ஆதவன் 🌞 779🌻 மார்ச் 17, 2023 வெள்ளிக்கிழமை
இன்றைய தியானத்துக்குரிய வசனம் சற்று குழப்பமான வசனம்போலத் தெரிந்தாலும் பொது மொழிபெயர்ப்பு வேதாகமத்தில் பின்வருமாறு தெளிவாக உள்ளது. "ஆகவே, அறிவிப்பைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும்; கிறிஸ்துவைப்பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டால்தான் அதைக் கேட்க வாய்ப்புண்டு". அதாவது ஒருவருக்கு கிறிஸ்துவின்மேல் விசுவாசம் ஏற்படவேண்டுமானால் முதலில் கிறிஸ்துவைப்பற்றிய செய்தி அறிவிக்கப்படவேண்டியதும் அவர் அதனைக் கேட்கவேண்டியதும் அவசியம்.
கிறிஸ்துவைப்பற்றிய செய்தியை ஊழியர்கள் மட்டும்தான் அறிவிக்கவேண்டுமென்று அவசியமில்லை. கிறிஸ்துவின் அன்பை ருசித்த அனைவருக்குமே அதனைப் பிறருக்கு அறிவிக்கவேண்டிய கட்டாயம் உண்டு.
நான் கம்யூனிச சிந்தனைகொண்டு கடவுள் நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்தபோது என்னைவிட சுமார் 10 வயது இளையவரான ஒரு சகோதரன் எனக்குக் கிறிஸ்துவை அறிவித்தார். பாரம்பரிய கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து சுமார் முப்பத்தியாறு ஆண்டுகள் கடந்தபின்னர் - இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பன் ஆனபின்னரே நான் கிறிஸ்துவை அறிந்துகொண்டேன். அதுவரை ஆலயங்களில் பல்வேறு பிரசங்கங்களைக் கேட்டிருந்தாலும் நான் கிறிஸ்துவை அறியாதவனாகவே இருந்தேன்.
கிறிஸ்துவைப்பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டால்தான் அதைக் கேட்க வாய்ப்புண்டு; விசுவாசம் வளர வாய்ப்புண்டு என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. அப்படியானால் எனது முப்பத்தியாறு வயதுவரை எனக்குக் கிறிஸ்துவைப்பற்றிய செய்தி முறையாகச் சரியாக அறிவிக்கப்படவில்லை என்றுதானே பொருள்?
எனவே நாம் ஒவ்வொருவருமே கிறிஸ்துவை அறியாதவர்களுக்கும் மீட்பு அனுபவம் பெறாத கிறிஸ்தவர்களுக்கும் கிறிஸ்துவை முறையாக அறிவிக்கவேண்டியது அவசியம். அதாவது நாம் கூறும் செய்தியை பிறர் ஏற்றுக்கொள்ளவேண்டுமானால் நம் முதலில் கிறிஸ்துவுக்கேற்ற வாழ்க்கை வாழவேண்டும். அவரது வசனம் நமது வாழ்வில் நிலைகொண்டிருக்கவேண்டும். அப்போது மட்டுமே நாம் கூறும் கிறிஸ்துவின் செய்தி மற்றவர்களது விசுவாசத்தை வளர்க்க உதவும்.
இதனையே அப்போஸ்தலரான பவுல் தனது சீடன் தீமோத்தேயுவுக்குப் பின்வருமாறு எழுதுகின்றார்:- "உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்." ( 1 தீமோத்தேயு 4 : 16 ). ஆம், கிறிஸ்துவின் வசனத்தின்படி வாழ்ந்துகொண்டு நாம் கிறிஸ்துவை பிறருக்கு அறிவிக்கவேண்டும்.
அன்பானவர்களே, கிறிஸ்துவைப்பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டால்தான் அதைக் கேட்க வாய்ப்புண்டு. ஆனால், அப்படி அறிவிக்குமுன் நாமே நமது வாழ்க்கையினை கிறிஸ்துவுக்கேற்ற வாழ்க்கையாக மாற்றிக்கொள்வோம். அப்போது நம்மையும் நம் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்வோம்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712
No comments:
Post a Comment