ஆதவன் 🌞 790🌻 மார்ச் 28, 2023 செவ்வாய்க்கிழமை
"நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்." ( ரோமர் 12 : 12 )
ஆவிக்குரிய வாழ்க்கை லெகுவான காரியமல்ல. இந்த உலக மக்கள் சிந்திப்பதுபோலவும் செயல்படுவதுபோலவும் ஆவிக்குரிய மக்கள் செயல்படமுடிவதில்லை. இதுவே மேலும் மேலும் சிலுவை சுமக்கும் அனுபவத்தை அவர்களுக்கு கொடுக்கின்றது. எனவேதான் இயேசு கிறிஸ்து, "உலகத்திலே உங்களுக்குத் துன்பங்கள் உண்டு, ஆயினும் திடன் கொள்ளுங்கள் " (யோவான் 16:33) என்று நமக்குக் கூறினார்.
இப்படி நாம் துன்பப்பட்டாலும் நமக்கு மறுமையில் மகிமையான ஒரு வாழ்வு உண்டு. அந்த மகிமைக்குமுன் நாம் படும் பாடுகள் பெரிதல்ல. இதனையே, "ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்." ( ரோமர் 8 : 18 ) எனக் குறிப்பிடுகின்றார் அப்போஸ்தலனாகிய பவுல் அடிகள்.
இந்த மகிமையான நித்திய ஜீவனே நமக்கு நம்பிக்கை. எனவே, உலகத்தில் துன்பங்கள் இருந்தாலும், இந்த மகிமையைக்குறித்த "நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்." ( ரோமர் 12 : 12 ) என்கின்றார்.
உபத்திரவங்களை பொறுமையாய்ச் சகிப்பதைக்குறித்து அப்போஸ்தலனாகிய யாக்கோபு, "சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்." ( யாக்கோபு 1 : 12 ) என்று எழுதுகின்றார்.
அன்பானவர்களே, எனவே நமது வாழ்வில் துன்பங்கள் பிரச்சனைகள் ஏற்படும்போது நாம் துவண்டுவிடாமல் கர்த்தரையே பற்றிக்கொள்வோம். அப்படி உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும்போது நமக்கு வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படும். அந்த நம்பிக்கை நமக்கு மன மகிழ்ச்சியைக் கொண்டுவரும்.
இவை அனைத்துக்குமே அடிப்படை நாம் கர்த்தரோடு ஜெபத்தில் ஐக்கியமாய் இருப்பதுதான். எனவேதான், "இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்." ( கொலோசெயர் 4 : 2 ) என்கின்றார் பவுல் அடிகள்.
இந்த உலகத்தின் பாடுகள் கொஞ்சநாளுக்குத்தான் நம்மை நெருக்கும். ஆனால் அதனை நாம் கர்த்தரோடு இணைந்து வாழும்போது பொறுமையாய்ச் சகித்து வாழ முடியும். எனவே, எந்தத் துன்பம் வாழ்வில் இருந்தாலும் பவுல் அடிகள் இன்றைய தியான வசனத்தில் கூறுவதுபோல, நம்பிக்கையிலே சந்தோஷமாகவும் உபத்திரவத்திலே பொறுமையாகவும் இருந்து ஜெபத்திலே உறுதியாய் நிலைத்திருப்போம். கர்த்தர்தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712
No comments:
Post a Comment