Monday, March 06, 2023

ஆவியானவரின் வழிநடத்துதல்

ஆதவன் 🌞 770🌻 மார்ச் 08,  2023 புதன்கிழமை 

"நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கைப்பண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள்." ( ஆகாய் 2 : 5 )

பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டுக்கு நிழலாட்டமாயிருக்கிறது. அன்று எகிப்திலிருந்து கானானை நோக்கி இஸ்ரவேலர் புறப்பட்டபோது  தேவன் அக்கினி ஸ்தம்பத்திலும் மேக ஸ்தம்பத்திலியுமிருந்து அவர்களை வழிநடத்தினார். இஸ்ரவேல் மக்கள் தனது வழிநடத்துதலை விட்டுத் திரும்பி மீண்டும் எகிப்துக்குச் சென்று பழையபடி அடிமையாகாமலிருக்கவேண்டும் என்று கருதி  எகிப்துக்குச் செல்லவேண்டாம் என்று பலமுறை தேவன் கட்டளையிட்டார். இன்று எகிப்து என்பது நாம் கிறிஸ்துவுடன் ஒப்புரவாகுவதற்கு முன்வாழ்ந்த  பாவ வாழ்கையினைக் குறிக்கின்றது.  அந்த எகிப்தைவிட்டு  வெளி வந்தால்தான் ஆவியானவரின் வழிநடத்துதல் தொடரும். 

இன்று கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டு நாம் பரம கானானை நோக்கிப் பயணிக்கின்றோம். பழைய பாவ வாழ்க்கையிலிருந்து விடுபட்டு வாழும் நமக்குத் துணையாகப் பரிசுத்த ஆவியானவர் இருக்கின்றார். ஆம், பழைய எகிப்து வாழ்க்கையிலிருந்து விடுபட்டு பரம கானானை நோக்கிப் பயணிக்கும் நம்முடன் கிறிஸ்து உடன்படிக்கை  பண்ணின வார்த்தையின்படியே, ஆவியானவரும்  நம் நடுவில் தொடர்ந்து நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள் என்று இன்றைய தியான வசனம் நம்மைத் திடப்படுத்துகின்றது. எனவே நாம் பழைய எகிப்து எனும் பாவ வாழ்கைக்குச் சென்றுவிடக்கூடாது. 

நம்மைச் சரியான வழியில்  நடத்திடப்  பரிசுத்த ஆவியானவரை இயேசு கிறிஸ்து வாக்களித்து இன்று அளித்துள்ளார். "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார். " ( யோவான் 16 : 13 ) என்று கூறினாரே?

இன்று பரிசுத்தமாய் வாழ முடியவில்லை என எண்ணம் உங்களுக்குள் ஏற்படுகின்றதா? அப்படியானால் நிச்சயமாக ஆவியானவர் அதற்கு உதவுவார். ஆம், "அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்." ( யோவான் 16 : 8 ) என்று இயேசு கிறிஸ்துக் கூறியுள்ளார். 

மேலும், "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்."  ( யோவான் 16 : 13 ) என்றும் கூறியுள்ளார். 

எனவே அன்பானவர்களே, நம்மால் பாவத்தை மேற்கொண்டு மேலான ஆவிக்குரிய வாழ்வு வாழ முடியும். அதற்கு நாம் அன்றாட ஆலய வழிபாடுகளுக்கும் மேலாக தனிப்பட்ட முறையில் கிறிஸ்துவோடு நமது உறவை வளர்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். அப்போது, "நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கைப்பண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்." என்றபடி ஆவியானவர் நம்முடன் இருப்பார். 

"இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்." ( மத்தேயு 28 : 20 ) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: