கர்த்தருக்குப் பயப்படும் பயம்

ஆதவன் 🌞 784🌻 மார்ச் 22, 2023 புதன்கிழமை

"கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது." (நீதிமொழிகள் - 19:23)

இன்றைய தியானத்துக்குரிய வசனம், ஜெபம் செய்தல், காணிக்கைக் கொடுத்தல், உபவாசம் இருத்தல், ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்ளுதல் இவைகளை  ஜீவனுக்கேதுவானவை என்று கூறாமல்  கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது என்று கூறுகின்றது. கர்த்தருக்குப் பயப்படுதல் என்பது கர்த்தரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழும் ஒரு வாழ்வைக் குறிக்கின்றது. அப்படி ஒரு வாழும்போது மனத் திருப்தியும் நீண்ட வாழ்க்கையும் நமக்குக் கிடைக்கின்றது. இதனையே, "தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்;" (நீதிமொழிகள் 8 : 13 ) என்றுவேதம் கூறுகின்றது. 

நாம் பணிபுரியும் இடங்களில் அந்தந்த பணிகளுக்கென்று ஒருசில ஒழுங்குகளும் கட்டுப்பாடுகளும் இருக்கும். அவற்றை மதித்து , அவற்றுக்குப் பயந்து நாம் பணிசெய்யும்போதே அங்கு நாம் நிலைத்திருக்கமுடியும். இதுபோலவே நாம் கர்த்தருக்குப் பயந்து அவரது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழும்போது நமக்கு ஆபத்தின்றி நீண்ட ஆயுளும் கிடைக்கின்றது.  "எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்." (நீதிமொழிகள் 1:33) என்று நீதிமொழிகள் கூறுகின்றது.

மனிதர்கள் பொதுவாக தங்கள் வழிபாட்டு முயற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதுவே போதுமென்று வாழ்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை வழிபாடுகள் மற்றும் தினசரி கடமைக்காகச் செய்யும் ஜெபம், குறிப்பிட்டக் காலங்களில் அனுசரிக்கும் உபவாசம், பக்தி முயற்சிகள்  இவையே கர்த்தருக்கு உகந்தது என்று எண்ணி அவைகளைக் கடைபிடித்து நிம்மதியடைய முயலுகின்றனர். ஆனால் தேவன் நமது இருதயத்தைப் பார்க்கின்றார். எனவே கர்த்தருக்குப் பயந்து நமது இருதயத்தைக் காத்துக்கொள்ளவேண்டியது அவசியம். 

ஜெபம், காணிக்கை, உபவாசம் இதர வழிபாடுகளுக்குமுன் நமது இருதயம் சுத்தமாகவேண்டியது அவசியம். இதனையே ஏசாயா மூலம் தேவன் கூறுகின்றார், "இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வு நாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச்சகிக்கமாட்டேன். உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன்.
நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்.."  ( ஏசாயா 1 : 13- 15 )

அன்பானவர்களே, வழிபாடுகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை முதலில் வாழ்க்கை மாற்றத்துக்குக் கொடுப்போம். கர்த்தருக்குப் பயப்படும் மெய்யான பயம் நமக்குள் இருக்கட்டும். "தீமையை விட்டு விலகி, நன்மை செய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்." ( சங்கீதம் 37 : 27 ) என்கின்றது வேதம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்