Saturday, March 11, 2023

கடவுளை அறிதலும் கடவுளைப்பற்றி அறிதலும்

ஆதவன் 🌞 774🌻 மார்ச் 12,  2023 ஞாயிற்றுக்கிழமை 


"ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா?" ( 1 கொரிந்தியர் 1 : 20 )

தேவனைப் பற்றி  அறிதல்; தேவனை அறிதல்  இவை இரண்டும் வெவ்வேறானவை என்று ஏற்கெனவே பல முறை தினசரி தியானங்களில் விளக்கியுளேன். தேவனைப்பற்றி நாம் வேதாகத்தை வாசிப்பதன் மூலமும், மறைக்கல்வி வகுப்பகள்மூலமும் அல்லது பிரசங்கங்கள் கேட்பதன்மூலமும் அறிந்துகொள்ளலாம். ஆனால் தேவனை இப்படிப் படித்து  அறிய முடியாது. தேவனை அறிதல் என்பது வேறான மேலான அனுபவம். அது கடவுளோடு தனிப்பட்ட உறவில் வளருவது. அதனை  மத வழிபாடுகள்மூலமும் மதச் சடங்குகளைக் கடைபிடிப்பதன்மூலமும் பெறமுடியாது.  

கண் தெரியாத முருடர்களுக்கும்  பல்வேறு நிறங்களின் பெயர்கள் தெரியும் ஆனால் அந்த நிறங்கள் எப்படி இருக்கும் எனும் நிறங்களின் மகிமை அவர்களுக்குத்  தெரியாது. கண்பார்வை உள்ளவர்களே நிறங்களைப் பகுத்து அறிய முடியும். இதுபோலவே இறையியல் கல்விகளோ, வேத பண்டிதர்கள் ஆவதோ   தர்க்க சாஸ்திரங்களோ கடவுளை அறிய உதவாது. ஆனால் மனிதர்கள் இந்த முறையில் கடவுளை அறிய முயன்று பைத்தியமாகியுள்ளனர் என்கின்றார் பவுல் அடிகள். எனவேதான், "ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா?" ( 1 கொரிந்தியர் 1 : 20 ) என்கின்றார்.

தேவனை அறிதல் என்பது மேலான ஆவிக்குரிய அனுபவம். அது தேவனால் வழிநடத்தப்படும் அனுபவம். தகப்பன் மகன்/மகள் உறவில் தேவனது உடனிருப்பை அறியும் அனுபவம். 

ஆனால் இன்று இதனை விளக்கிக் கூறி இரட்சிப்பு அனுபவத்தை மக்களுக்கு எடுத்துக் கூறுபவர்களை பைத்தியக்காரர்கள் என்று எண்ணுகின்றனர்  உலகத்து ஞானிகளும், இறையியல் கல்லூரி படிப்பாளிகளும். ஆனால் இத்தகைய ஆவிக்குரிய பிரசங்கங்கள் மூலமே விசுவாசிகளை தேவன் இரட்சிக்கின்றார். 

"எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று." ( 1 கொரிந்தியர் 1 : 21 )

அன்பானவர்களே, வேதாகமக் கல்லூரி படிப்புகள் தேவனைப்பற்றி மட்டுமே அறிய உதவுகின்றன; ஆனால் தேவனோடு நாம் வளர்த்துக்கொள்ளும் உறவுகளே தேவனை அறிய உதவும். அதுவே நாம் இரட்சிப்படைந்திட வழிகாட்டும். 

வேதாகமத்தை ஆவியானவரின் துணையோடு வாசித்து தியானிக்கும்போது மட்டுமே நாம் தேவனை அறியும் அறிவில் வளரமுடியும். இறையியல் கல்லூரி படிப்புபடித்த  மேதைகளது பிரசங்கங்களைக் கேட்பதைவிட ஆவிக்குரிய அனுபவம் பெற்ற தேவ மனிதர்களது பிரசங்கங்களைக் கேட்கும்போது  மட்டுமே தேவனைப்பற்றி அதிகம் அறிய முடியும். 

உலக ஞானி எங்கே? உலக அறிவுபெற்ற வேதபாரகன் எங்கே? தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா?. உலக ஞானத்தையல்ல, ஆவிக்குரிய ஞானத்தையே விரும்புவோம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: