ஆதவன் 🌞 768🌻 மார்ச் 06, 2023 திங்கள்கிழமை
"குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்." ( 1 யோவான் 5 : 12 )
தேவன் மனிதரை எப்படிப் பார்க்கின்றார் என்பதைக்குறித்து இன்றைய வசனம் கூறுகின்றது. நாம் நம்மை உயிருள்ளவர்கள் என எண்ணிக்கொண்டாலும் தேவனது பார்வையில் மரித்தவர்களாக இருக்கக்கூடும். அதாவது கிறிஸ்து இல்லாத வாழ்க்கை செத்த வாழ்க்கை என்று இன்றைய வசனம் கூறுகின்றது.
ஒருவர் பெயரளவில் கிறிஸ்தவராக இருக்கலாம். கிறிஸ்தவ ஆலய காரியங்களிலும், பல்வேறு ஊழியங்களிலும் ஈடுபட்டிருக்கலாம். நற்செய்தி அறிவிக்கிறேன் என்று கூறிக்கொண்டு வேதாகமத்தைச் சுமந்துகொண்டு ஊர் ஊராகச் சுற்றி வரலாம், கன்வென்சன் கூட்டங்களில் அழகாகப் பிரசங்கிக்கலாம்; ஆனால் அவரிடம் கிறிஸ்துவின் குணங்கள் இல்லையானால் அவர் கிறிஸ்து இல்லாதவர். ஜீவனில்லாதவர்.
அதாவது எந்தச் செயலையும் தேவனுக்கு ஏற்றபடிச் செய்யவேண்டுமானால், திராட்சைச் செடியில் இணைக்கப் பட்டக் கொடிபோல கிறிஸ்துவோடு நாம் இணைக்கப்படவேண்டியது அவசியம். இப்படி இணையாமலும் சில பல காரியங்கள் செய்யலாம். அப்படிச் செய்வது சுய விளம்பரத்துக்கும் லாபத்துக்குமாக இருக்குமேயல்லாமல் கிறிஸ்துவுக்கு ஏற்புடையதாகாது. எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது." ( யோவான் 15 : 5 )
"நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்" என்று இயேசு கிறிஸ்து மேற்படி வசனத்தில் கூறுகின்றார். அதாவது, மரமானது கனி கொடுக்கவேண்டுமானால் அதற்கு உயிர் இருக்கவேண்டும். அந்த உயிர் கிறிஸ்துவில் இருக்கின்றது. அப்படி உயிருள்ளவனே கனி கொடுப்பான்; கனிகொடுப்பவனே கிறிஸ்தவன்; கிறிஸ்துவின் சீடன்.
இந்த உலக வாழ்க்கைக்குப்பின் முடிவில்லா வாழ்வு எனும் நித்திய ஜீவன் ஓன்று உள்ளது. கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டு அவரோடு இணைக்கப்பட்டு வாழும்போது மட்டுமே நமக்கு நித்திய ஜீவன் உண்டு. ஆம், "நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்." ( 1 யோவான் 2 : 25 )
அப்படிக் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்ட வாழ்வு வாழ்பவன் இந்த உலகில் மரித்தாலும், அல்லது மரிப்பதற்கொத்த தாழ்ந்த வாழ்வு வாழ்ந்தாலும் தேவனுக்குள் பிழைத்திருப்பான். "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்" ( யோவான் 11 : 25 ) என்று கிறிஸ்து கூறியிருக்கின்றாரே?
அன்பானவர்களே, ஆலயங்களுக்குச் செல்வது, ஊழியங்கள் செய்வது நல்லதுதான்; ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக நாம் கிறிஸ்துவுடன் இணைக்கப்படவேண்டியது அவசியம். "குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்." என்று வசனம்கூறுவதற்கேற்ப குமாரனாகிய கிறிஸ்து நமக்கு உடையவராகவேண்டும். அப்படி ஆனால் மட்டுமே நமது செயல்களுக்கு மதிப்பும் அங்கீகாரமும் தேவனிடம் உண்டு.
அவரோடு ஒப்புரவாகி புதிய மனிதனாகும்போது மட்டுமே நாம் குமாரனாகிய அவரோடு இணைக்கப்படுகின்றோம்; அப்போது மட்டுமே நாம் ஜீவனுள்ளவர்கள் ஆக மாறி நித்திய ஜீவனுக்குத் தகுதியுள்ளவர்கள் ஆக முடியும். நமது பாவங்களை அறிக்கையிட்டு கிறிஸ்துவோடு ஒப்புரவாகி அவரோடு இணைக்கப்பட முயலுவோம். அப்படிக் குமாரனாகிய கிறிஸ்துவோடு இணைக்கப்படும்போது மட்டுமே நாம் ஜீவனுள்ளவர்களாகின்றோம்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712
No comments:
Post a Comment