Tuesday, March 14, 2023

பின்மாறிடாமல் நமது உரிமைப்பேறை காத்துக்கொள்வோம்.

ஆதவன் 🌞 777🌻 மார்ச் 15,  2023 புதன்கிழமை 

"சகோதரரே, நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம்." ( கலாத்தியர் 4 : 28 )

இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட மக்களைப்பார்த்து  வாக்குத்தத்தத்தின் பிள்ளைகள் என்று குறிப்பிடுகின்றார். 

கர்த்தரால் மீட்கப்பட்ட மக்கள் கிறிஸ்துவைப்போல வாக்குறுதியின் பிள்ளைகள். வேதத்தின் வாக்குத்தத்தங்கள் அவர்களுக்கே உரிமையானவை. மீட்பு அனுபவம் பெறாதவர்களை அடிமையின் பிள்ளைகள். அவர்கள் இன்னும் நியாயப்பிரமாண கட்டளைகளுக்கே அடிமைகளாகவும் ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு உட்படாதவர்களுமாவார்கள்.. 

"ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது; ஒருவன் அடிமையானவளிடத்தில் பிறந்தவன் ஒருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் (உரிமைப் பெண்ணிடம்) பிறந்தவன்." ( கலாத்தியர் 4 : 22 ) 

தேவன் அளித்த வாக்குத்தத்தத்தின்படி பிறந்தவனே ஈசாக்கு. ஆனால் ஆகார் எனும் ஆபிரகாமின் அடிமைப்பெண்ணிடம் பிறந்தவன் இஸ்மவேல் (இஸ்மாயில்). வாக்குத்தத்தத்தின்படி பிறந்தவனே ஆசீர்வாதத்தைப் பெறமுடியும்.  இது குறித்து ஆதியாகமத்தில் ஆபிரகாமின் மனைவியாகிய சாராள் கூறுவது கவனிக்கத்தக்கது. அவள் ஆபிரகாமை நோக்கி: "இந்த அடிமைப்பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும்; இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்திரவாளியாயிருப்பதில்லை என்றாள்." ( ஆதியாகமம் 21 : 10 )

ஆபிரகாமுக்கு இது வருத்தமாக் இருந்தது. ஆனால் தேவன் சாராள் சொல்லியதையே அங்கீகரித்தார். 

"அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்." ( ஆதியாகமம் 21 : 12 ) என்றார். ஆம், அடிமையின் மகன் மேலான ஆசீர்வாதத்தினைப் பெறத்  தகுதியற்றவன் ஆகிவிட்டான். 

அன்பானவர்களே, நாம் பாரம்பரிய சடங்கு சம்பிரதாயங்கள்,  வழிபாட்டு முறைமைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டிருப்போமானால் நாம் அடிமையான ஆகாரின் பிள்ளையைப்போலவே இருப்போம். கிறிஸ்தவ பெற்றோருக்கு பிள்ளைகளாகப் பிறந்துவிட்டதால் மட்டுமே நாம் அவருக்கு உரியவர்கள் ஆக முடியாது. அவரது சந்ததி ஆகிடமுடியாது. 

கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்படும்போது மட்டுமே அவரோடு நெருங்கிய உறவுகொண்டு வாக்குத்தத்தத்தின்  பிள்ளைகளாகின்றோம். அதாவது, அவரோடு மகன், மகள் உறவைப் பெறுகின்றோம். "அதெப்படியென்றால், மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள்." ( ரோமர் 9 : 8 ) என்கின்றார் பவுல்  அடிகள். 

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவால் மீட்கப்பட்ட நாமே உரிமைப்பெண்ணின் பிள்ளைகள். மகன், மகளுக்குள்ள உரிமை நமக்கே உண்டு. "இப்படியிருக்க, சகோதரரே, நாம் அடிமையானவளுக்குப் பிள்ளைகளாயிராமல், சுயாதீனமுள்ளவளுக்கே (உரிமைப் பெண்ணின்)  பிள்ளைகளாயிருக்கிறோம்." ( கலாத்தியர் 4 : 31 ) கிறிஸ்துவைவிட்டு பின்மாறிடாமல் நமது உரிமைப்பேறை காத்துக்கொள்வோம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: