Tuesday, March 28, 2023

இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் வந்தவர் கடவுளா?

ஆதவன் 🌞 792🌻 மார்ச் 30, 2023 வியாழக்கிழமை


















"இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்." ( எபிரெயர் 13 : 8 )

இன்று கிறிஸ்தவர்களாகிய பலரும்கூட இயேசு கிறிஸ்து சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பூமியில் பிறந்து, வாழ்ந்து, பாடுபட்டு, மரித்து, உயிர்த ஒருவர் என்றே எண்ணிக்கொண்டிருக்கின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் வந்தவர் எப்படிக் கடவுளாக இருக்க முடியும்? இந்த உலகம் தோன்றி கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆயிற்றே? கிறிஸ்துவை விமரிசிக்கும் அல்லது கடவுளாக ஏற்றுக்கொள்ளத் தயங்கும் பலரும் இதனையே கேட்கின்றனர். கடவுள் என்றால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்பு அவர் எங்கிருந்தார்? என்ன செய்தார்? 

அன்பானவர்களே, அவர் உலகம் தோன்றுவதற்கு முன்பே இருக்கிறார். இதனை இயேசு கிறிஸ்துவே பின்வருமாறு கூறினார். "பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்கவிரும்புகிறேன்." ( யோவான் 17 : 24 ) 

மட்டுமல்ல, இந்த உலகமே அவரால்தான் படைக்கப்பட்டது. "சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை." ( யோவான் 1 : 3 ) உலகப் படைப்பில் அவர் பிதாவோடு இணைந்திருந்தார். "பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்." ( 1 கொரிந்தியர் 8 : 6 )

ஆனால் இந்த உலகம் அவரை அறியவில்லை.  "அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை." (யோவான் 1:10)

பிதா இயேசு கிறிஸ்துவைக்கொண்டு உலகத்தைப் படைத்தார். இதனையே ரகசியம் என்று பவுல் அடிகள் கூறுகின்றார். "இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று....."( எபேசியர் 3 : 11 )

இந்தக் கிறிஸ்துவே பழைய ஏற்பாட்டில் மோசேயோடு இருந்து இஸ்ரவேல் மக்களை வழி நடத்தினார். "எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே." ( 1 கொரிந்தியர் 10 : 4 ) என்று வசிக்கிறோம். "ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் " (யோவான் 8 : 58 ) என்று இயேசு கிறிஸ்து கூறினாரே?

ஆம், இதனையே இன்றைய தியானத்துக்குரிய வசனம் கூறுகின்றது, "இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்." என்று. இந்த வசனத்தை இதன் ஆழமான அர்த்தம் புரியாமல் பலரும் கூறிக்கொண்டிருக்கின்றோம். நேற்று, அதாவது உலகம் படைக்கப்படுமுன், பழைய ஏற்பாட்டுக்காலத்தில்  எப்படி இருந்தாரோ அதேபோல இயேசு கிறிஸ்து இன்றும் இருக்கின்றார், நாளையும், அதாவது நமது மறுவுலக வாழ்விலும் மாறாதவராக இருப்பார்.

இதனை நாம் தியானித்து உணரும்போதே கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையையும், இத்தனைப் பெரிய தேவன் தனையே தாழ்த்தி அடிமையின் ரூபமெடுத்து தான் உண்டாக்கின மனிதர்கள் கையால் மரிக்கும்படி தன்னையே ஒப்புக்கொடுத்த அன்பின் மேன்மையினையும் உணர முடியும். 

இத்தகைய சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார், நமக்குள் இருக்கின்றார் என்பதுதான் அதிசயம். எனவே அன்பானவர்களே, நாம் கவலைகொண்டு தனித்து புலம்பவேண்டிய அவசியமில்லை. திட நம்பிக்கையோடு நமது கிறிஸ்தவ வாழ்வைத் தொடருவோம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: