ஆதவன் 🌞 823🌻 ஏப்ரல் 30, 2023 ஞாயிற்றுக்கிழமை
"தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதனால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்." ( 1 சாமுவேல் 30 : 6 )
தாவீதுக்கு ஏற்பட்ட மிக நெருக்கடியான நேரம் இது. சவுலுக்குப் பயந்து பெலிஸ்திய ராஜாவாகிய ஆகீஸ் என்பவனுடன் நட்புறவுகொண்டு பெலிஸ்தியரின் தேசத்தில் தங்கியிருந்தான் தாவீது. ஆகீஸ் போருக்குப் புறப்பட்டபோது தாவீதும் அவனது உடன் வீரர்களும் ஆகீஸுடன் போருக்குப் புறப்பட்டனர். ஆனால் ஆகீஸின் வீரர்கள் தாவீதை நம்பவில்லை. எனவே, தாவீது தங்களுடன் போருக்கு வருவதை விரும்பவில்லை. எனவே ஆகீஸ் தாவீதை தங்களுடன் போருக்கு வரவேண்டாம் என்றும் திருப்பிச் சென்றுவிடுமாறும் கூறி அனுப்பிவிட்டான்.
தாவீதும் அவனுடைய வீரர்களும் திரும்பி வருவதற்குள் அமலேக்கியர் வந்து தாவீதின் மனைவிகள், பிள்ளைகள், அவனுடைய வீரர்களின் மனைவிகள், உடைமைகளைக் கொள்ளையிட்டுச் சென்றனர். இது தாவீதின் வீரர்களுக்குப் பெரிய மன மடிவாயிருந்தது. இந்த வேளையில் தாவீதோடு இருந்த அவனுடைய வீரர்களே தாவீதைக் கல்லெறிந்து கொல்ல முயலுகின்றனர்.
எண்ணிப்பாருங்கள்...ஒருபுறம் உயிரை வாங்கத் தேடும் சவுல், மறுபுறம், தங்களோடு சேரக்கூடாது என ஒதுக்கிய ஆகீஸின் வீரர்கள் இத்துடன் மனைவி, பிள்ளைகள், உடைமைகள் அனைத்தும் அமலேக்கியரால் கொள்ளையிடப்பட்ட நிலைமை. இவை அனைத்துக்கும் சிகரமாக சொந்த வீரர்களே கல்லெறிந்து கொல்ல முயலக்கூடிய நிலைமை!!!
ஆனால் இன்றைய வசனம் கூறுகின்றது, "தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக் கொண்டான்." ஆம், கர்த்தரோடு நடக்கக்கூடிய அனுபவம் இருந்ததால் இந்தக் கொடிய சூழ்நிலையிலும் தாவீது மனம் முறியாமல் தன்னைக் கர்த்தருக்குள் திடப்படுத்திக்கொண்டான். அதனால் தேவன் அவனைக் கைவிடவில்லை. எனவே, தாவீது கொள்ளைபோன அனைத்தையும் மீட்டுக்கொண்டான். "அவர்கள் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும், பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும், ஒன்றும் குறைபடாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான்." ( 1 சாமுவேல் 30 : 19 ) என்று வாசிக்கின்றோம்.
அன்பானவர்களே, நமக்கு இது ஒரு பெரிய எடுத்துக்காட்டாக இருக்கின்றது. எந்தவிதத் துன்பங்களோ, எத்தனைவிதமான துன்பங்களோ வந்தாலும் கர்த்தருக்குள் திட நம்பிக்கையாயிருந்து வாழ்வோமானால் அனைத்தையும் மேற்கொண்டு வாழ அவர் உதவுவார்.
இன்றைய வசனம் இறுதியாகக் கூறுகின்றது, "ஒன்றும் குறைவுபடாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான்" என்று. ஆம், கர்த்தர் செய்யும் மிகப்பெரிய காரியம் இதுதான். அவர் முற்றிலும் ஜெயம் கொடுக்கும் தேவன். 100% விடுதலையினைத் தர வல்லவர். தாவீதின் வழிகாட்டுதலை நாம் பின்பற்றுவோம். எந்தச் சூழ்நிலையிலும் தேவனாகிய கர்த்தருக்குள் நம்மைத் திடப்படுத்திக்கொண்டு வெற்றியுள்ள ஒருவாழ்க்கை வாழ்வோம்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment