ஆதவன் 🌞 821🌻 ஏப்ரல் 28, 2023 வெள்ளிக்கிழமை
"நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக்கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்." ( யோவேல் 2 : 13 )
ஆடைகளைக் கிழித்து உபவாசம் இருத்தல் அந்தக்காலத்து யூதர்களின் நடைமுறை. உதாரணமாக, "ஆகாப், .....தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சரீரத்தின்மேல் இரட்டைப்போர்த்துக்கொண்டு, உபவாசம்பண்ணி, இரட்டிலே படுத்துத் தாழ்மையாய் நடந்துகொண்டான்." ( 1 இராஜாக்கள் 21 : 27 ) என்று வாசிக்கின்றோம்.
ஆடைகளைக் கிழிப்பது அக்காலத்தில் பல்வேறு காரியங்களுக்காக செய்யப்பட்டது. இதனை நாம் வேதாகமத்தில் பல இடங்களில் வாசிக்கலாம். உதாரணமாக, கோபத்தைக் காட்டுவதற்கு, இஸ்ரவேலின் ராஜா தனது ஆடையினைக் கிழித்துக்கொண்டான். (2 இராஜாக்கள் 5:7) என வாசிக்கின்றோம். துக்கத்தை வெளிக்காட்டுவதற்கும் அக்காலத்தில் இப்படி ஆடைகளைக் கிழித்துக்கொள்வதுண்டு. பக்தனாகிய யோபு கொடிய துக்கத்தால் இப்படித் தனது ஆடையினைக் கிழித்துக்கொண்டதை நாம் பார்க்கலாம் (யோபு - 1:20)
ஆனால் இந்தப் பழக்கம் பிற்காலங்களில் உண்மையான மன வருத்தத்தில் செய்யாமல் வெறும் சடங்காக மட்டுமே பலரால் கடைபிடிக்கப்பட்டது. மேலும், தங்களது பாவங்களுக்காக உண்மையான மன வருத்தம் கொண்டு ஆடைகளைக் கிழிக்காமல் தங்களை நீதிமான் என பிறர் எண்ணவேண்டும் என்பதற்காக ஆடைகளைக் கிழித்துக்கொண்டனர் பல யூதர்கள்.
இத்தகைய போலி மனம்திரும்புதலை கர்த்தர் தீர்க்கதரிசியாகிய யோவேலின்மூலம் கண்டிக்கின்றார். நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக்கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள் என்கின்றார். ஆம் அன்பானவர்களே, நமது இருதயம் பாவங்களை உணர்ந்து கிழிக்கப்படவேண்டும். வெறுமனே வாயினால் "ஆண்டவரே என் பாவங்களை மன்னியும்" என்று கூறாமல், உடைக்கப்பட்ட உள்ளத்தோடு கூறவேண்டும். அதாவது நாம் செய்தது பாவம் என்று உள்ளத்தால் உணர்ந்து தேவனிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.
உரியாவின் மனைவியிடம் பாவத்தில் ஈடுபட்டத் தாவீதுக்குத் தான் செய்த பாவம் மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது. அவர் எழுதிய 51 வது சங்கீதத்தைப் படித்துப் பாருங்கள், "என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது." ( சங்கீதம் 51 : 3 ) என தேவனை நோக்கிக் கதறுகின்றார். மட்டுமல்ல, "தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்." ( சங்கீதம் 51 : 10 ) என மன்றாடுகின்றார். ஏறக்குறைய 4500 ஆண்டுகள் ஆனபின்பும் தாவீதின் பாவ மன்னிப்பின் சங்கீதம் நமக்கும் ஏற்ற விண்ணப்பமாக இருக்கின்றது.
அன்பானவர்களே, வேதம் கூறுகின்றது, "ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை." ( பிரசங்கி 7 : 20 ) என்று. தேவனின் பார்வையில் நாம் அனைவருமே பாவிகள்தான். ஆனால் பல வேளைகளில் நமக்கு நமது பாவங்கள் தெரிவதில்லை. ஆவியானவர்தான் பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும் நியாயத் தீர்ப்பைக்குறித்தும் கண்டித்து உணர்த்துபவர். (யோவான் 16:8) ஆவியானவரின் வழிநடத்தலுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் போது நமது மனச்சாட்சி கூர்மையடையும்; நமது பாவங்கள் நமக்குத் தெரியவரும்.
ஆவியானவரின் உணர்த்துதலின்படி நமது பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பு வேண்டுவோம். நாம் நமது வஸ்திரங்களையல்ல, நமது இருதயங்களைக்கிழித்து, நமது தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்புவோம்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார் என்று இன்றைய வசனம் கூறுகின்றது. எனவே நாம் உடைந்த உள்ளதோடு வேண்டும்போது தேவன் நமது பாவங்களை மன்னித்து மேலான அனுபவங்களை நமக்குத் தந்து வழிநடத்துவார்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment