Friday, April 21, 2023

வேத புரட்டர்கள்

ஆதவன் 🌞 816🌻 ஏப்ரல் 23, 2023 ஞாயிற்றுக்கிழமை


































"வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்திசொன்னபின்பு அவனை விட்டு விலகு. அப்படிப்பட்டவன் நிலைதவறி, தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாய்ப் பாவஞ்செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே." ( தீத்து 3 : 11 )

தேவன் தன்னை எவரிடமும் திணிப்பதில்லை. உலகிலுள்ள எல்லோரும் தன்னை அறியவேண்டுமென்று தேவன் விரும்பினாலும் மனிதர்களது சுய குணமே தேவனை அவர்கள் அறியத் தடையாக இருக்கின்றது.  

கிறிஸ்தவர்களிலும்கூடச்  சிலர் வேத வசனங்களையும், வேத உண்மைகளையும் புரட்டிப் பேசுகின்றனர். காரணம் சுய லாபம். நாம் இத்தகைய மனிதர்களுக்கு வேத உண்மைகளை எடுத்துக் கூறினாலும் இவர்கள் அவற்றை  உண்மையென உள்ளத்தில் உணர்ந்தாலும் தாங்கள் கூறும் தவறான உபதேசத்தையும், தவறான வழிகளையும் விட்டுத் திரும்பமாட்டார்கள். காரணம் சரியான வழியை ஏற்றுக்கொள்வது ஏதோ ஒரு விதத்தில் அவர்களை பாதிப்பதாக இருப்பதால்தான். 

இத்தகைய மனிதர்கள் தங்களை நியாயப்படுத்த, "வேதாகமத்தில் இருப்பது உண்மைதாங்க...ஆனால் அதன்படி யாரும் வாழ முடியாது" என்று தங்கள் தவறுக்கு நியாயம் கற்பிப்பார்கள்.  இப்படி வேத சத்தியத்தை உண்மை என உணர்ந்தாலும் அதனைத் தவிர்ப்பவன்தான் வேத புரட்டன். கிறிஸ்தவத்தில் இத்தகைய வேத புரட்டு ஊழியர்களும் அதிகம்பேர் உள்ளனர். எனவே நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம்.

இன்றைய வசனம் கூறுகின்றது, இப்படி வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்திசொன்னபின்பு அவனை விட்டு விலகு என்று. அதாவது இத்தகைய வேதபுரட்டர்களுக்குமுன் நாம் வாதம் செய்து கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை.  அப்படிப்பட்டவன் தானே ஆக்கினைத்தீர்ப்படைய பாவம் செய்தவனாய் இருக்கின்றான். ஆவிக்குரிய மேலான அனுபவங்களை இத்தகைய மனிதர்கள் பெற்றுக்கொள்ளவும் முடியாது.

மேலும், கிறிஸ்துவை அறியாத மக்கள்கூட கிறிஸ்துவைப்பற்றியும் வேத உண்மைகளைப்பற்றியும் நாம் கூறுவதை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் தங்களை கிறிஸ்தவர்கள் எனக் கூறிக்கொள்ளும் இத்தகைய வேத புரட்டர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 

இதற்கு அடிப்படையான காரணம் உண்மையான மனம் திரும்புதலும் மீட்பு அனுபவமும் இல்லாமல் இருப்பதுதான். ஒருவர் சார்ந்திருக்கும் சபைகளோ ஊழியர்களோ இதற்குக் காரணமாக முடியாது.  யூதாசுக்குக் கிடைத்தது மிக அற்புதமான ஊழியர், வழிகாட்டி, தலைவர், ஆலோசகர். ஆனால் யூதாசின் வாழ்வு தோல்வியடைந்தது. காரணம், தனிப்பட்ட முறையில் அவனிடம் குணங்களில் மாறுதல் ஏற்படவில்லை. மனம்திரும்புதல் இல்லை. கடமைக்காக இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றினவன் அவன்.  

அன்பானவர்களே, இத்தகைய மனிதர்கள் நம்மோடு நமது சபைகளில் இருப்பார்கள். ஆனால் எல்லா வேத சத்தியங்களையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இவர்களுக்கு உண்மையை இரண்டு மூன்றுமுறை எடுத்துச் சொல்லியும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையானால் அவர்களை விட்டு நாம் விலகிவிடவேண்டும். அதாவது அதற்குமேல் அவர்களிடம் இதுகுறித்து நாம் தர்க்கம் செய்துகொண்டிருக்கக் கூடாது எனத் தனது சீடனான தீத்துவுக்கு அப்போஸ்தலரான பவுல் அடிகள் அறிவுரை கூறுகின்றார்; இந்த அறிவுரை நமக்கும்தான்.

வேத புரட்டர்களை அடையாளம் கண்டு அவர்கள் சத்தியத்தை அறிய ஆலோசனை கூறுவோம். ஏற்றுக்கொள்ளவில்லையானால் நமது முயற்சிகளை அவர்களைத் திருத்துவதிலேயே செலவழிக்காமல் விட்டு விலகுவோம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

No comments: