குருடனை வழிதப்பச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்

ஆதவன் 🌞 785🌻 மார்ச் 23, 2023 வியாழக்கிழமை


"லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல."  கொலோசெயர் 2:8) 

இன்றைய சூழ்நிலையில் கிறிஸ்தவர்கள் மிகவும் எச்சரிக்கையாய் இருக்கவேண்டிய காரியத்தைக்குறித்து அப்போஸ்தலரான பவுல் இன்றைய வசனத்தில் குறிப்பிடுகின்றார். 

கிறிஸ்தவ ஞானம், கிறிஸ்துவின்மேல் பற்றுதல் எனும் போர்வையில்  தவறுதலாக  சில வேண்டாத விஷயங்களை உலக அறிவின்படி தந்திரமாய்ப் போதித்து  நம்மைக் கொள்ளையடிக்கும் மனிதர்களின் தந்திரங்களால் நாம் ஏமாந்துபோகாமல் எச்சரிக்கையாயிருக்கும்படி பவுல் அடிகள் அறிவுறுத்துகின்றார். 

இன்று சில பிரபல ஊழியர்கள் கிறிஸ்துவை அறிவிக்கின்றோம் என்று கூறி தேவையில்லாத காரியங்களையே அறிவித்து மக்களை மேலும் மேலும் குருடர்களாக்குகின்றனர். எங்களது  தங்கச் சாவி திட்டத்தில் சேர்ந்தால் ஆசீர்வாதம் என்றும், ஐந்து அப்பமும் இரண்டு மீனும்  திட்டத்துக்குப் பணம் அனுப்பினால் ஆசீர்வாதம் என்றும் பரிசுத்த ஆவியின் வரங்களை எங்களது  பயிற்சிகள் மூலம் பெறலாம் என்றும் கூறி பணம் சம்பாதிக்கின்றனர். 

தீர்க்கதரிசனம் என்பது ஆவியானவர் அருளும் வரங்களில் ஒன்று என்று வேதாகமத்தைப் படிக்கும் சிறு குழந்தையும் அறியும். ஆனால் எங்களது மூன்றுநாள் பயிற்சி முகாமில் கலந்துகொண்டால்  தீர்க்கதரிசனம் கூறலாம் என்று கூறி   மக்களை வஞ்சிக்கும் ஊழியர்களும் சமூக அந்தஸ்தோடு வாழ்கின்றனர்.   காரணம் அறிவற்ற, கிறிஸ்துவை அறியும் ஆர்வமற்ற கிறிஸ்தவர்கள்.   

இவைகளையே அப்போஸ்தலரான பவுல் அடிகள் இவை,  "மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல." என்கின்றார். அதாவது இவை உலக மனிதர்கள் கடைபிடிக்கும் பாரம்பரிய முறைமைகளையும் , உலக வழக்கங்களையும், வியாபாரிகள் கடைபிடிக்கும் தந்திரங்களைச் சார்ந்தவையே தவிர  கிறிஸ்துவைப் பற்றியதல்ல.  

அன்பானவர்களே, இத்தகைய வஞ்சனைகளுக்கு நாம் தப்பிட வேண்டுமானால் நாம் கிறிஸ்துவின் வசனத்தினால் நம்மை நிரப்ப வேண்டியது அவசியம். பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டியது அவசியம். ஆதவனில் இத்தகைய செய்திகளை நான் எழுதும்போது இந்த ஊழியர்களின் விசிறிகளுக்குப் பிடிப்பதில்லை. ஆனால் அதற்காக இந்தச் சத்தியங்களை எழுதாமல் இருக்கமுடியாது. காரணம் புதிய புதிய வியாபார தந்திரங்களோடு இவர்கள் இன்று களம் இறங்குகின்றார்கள். 

இத்தகைய ஊழியர்களை ஆதரிப்பவர்களுக்கு உண்மையில் வேதாகம அறிவு இல்லை என்று பொருள், கிறிஸ்துவிடம் மெய்யான அன்பில்லை என்று பொருள். சிலர், இவை பற்றி நாம் எதுவும் கூறக்கூடாது; தேவனே பார்த்துக்கொள்வார் என்கின்றனர். அன்பானவர்களே, வழியில் இருக்கும் ஆழமான படுகுழியை கண் தெரியாத குருடர்களுக்கு தெரிவிக்கவேண்டியது கண்பார்வையுள்ளோரின் கடமை.  

"குருடனை வழிதப்பச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்." ( உபாகமம் 27 : 18 ) நாம் அமைதியாக தவறுகளைப் பார்த்துக் கொண்டிருப்போமானால், தவறு செய்யும் ஊழியர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் அது பாவமே; சாபமே. 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்