Saturday, March 18, 2023

தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்

ஆதவன் 🌞 782🌻 மார்ச் 20,  2023 திங்கள்கிழமை


"நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்." ( 1 யோவான்  5 : 14 )

நம்மில்  பலரும் நீண்ட விண்ணப்பப் பட்டியலுடன் ஆலயங்களில் வேண்டுதல் செய்கின்றோம்.  பொதுவாக இந்த விண்ணப்பங்களில் தொண்ணூறு நூறு சதவிகிதமும் நமது உலக ஆசைகளை நிறைவேற்றிட வேண்டியே இருக்கின்றன. இயேசுவிடம் கேட்டால் எல்லாம் கிடைக்கும் என்று பலரும் பிரசங்கிக்கின்றனர்; மக்களும் அப்படியே நம்புகின்றனர்.  ஆனால் இது வேத அடிப்படையில் சரியானதுதானா என்று நாம் எண்ணுவதில்லை. 

எந்தத் தகப்பனும் தாயும் தனது பிள்ளைகள் கேட்பதையெல்லாம் உடனேயே  கொடுப்பதில்லை. நமது பிள்ளைக்கு இப்போதைக்கு இது தேவைதானா ? இது நமது பிள்ளைக்கு ஏற்றதாக இருக்குமா? என்பதையெல்லாம் எண்ணிப்பார்த்து, தகுந்ததானால் மட்டுமே அதனைக் கொடுக்கின்றனர்.  அப்படி இருக்கும்போது நமது வானகத்  தந்தைக்கு எது நமக்கு எப்போது தேவை என்பது தெரியாதா? பின் எப்படி கேட்பதையெல்லாம் கொடுப்பார்?   

நாம் உலக காணோட்டத்துடனேயே வேதாகமத்தைப் படிக்கின்றோம். "கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர்கள்"  என்று இயேசு கிறிஸ்து கூறியதை நம்பி இந்த வார்த்தைகளைச் சொல்லி ஜெபிக்கின்றோம். ஆனால் இயேசு கிறிஸ்து இந்த வசனத்தை உலக காரியங்களை கேட்பதையும், தேடுவதையும், தட்டுவதையும் பற்றி கூறவில்லை. மாறாக, பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு நாம் முயற்சியெடுத்து வேண்டுவதையே குறிப்பிடுகின்றார்.  இந்த வசனத்தின் இறுதியில் இயேசு கூறுகின்றார்,  "பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?." ( லுூக்கா 11 : 13 )

மேலும், நாம் நமது குழந்தைகள்  கீழ்படிதலுள்ளவர்களாக இருக்கவேண்டுமென்றும் விரும்புகின்றோம். தாய் தகப்பனுக்கு விருப்பமில்லாத காரியங்களில் ஈடுபட்டு தறுதலைகளாக அலையும் குழந்தைகளுக்கு அவர்கள் விருப்புவதைக் கொடுக்க நாம் தயங்குகின்றோம். இயேசு கிறிஸ்து கூறினார், "நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்." ( யோவான் 15 : 7 ) ஆம், கிறிஸ்துவிடம் நாம் கேட்பது நிறைவேறவேண்டுமென்றால் நாம் அவரிலும் அவரது வார்த்தைகள் நம்மிலும் நிலைத்திருக்கவேண்டியது அவசியம். 

உலக காரியங்களைவிட ஆவிக்குரிய காரியங்களுக்கே நாம் முக்கியத்துவம் கொடுத்து வேண்டுதல் செய்யவேண்டியது அவசியம். உலக ஆசைகளை நிறைவேற்றவே வேண்டுதல்கள் செய்துகொண்டிருந்தோமானால் நமது வேண்டுதல்கள் தேவனால் அங்கீகரிக்கப்படாது. "நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக் கொள்ளாம லிருக்கிறீர்கள்." ( யாக்கோபு 4 : 3 ) என்கின்றார் அப்போஸ்தலரான யாக்கோபு. 

முதலில் தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்போது மற்றவையெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.  எனும் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளில் அசையாத நம்பிக்கைக் கொண்டவர்களாக நாம் இருந்தால் மட்டுமே  நமது வேண்டுதல்கள் வித்தியாசமானதாக, தேவனுக்கு ஏற்புடையதாக இருக்கும். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: