Monday, March 27, 2023

ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்

ஆதவன் 🌞 791🌻 மார்ச் 29, 2023 புதன்கிழமை

































"அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும்." ( ரோமர் 15 : 1 )

ஆவிக்குரிய வாழ்வில் எல்லோருமே தேறினவர்கள் அல்ல. ஆவிக்குரிய வளர்ச்சி என்பதும் முடிவில்லாதது. இந்த உலகத்தில் நாம் வாழும் இறுதிநாள்வரை நமது ஆவிக்குரிய வளர்ச்சித் தொடருகின்றது. 

ஒருவருக்கு வாழ்வில்  கிடைத்திருக்கும் வாய்ப்புகள் போல எல்லோருக்கும் கிடைத்திருக்காது. எனவே, ஒருவர் ஆவிக்குரிய வாழ்வில் மற்றவரைவிட மேலான நிலையினையும் மேலான அனுபவங்களையும் பெற்றிருக்கலாம். இப்படி ஆவிக்குரிய வாழ்வில் பலமடைந்தவர் அதனை தமக்கே உரியது என்றும்,  தனது நன்மைக்கே என்றும் கருதிடாமல்  ஆவிக்குரிய வாழ்வில் பலவீனமாய் இருக்கும் சகோதரருக்கும் சகோதரிகளுக்கும் உதவிடவேண்டியது அவசியம். 

சுவிசேஷம் அறிவிப்பதன் ஒரு  நோக்கமும் இதுதான். நமக்குத் தெரிந்த ஆவிக்குரிய உண்மைகளை, ஆவிக்குரிய அனுபவங்களை பிறரோடு பகிர்ந்து கொள்ளவேண்டும். இப்படிப் பிறரோடு பகிர்ந்துகொள்ளும்போது அது ஆவிக்குரிய வாழ்வில் தளர்ந்து சோர்ந்திருக்கின்றவர்கள்  பலமடைந்திட உதவும்.  

இயேசு கிறிஸ்து தனது சீடர்களை ஊழியத்துக்கு அனுப்பும்போது அவர்களை இரண்டு இரண்டுபேராக அனுப்பினார். (மாற்கு 6:11) காரணம் ஒருவர் பலவீனத்தை மற்றவர் தங்கவேண்டும் என்பதற்காகவே.  "ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே." (பிரசங்கி 4:10) என வாசிக்கின்றோம்.

அப்போஸ்தலனாகிய பவுல் அடிகள் மாமிசம் உண்பதைக்குறித்தும் இதர காரியங்களைக்குறித்தும்  விளக்கும்போது இன்றைய தியானதுக்குரிய வசனத்தைக் கூறுகின்றார். அதாவது ஆவிக்குரிய வாழ்வில் மேலான அனுபவம் உள்ளவர் ஆவிக்குரிய வாழ்வில் இன்னும் வளர்ச்சியடையாத நிலையிலுள்ள ஒருவர் செய்யும் செயல் தவறு என உணர்ந்தால்  அதனையே குத்திக்காட்டி அவர்களைச் சோர்வடையச் செய்யாமல் அவர்களுடைய பலவீனங்களை பொறுத்துக்கொள்ளவேண்டும். அவர்களது செயலை மென்மையாக உணர்த்தி அவர்களை நல்வழிப்படுத்தவேண்டும்.

நான் எனது ஆவிக்குரிய வாழ்வின் ஆரம்ப காலத்தில் ஒருமுறை பிரபல ஊழியர் நடத்திய உபவாசக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். அவர் பிரபலமானவர் என்பதால் அவரைப் பார்க்கவேண்டும் எனும் எண்ணமும் அப்போது எனக்கு இருந்தது. ஆனால் தற்செயலாக அந்த உபவாசக்கூட்டத்தில் கலந்துகொண்டதால் அதற்குமுன் காலை உணவு உட்கொண்டிருந்தேன். அந்த ஊழியரோ, "சாப்பிட்டுக்கொண்டு இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தேவனை ஏமாற்றப் பார்க்கிறவர்களுக்கு வேதனைகள் உண்டு" என சபிக்கும் தோரணையில் பேசினார். சும்மா இருந்த நாயின் வாலைப்  பிடித்து இழுத்துக் கடிவாங்கியதுபோல அவரது சாப வார்த்தைகளை வாங்கினேன். மனம் வேதனைப்பட்டது.

கிறிஸ்துவை அறியாத பிறமதச்  சகோதரர்கள் தங்கள் பிரச்சனைகளுக்காக வேதனையோடு இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தால் அவர்கள் வேதனை இன்னும் அதிகமாகுமல்லவா?  எனவேதான்  இப்படி நமது அறிவற்ற செயல்களால் பலவீனமாய் இருக்கும்  பிறரை வேதனைப்படுத்தாமல், பலமுள்ளவர்களாகிய நாம், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்குபவர்களாக வாழவேண்டும் என்கிறார் பவுல் அடிகள். இத்தகைய தவறு நம்மிடம் இருந்தால் திருத்திக்கொள்வோம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: