இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Thursday, March 23, 2023

"வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்?"

ஆதவன் 🌞 786🌻 மார்ச் 24, 2023 வெள்ளிக்கிழமை

"மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்" (மீகா - 6:8)

மோசே மூலம் தேவன் மனிதர்கள் நல்வழியில் வாழ பல்வேறு கட்டளைகளையும் முறைமைகளையும் வகுத்துக் கொடுத்தார். பத்துக் கட்டளைகளைத் தவிர சிறியதும் பெரியதுமான பல கட்டளைகள் வேதத்தில் உண்டு. வேத ஆராய்ச்சியாளர்கள் இந்தக் கட்டளைகளை கணக்கிட்டு 613 கட்டளைகள் உள்ளதாகக் கண்டறிந்துள்ளனர்.  இந்த 613 கட்டளைகளையும் நாம் நினைவில்கொண்டு வாழ்தல் கடினமானது. இயேசு கிறிஸ்து இந்த மொத்தக் கட்டளைகளையும் இரண்டு கட்டளைகளுக்குள் அடக்கிவிட்டார். 

1. "உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக" ( மத்தேயு 22 : 37 )
2. "உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக". ( மத்தேயு 22 : 39 )

"இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கின்றன ". ( மத்தேயு 22 : 40 ) என்றார் இயேசு கிறிஸ்து.

இந்த இரு கட்டளைகளையும் கடைபிடிக்கும்போது, நாம்  நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, நம் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்போம். இதனையே நான் கேட்கின்றேன் என்கின்றார் பரிசுத்தராகிய கர்த்தர்.

ஆனால் மனிதர்களாகிய நாம் பெரும்பாலும் ஆன்மிகம் என்றும் பக்தி என்றும் தேவையற்ற காரியங்களுக்கே முன்னுரிமைகொடுத்து வருகின்றோம். "வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்?" எனும் வார்த்தைகள் நம்மை சிந்திக்கத் தூண்டவேண்டும். 

ஒருமுறை ஒரு ஏழைத் தாயாரைச் சந்திக்கும்போது அவர் தனது மனத் துயரத்தை என்னிடம் பகிர்ந்துகொண்டார். தகப்பனில்லாத அவரது  ஒரே மகனை அந்தத் தாயார் மிக கஷ்டப்பட்டு வேலைசெய்து  படிக்கவைத்தார்.  இன்று அவன் நல்ல வேலையில் இருக்கின்றான். அவன் இந்தத் தாய்க்கு எப்போவாவது யார்மூலமாவது சிறு பண உதவிகள் செய்வதோடு சரி.  தாயாரிடம் வந்து பேசுவது கிடையாது. ஆனால் இந்தத் தாய் அவனிடம் பண உதவியையோ வேறு எதையுமோ எதிர்பார்க்கவில்லை. அவர்கள் கண்ணீரோடு கூறினார்கள், "அவன் என்னோடு வந்து பேசவேண்டும் என்பதைத்தவிர வேறு என்ன அவனிடம் எதிர்பார்க்கிறேன்?"

ஆம் அன்பானவர்களே, இதனையேதான் கர்த்தர் இன்றைய வசனத்தில் கூறுகின்றார். "நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்" 

வழிபாடுகளுக்கும் ஆராதனைகளுக்கும்  கொடுக்கும் முக்கியத்துவத்தை தேவனது அன்பின் கட்டளைகளைக் கடைபிடிப்பதற்கும் கொடுப்போம்.  இதைத் தவிர தேவன் நம்மிடம் வேறு எதையுமே பெரிதாகக் கேட்கவில்லை; விரும்பவுமில்லை. 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: