இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Friday, March 10, 2023

கொடுக்கப்பட்ட வேலைகளை உண்மையோடும் உத்தமத்தோடும் செய்வோம்.

ஆதவன் 🌞 773🌻 மார்ச் 11,  2023 சனிக்கிழமை 

"நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்." ( பிலிப்பியர் 3 : 12 )

நாம் ஒவ்வொருவரைப் பற்றியும் தேவனுக்கு ஒரு நோக்கமுண்டு. நம்மை அவர் இரட்சித்ததற்கும் ஒரு நோக்கமுண்டு. கிறிஸ்து எல்லோருக்கும் தன்னை வெளிப்படுத்தவில்லை. குறிப்பிட்டச் சிலருக்கே வெளிப்படுத்தினார். அப்படி கிறிஸ்து எவர்களுக்குத் தன்னை வெளிப்படுத்தி அழைத்தாரோ அவர்கள் அந்தப்பணியைத் தொய்வில்லாமல் செய்யவேண்டியது அவசியம். 

கிறிஸ்துவோடு நாம் தொடர்புகொண்டு வாழும்போது கிறிஸ்து நம்மைகுறித்த நோக்கத்தை நமக்கு வெளிப்படுத்துவார். கிறிஸ்துவின் சுவிசேஷப்பணியினைச் செய்ய நாம் அழைக்கப்பட்டிருந்தோமானால் அந்தப் பணியினை நாம் மனப்பூர்வமாகச் செய்யவேண்டும். "கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ" என  அப்போஸ்தலரான பவுல் அடிகள் தேவன் தன்னை ஊழியத்துக்கு அழைத்ததைக் கூறுகின்றார். ஆம், கிறிஸ்து ஒவ்வொருவரையும் இப்படியே ஒவ்வொரு பணியினைச்  செய்யுமாறு பிடிக்கின்றார்.  பவுலடிகளைப் பிடித்தபோது  தேவன் கூறினார்:-    

"அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும், பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்."( அப்போஸ்தலருடைய நடபடிகள் 26 : 18 )

அதாவது மெய்யான ஒளியான  தேவனை அறியாமல் இருளில் வாழும் மக்களை அந்த ஒளியினிடத்திற்குக் கொண்டுவரவும், சாத்தானின் அதிகாரத்தைவிட்டு மக்களைத்  தேவனிடம் திரும்புவதற்கும், குருடாகிப்போன மக்களது மனக்கண்களைத் திறப்பதற்க்கும் தேவன் பவுலைத் தெரிந்துகொண்டார்.  இது பவுல் அடிகளுக்கு மட்டுமல்ல, தேவனது வேலைக்காக அழைக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்ட பணி இதுதான்.  இதனை நாம் சிறப்பாகச் செய்யவேண்டும். 

இந்தப் பணியை நான் செய்து முடித்துவிட்டேன் , அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன் என்கின்றார் பவுல் அடிகள்.

அன்பானவர்களே, தேவன் நம்மை எந்தப் பணிக்கு அழைத்திருந்தாலும் அதனை நாம் சிறப்பாகச் செய்யவேண்டும். பவுல் அடிகள் கூறுவதுபோல நமக்கு நாம் செய்த பணியில் நிறைவு ஏற்படக்கூடாது. இன்னும்.....இன்னும்.....இன்னும்.....என எண்ணவேண்டும். அப்படி எண்ணி நாம் செயல்படும்போது நமது பணி சிறப்பாக அமையும்.  

இதனையே, "நான் அடைந்தாயிற்று என எண்ணாமல் அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்." என்கின்றார் பவுல் அடிகள். தேவனால் நமக்குக் கொடுக்கப்பட்ட எந்தப் பணியாக இருந்தாலும் இதே மன நிலையுடன் தொடர்வோம். நல்ல உலக வேலைகளைத் தேவன் தந்திருந்தால் அந்த வேலையினை உண்மையோடும் உத்தமத்தோடும் செய்வோம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: