Friday, March 24, 2023

செய்யும் செயலை மட்டுமல்ல நோக்கத்தையும் தேவன் பார்க்கின்றார்.

ஆதவன் 🌞 789🌻 மார்ச் 27, 2023 திங்கள்கிழமை










"வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ கர்த்தர்". (நீதிமொழிகள் 17:3)

நம்முடைய கர்த்தர் இருதயங்களை ஆராய்ந்து பார்க்கின்றவர். ஒருவர் செய்யும் செயலை மட்டும் பார்த்து அவர் தீர்ப்பிடுவதில்லை. செய்யப்படும் செயலின் நோக்கத்தையும் பார்க்கின்றார். அதன் அடிப்படையிலேயே அவர் மனிதர்களை நியாயம்தீர்க்கின்றார்.

எவ்வளவு நல்லச் செயலாக இருந்தாலும் நாம் அதனைச் செய்யும் நோக்கம் நேர்மையானதாக, கர்த்தருக்கு உகந்ததாக இருக்கவேண்டும். உதாரணமாக சமூக ஊடகங்களில் பதிவிடவேண்டும் எனும் ஒரே நோக்கத்துக்காகச் சிலர் ஏழைகளுக்கு உதவி செய்வார்கள். அவர்களது மெய்யான நோக்கம் ஏழைகளுக்கு உதவுவதல்ல; மாறாக, பலர் அதனைப் பார்க்கவேண்டும், பாராட்டவேண்டும் என்பதுதான். 

தங்க நகைகளும் கவரிங் நகைகளும் ஒன்றுபோலவே இருக்கும் ஆனால் அதன்மேல் சோதிக்கும் திராவகத்தை (Chemical) ஊற்றும்போது உண்மையைக் கண்டுகொள்ளலாம். விலை உயர்ந்த அனைத்துக்குமே போலிகள் உண்டு. இதுபோலவே போலி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. பார்வைக்கு ஒன்றுபோல இருந்தாலும் அவைகளைச் சோதித்து நாம் உண்மை நிலையினைக் கண்டுகொள்ளலாம்.

இதுபோலவே நாம் பார்க்கும்போது மனிதர்கள் எல்லோருமே நல்லவர்கள்போலத் தெரிவார்கள். அவர்களை நாம் அடையாளம் காண முடியாது. அவர்களிடம் ஏமாந்தபின்னரே அவர்களைப்பற்றி நமக்குத் தெரியும்.  ஆனால் தேவனை யாரும் ஏமாற்ற முடியாது. 

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உலகத்தில் வாழ்ந்தபோது அவர் தேவனுடைய தற்சொரூபமாய் இருந்தபடியால் தன்னைச் சுற்றி இருந்தவர்களைக் குறித்து அவர் நன்கு  அறிந்திருந்தார். "மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை." (யோவான் 2:25) என்று வாசிக்கின்றோம். 

ஆனால் இன்று மனிதர்கள் பலருக்கும் இந்தச் சத்தியம் தெரியாததால் அவர்கள் தேவனைத் தங்களைப்போன்ற ஒருவராக எண்ணி பொய்யும், ஏமாற்றும், பித்தலாட்டமும் செய்துகொண்டு ஆலய ஆராதனைகளிலும் ஆலயப் பணிகளிலும் எந்த மனச் சாட்சியின் உறுத்தலுமின்றி ஈடுபட்டுள்ளனர். 

அன்பானவர்களே, கர்த்தரை ஏமாற்ற முடியாது. நமது இருதயங்களை தேவன் அறிகிறார் எனும் அச்சம் நமக்கு எப்போதும் இருக்கவேண்டும். அந்த அச்சம் இருக்குமானால் மட்டுமே நாம் போலி முகங்களை அகற்றி நேர்மையுள்ளவர்களாக வாழ முடியும். வேதாகமத்தை வெறுமனே வாசிப்பதாலோ, ஜெபிப்பதாலோ, இறையியல் படிப்பதாலோ நாம் நேர்மையாளர்களாக மாற முடியாது. ஆம், கர்த்தருக்குப் பயப்படும் பயம் இருந்தால் மட்டுமே நாம் நல்ல ஒரு கிறிஸ்தவ வாழ்வு வாழ முடியும். "கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்." (நீதிமொழிகள் 14:27)

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: