பாக்கியமுள்ளவர்களாகவே நமது ஆவிக்குரிய வாழ்வைத் தொடர்வோம்.

ஆதவன் 🌞 771🌻 மார்ச் 09,  2023 வியாழக்கிழமை 

"கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது."( சங்கீதம் 33 : 12 )

இன்றைய வசனம் இரண்டு வித மக்களை பாக்கியமுள்ளவர்களாகக் குறிப்பிடுகின்றது. . 

1. கர்த்தரைத் தங்களுக்குச் சொந்தமாகத் தெரிந்துகொண்டவர்கள் 

2. கர்த்தர் தனக்குச் சொந்தமாகத் தெரிந்துகொண்டவர்கள்.

கர்த்தரைத் தங்களுக்குச் சொந்தமாகத் தெரிந்துகொண்டவர்கள்  என்பது வெறும் பெயரளவில் அவரை வழிபடுபவர்களை அல்ல; மாறாக, கர்த்தரைத்  தனது  சொந்த தாயைப்போலும் தகப்பனைப் போலும் சொந்த சகோதரனாகவும் சகோதரியாகவும்  தெரிந்துகொண்டு அத்தகைய உறவில் கர்த்தரோடு வாழ்பவர்கள். அப்படி வாழ்பவர்களை கர்த்தரும் தனக்குச் சொந்தமாக அங்கீகரிப்பார்.  

கர்த்தர் தெரிந்துகொள்வது என்பது ஒரு அரசாங்கம் ஒருவரை வெளிநாட்டிற்கு தனது தூதுவராகத் (Ambassador) தேர்வு செய்கின்றது போல தெரிந்துகொள்வது.  இப்படி தனது தூதுவரை தேர்வு செய்து பிற நாடுளில் பதவியில் அமர்த்துகின்றது உலக அரசாங்கம். இப்படித் தேர்வு செய்யப்படும் நபருக்கு அந்த நாட்டில் உள்ள அனைத்துச் செலவுகளையும் அரசாங்கமே செய்யும். பல சலுகைகளும் வழங்கும். ஆனால் அந்த நபர் அரசாங்கத்துக்கு விசுவாசமுள்ளவராக, உண்மையுள்ளவராக இருக்கவேண்டியது அவசியம். இல்லையானால் சட்டப்படி அவர் தண்டிக்கப்படுவர்.

இதுபோலவே தனது பிரதிநிதிகளாகத் தேவன் சில மக்களைத் தெரிந்து கொள்கின்றார். அப்போஸ்தலரான பவுலைத் தேவன் இப்படி ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகத் தெரிந்துகொண்டார். இஸ்ரவேல் மக்களையும் தேவன் இப்படியே தெரிந்துகொண்டார். உலகினில் பல்வேறு மக்கள் இனங்கள் இருந்தாலும் தேவன் இஸ்ரவேல் மக்களைத் தனது தூதுவர்களாகக் குறிப்பாகத் தேர்வு செய்தார். அது உண்மையிலேயே யூதர்களுக்கு ஒரு மேன்மையான காரியம்தான். அப்போஸ்தலரான பவுல் இதுபற்றி கூறும்போது, "இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன? அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே." ( ரோமர் 3 : 2 ) என்கின்றார்.

அன்பானவர்களே, இன்றைய உலகினில் இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம்கொண்டு தேவனைத் தெரிந்துகொண்டவர்களையும்  தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் யூதர்கள் என்று வேதம் குறிப்பிடுகின்றது (ரோமர் -2:28,29). ஆம், நாம்தான் ஆவிக்குரிய யூதர்கள். எனவே நாம் தான் பாக்கியமுள்ளவர்கள்.

அப்போஸ்தலரான பேதுரு, "நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்." ( 1 பேதுரு 2 : 9 ) என்கின்றார். 

இப்படி நாம் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாக இருந்தாலும், "அதிகம் கொடுக்கப்பட்டவனிடம் அதிகம் கேட்கப்படும்" என்று இயேசு கிறிஸ்து கூறியதையும்  நாம் மறந்துவிடக்கூடாது. தெரிந்துகொள்ளப்பட்ட யூதர்கள் தேவனது வார்தைகளைப் பெற்றிருந்தாலும் அவர்கள் தேவனுக்கு விரோதமான பாவம் செய்தபோது தேவன் அவர்களைக் கடுமையாகத் தண்டித்தார். பிற ராஜாக்களிடம் அடிமைகளாக ஒப்புக்கொடுத்தார். இதுவே இன்றைய ஆவிக்குரிய யூதர்களாகிய நமக்கும் பொருந்தும்.

எனவே தேவன் நம்மைத் தெரிந்துகொண்டாலும் நாம் தேவனைத் தெரிந்துகொண்டாலும் அவருக்கேற்றபடித் தொடர்ந்து வாழவேண்டும். விலையேறப்பெற்ற இரட்சிப்பை நமக்குத் தந்து நம்மை  அலங்கரித்த தேவன் அதனை நாம் காத்துக்கொள்ளத் தவறினால் கடுமையாக நம்மைத் தண்டிப்பார் என்பதனையும் மறந்துவிடக் கூடாது. எனவே நாம் மற்றவர்களைவிட அதிக கவனமுள்ளவர்களாக இருக்கவேண்டும். பெற்றுக்கொண்ட இரட்சிப்பைக் கவனமுடன் காத்துக்கொள்வோம். தேவன் நமக்கு தகப்பனாக இருந்தாலும் அவர் பட்சிக்கிற அக்கினியாகவும் இருக்கின்றார் என்ற உண்மையினை நாம் மறந்துவிடாமல் கவனமுடன் பாக்கியமுள்ளவர்களாகவே நமது ஆவிக்குரிய வாழ்வைத் தொடர்வோம்.


தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்