ஆதவன் 🌞 813🌻 ஏப்ரல் 20, 2023 வியாழக்கிழமை
"தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்." ( சங்கீதம் 90 : 15 )
மனிதர்கள் எல்லோரும் எப்போதும் உயர்ந்த நிலையிலேயே இருந்துவிடுவதில்லை. சிலருடைய வாழ்க்கைப் பல ஆண்டுகளாக சிறுமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையாகவே இருக்கும். சமுதாயத்தாலும் சொந்தங்களாலும், அற்பமாக எண்ணப்படும் வாழ்க்கையாக இருக்கும். வேறு சிலர் பல ஆண்டுகளாக செல்வம் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வை வாழ்வார்கள். ஆனால் ஒரு தலைமுறை மாறி அடுத்த தலைமுறையில் எல்லாமே தலைகீழாகிவிடும். ஆனால் பொதுவாக மனிதர்கள் இதனை எண்ணுவதில்லை. பணம் வந்தவுடன் பெரும்பாலானோர்பிறரை அவமதிக்கின்றனர்.
ஒருமுறை ஒரு வயதான சகோதரி என்னிடம் தங்களது குடும்ப நிலைமைகுறித்து பேசும்போது, "பிரதர், முன்பு நாங்கள் நல்ல வசதியாக வாழ்ந்தோம். எங்க வீட்டுக்காரர் இறந்தபின்பு வருமானம் இல்லை. படித்த எனது இரண்டு மகன்களுக்கும் வேலை இல்லை, திருமண வயதில் மகள் வேறு இருக்கின்றாள்......எங்களை எங்கள் சொந்தக்காரர்கள் ஒதுக்கியே வைத்துள்ளனர். எங்களோடு பேசினால் ஒருவேளை பண உதவி கேட்டுவிடுவோமோ என்று எங்களை ஒதுக்குகின்றனர்". என்று கூறி வருத்தப்பட்டார்.
அவருக்காக ஜெபித்துவிட்டு, இன்றைய வசனத்தை அவர்களுக்குச்சொல்லி அவர்களையும் இந்த வசனத்தைச் சொல்லி ஜெபிக்கச் சொன்னேன். ஆம், இன்றைய வசனம் தேவ மனிதனாகிய மோசேயின் ஜெபமாகும். "தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்." என ஜெபிக்கின்றார் மோசே.
மோசேயின் வாழ்க்கை நாற்பது நாற்பது நாற்பதாக பகுக்கப்பட்ட வாழ்க்கை. முதல் நாற்பது ஆண்டுகள் பார்வோனின் மகளின் மகனாக அரண்மனை வாழ்க்கை, அடுத்த நாற்பது ஆண்டுகள் வானாந்தர வாழ்க்கை. ஆடுகளோடு வெய்யிலிலும் மழையிலும் வனாந்தரத்தில் ஆடுமேய்க்கும் வாழ்க்கை. இந்தத் துன்பங்களை மோசே ஜெபித்ததுபோல தேவன் மகிழ்ச்சியாக்கினார். ஆம், அவரது வாழ்வின் இறுதி 40 ஆண்டுகள் தேவனோடு நடக்கும் வாழ்க்கையினை தேவன் அவருக்குக் கொடுத்தார்.
அன்பானவர்களே, ஒருவேளை இதனை வாசிக்கும் நீங்களும் துன்பத்தில் இருக்கலாம். ஊராரால், சொந்தங்களால் சிறுமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழலாம். கலங்காதிருங்கள். மோசேயைப்போல உறுதியுடன் தேவனைப் பற்றிக்கொண்டு "தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்" என்று வேண்டுதல் செய்வதே சரியானது.
சிறுமைப்படுத்தப் பட்டவர்களின் கண்ணீரைப் பார்க்கின்றவர் நமது தேவன். நிச்சயமாக அற்புதம் செய்வார். நாம் சிறுமைப்படுத்தப்பட்ட நாட்களுக்குச் சமமாக மட்டுமல்ல, அதற்கும் அதிகமாகவே நம்மை மகிழச் செய்வார். பக்தனாகிய யோபுவின் சரித்திரம் இதனையே விளக்குகின்றது. தேவன்மேல் அசைக்க முடியாத விசுவாசத்தோடு இருந்த யோபுவின் அவமானங்களையும் கண்ணீரையும் தேவன் மாற்றவில்லையா?
"கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்" ( யோபு 42 : 12 ) என்று வேதம் கூறுகின்றது. அன்பானவர்களே, நண்பர்களால், ஊராரால் அற்பமாக எண்ணப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட யோபுவை தேவன் ஆசீர்வதித்ததுபோல உங்களையும் ஆசீர்வதிப்பார். கலங்காதிருங்கள்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment