீர் கேட்டோம். ஒரு செம்பில் தண்ணீர் தந்தார்கள். அந்தச் செம்பினைப் பார்த்தபோது பளபளவென்றிருந்தது. ஆனால் அதனை வாங்கிப் பாத்தபோது அதன் தூரில் பச்சையும் கருப்புமாக பாசியும் அழுக்கும் படர்ந்திருந்தன. தண்ணீரைக் குடிக்க முடியவில்லை.
இதுபோலவே, இயேசு கிறிஸ்துவின் காலத்து வேத அறிஞர்கள், பரிசேயர்கள் போன்றவர்கள் பல்வேறு வெளித்தூய்மை சடங்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றை மட்டுமே கடைபிடித்து வாழ்ந்துவந்தனர். அடிக்கடி கைகளைக் கழுவுதல், பாத்திரங்களையும் கிண்ணங்களையும் கழுவுவது போன்ற தூய்மைச் செயல்களையும் செய்துவந்தனர். இப்படிப்பட்டச் செயல்களைச் செய்வதே கடவுளை வழிபடுமுன் நாம் செய்யவேண்டிய முறைமைகள் என்று கற்பித்து வந்தனர். ஆனால் அவர்களது உள்ளமோ வேசித்தனத்தினாலும் பொருளாசையினாலும், கபடத்தினாலும் நிறைந்திருந்தது.
இதனையே இயேசு கிறிஸ்து கண்டித்தார். "குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு." ( மத்தேயு 23 : 26 ) என்று கூறினார். அதாவது, வெளிப்புற சடங்குகள் இருக்கட்டும் முதலில் நீ உன் உள்ளத்தைக் கடவுளுக்கு ஏற்புடையதாக மாற்று என்கின்றார்.
இன்று கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டு ஆலய காரியங்களிலும், பல்வேறு பக்தி செயல்களிலும், சடங்காச்சாரத்திலும் மூழ்கி தங்களது வெளி தோரணையினை பகட்டாகக் காட்டும் பலரது நிஜ வாழ்க்கை அலங்கோலமாக இருக்கின்றது. ஊழியர்கள், குருக்கள் பலரது சாட்சியற்ற வாழ்க்கை இன்று பத்திரிகைகளில் அம்பலமாகி பிற மதத்தவர்களும் கேலிபேசுமளவுக்கு இருக்கின்றது. கிறிஸ்தவ விசுவாசி என்று பெயர்பெற்றவன் அலுவலத்தில் கையூட்டுப்பெற்று கைதாகி அவமானப்பட்டு நிற்கின்றான்.
அன்பானவர்களே, நமது வெளியரங்கமான பக்திச் செயல்பாடுகளையல்ல, நமது இதயத்தையே தேவன் பார்க்கின்றார். இந்தஉண்மையினை நாம் புரிந்துகொள்ளவேண்டும். வெளியரங்கமாக சிறந்த விசுவாசி என்று பெயர் வாங்குவதையல்ல, நாம் தேவனுக்குமுன் எப்படி நமது வாழ்க்கையினை அமைத்துள்ளோம் என்பதனையே தேவன் பார்க்கின்றார். நமது உட்புறத்தைச் சுத்தமாக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மட்டுமே முடியும். அவருக்கு நம்மை ஒப்புக்கொடுத்து மீட்பு அனுபவத்தைப் பெறும்போது மட்டுமே நமது உட்புறம் சுத்தமாக முடியும்.
நமது உட்புறம் சுத்தமாகாவிட்டால் நாம் வெள்ளையடிக்கப்பட்டக் கல்லறைகள்போலவே தேவனது பார்வைக்கு இருப்போம். வேதபாரகரும் பரிசேயர்களும் இப்படி இருந்ததால்தான் இயேசு கிறிஸ்து அவர்களைப்பார்த்து, "மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்டக் கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்." ( மத்தேயு 23 : 27 ) என்றார்.
வெளி ஆராதனை, சடங்குகள் சம்பிரதாயங்களுக்கு முன்னுரிமை கொடுக்குமுன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நமது இருதயத்தை ஒப்புக்கொடுத்து நமது உட்புறத்தைச் சுத்தமாக்கிடுவோம்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment