Saturday, March 04, 2023

சாதாரண மதவாதியாக இருப்போமானால் அதுவே ஒரு வியாதியாகிவிடும்.

ஆதவன் 🌞 767🌻 மார்ச் 05,  2023 ஞாயிற்றுக்கிழமை 

"கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம் பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்." ( 1 பேதுரு 3 : 15 ) 

அப்போஸ்தலரான பேதுரு கிறிஸ்தவர்களுக்கு இருக்கவேண்டிய முக்கியமான ஒரு குணத்தை இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் கூறுகின்றார். 

அதாவது நம்மிடம் நமது கிறிஸ்தவ நம்பிக்கையினைக்குறித்து யாராவது விளக்கம் கேட்கும்போது, அல்லது கிறிஸ்துவைக்குறித்து தங்களது சந்தேகத்தைக் கேட்கும்போது அவர்களுக்கு ஏற்ற பதிலைக் கூறும்படி நாம் எப்போதும் ஆயத்தமாய் இருக்கவேண்டும். அப்படி நாம் பதில் கூறும்போது அமைதியோடும் வணக்கத்தோடும்; அதாவது நம்மிடம் கேட்பவர்களை மதித்து அவர்களுக்குப் பதில் கூறவேண்டும். 

இப்படி அவர்களுக்கு நாம் கூறும் பதில் அவர்களுக்கு உள்ளத்தில் செயல்புரியவேண்டுமானால் முதலாவது நாம் நமது இருதயத்தைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். நமது இருதயத்தில் கிறிஸ்து குடியிருக்கவேண்டும்.   அதனையே இன்றைய வசனத்தின் துவக்கமாக பேதுரு,   "கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம் பண்ணுங்கள்." என்று கூறுகின்றார். 

மத வெறியுடன் அல்லது நமது நம்பிக்கையே உயர்ந்தது எனும் பெருமையோடு அல்லது நமது வாழ்க்கையில் பரிசுத்தம் இல்லாமல் இருக்கும்போது நாம் பிறருக்கு கிறிஸ்துவை அறிவிக்க முடியாது. அத்தகைய சுவிசேஷ அறிவிப்பு அரசியல் கட்சித் தலைவர்களது பேச்சுபோலவே இருக்கும். 

இன்று சிலர் வேதாகமத்தை முழுவதுமாக இதனை நாட்களில் வாசித்துமுடித்துவிட்டேன் என்றும், இன்றுமுதல் ஆறாவது முறையாக வேதாகமத்தை வாசிக்கத் துவங்குகிறேன் என்றும்  முகநூலிலும் இதர சமூக வலைத்தளங்களிலும் பதிவிடுகின்றார்கள். இதனை நாம் புரிந்துகொள்ள முடியவில்லை. அதாவது இத்தனை முறை படித்தும் இவர்களுக்கு இந்தக் காரியத்தை தேவனுக்கு மட்டுமே தெரியும்படி வைத்துக்கொள்ளவேண்டுமென்றும், இது முகநூலில் பதிவிட்டு பெருமைப்பட வேண்டிய விஷயமல்ல எனும் அடிப்படைகூட புரியவில்லையே!!. பின் இவர்கள் எத்தனைமுறை வேதாகமதைப்  படித்துதான் என்ன பயன்.?

இதுபோல சிலர் தாங்கள் பிறருக்குச் செய்யும் தர்ம காரியங்களைப் புகைப்படமெடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர். உனது வலது கை செய்வது இடதுகைக்குத் தெரியாமலிருக்கட்டும் என்றல்லவா கிறிஸ்து கூறினார்?

அன்பானவர்களே, நமது ஜெபம், வேத வாசிப்பு இவை அனைத்துமே அந்தரங்கமாக இருக்கவேண்டியவை. அப்படி நாம் இருக்கும்போதே நமது இருதயம் பரிசுத்தமடையும். அப்படிப்  பரிசுத்தமடையும்போது மட்டுமே நாம் பிறருக்குச் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் கிறிஸ்துவைக்குறித்து விளக்கிக்கூற முடியும். இல்லாவிட்டால் நாம் சாதாரண ஒரு மதவாதியாகவே இருப்போம். அதுவே ஒரு வியாதியாகிவிடும்.

தேவனோடு நமது தனிப்பட்ட உறவை மேம்படுத்துவோம். அதற்கு நமது தனிப்பட்ட ஜெபம், வேத வாசிப்பு, தர்ம காரியங்கள், காணிக்கை கொடுத்தல் இவற்றை அந்தரங்கமாக நமக்கும் தேவனுக்கும் மட்டும் தெரியும்படி காத்துக்கொள்வோம். இப்படிக் காத்துக்கொண்டு நமது விசுவாசத்தைக்குறித்து விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் பதில்கூற நாம் எப்பொழுதும் ஆயத்தமாயிருக்க முயலுவோம். அப்போதுதான் நாம் கிறிஸ்துவை பலருக்கும் அறிவிக்கமுடியும்; பிறரும் அதனை  ஏற்றுக்கொள்வார்கள்.
 
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: