ஆதவன் 🌞 778🌻 மார்ச் 16, 2023 வியாழக்கிழமை
"பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்." ( எபேசியர் 6 : 1 )
தாய் தகப்பனை மதித்து நடக்கவேண்டியது நமது கடமை. ஆனால், அப்படி நாம் மதித்து நடப்பதிலும் கர்த்தருக்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று இன்றைய தியான வசனம் நமக்கு அறிவுறுத்துகின்றது.
மோசேமூலம் தேவன் அளித்த பத்துக் கட்டளைகளில் ஒன்று, "உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக." ( யாத்திராகமம் 20 : 12 ) என்பது. அதாவது, நாம் தாய் தகப்பனை மதித்து அவர்களை கனம் பண்ணும்போது நமது வாழ்நாள் அதிகரிக்கும்.
ஆனால், நமது தாய் தகப்பன் தேவனுக்கு ஏற்பில்லாத அல்லது பாவமான காரியங்களில் நம்மை ஈடுபடச் செய்யும்போது அல்லது சொல்லும்போது நாம் அவர்களுக்கு கீழ்ப்படிய வேண்டிய அவசியமில்லை. அதனையே இன்றைய வசனத்தில், "உங்கள் பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்." என்று கூறப்பட்டுள்ளது.
கர்த்தருக்குள் கீழ்ப்படிதல் என்பது கர்த்தர் பாவம் என்று விலக்கியுள்ள காரியங்களைத் தவிர்த்து மற்ற காரியங்களில் மட்டும் அவர்களது சொல்லைக் கேட்பது. சில தகப்பன்மார் தங்களது பிள்ளைகளையே மது வாங்கிவர கடைகளுக்கு அனுப்புகின்றனர். அல்லது முக்கியமான சில காரியங்களில் உலக நன்மைகளை பெறுவதற்காக பிள்ளைகளை பொய்ச்சொல்லச் சொல்லி வற்புறுத்துகின்றனர். மேலும் சில பத்திரிகை செய்திகளில் தாயும் தகப்பனுமே தங்கள் பெண் குழந்தைகளை விபச்சாரம் செய்யத் தூண்டும செய்திகளை நாம் வாசிக்கின்றோம். இத்தகைய காரியங்களில் நாம் பெற்றோருக்குக் கீழ்படியவேண்டிய அவசியமில்லை.
சில குடும்பங்களில் சொத்துத் தகராறுகள் ஏற்படும்போது அல்லது பிறரது சொத்துக்களை அநியாயமாக அபகரிக்க முயலும் சில தகப்பன்மார் தங்களது திருமணமான மகன் அல்லது மகள்களை தங்களுக்குச் சாதகமாக பொய்கூறும்படி வற்புறுத்துவதுண்டு.
அன்பானவர்களே, நாம் பெற்றோரை மதிக்கவேண்டும், அவர்களைப் பராமரிக்கவேண்டும் இது கட்டாயம். ஆனால் அவர்கள் கர்த்தருக்கு ஏற்பில்லாத பாவ காரியங்களைச் செய்யும்படி நம்மைத் தூண்டும்போது நாம் அவர்களுக்குக் கீழ்படியவேண்டிய அவசியமில்லை.
குறிப்பாக, எந்த காரியத்தை நம் பெற்றோர்கள் நம்மை செய்யச்சொல்லி கேட்டுக்கொண்டாலும் நாம் கர்த்தருக்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும். அதாவது அவர்கள் நம்மைச் செய்யச்சொல்லும் காரியம் கர்த்தரின்முன் நியாயமாக இருக்குமா என்று சிந்தித்து அப்படி நியாயமாய் இருந்தால் மட்டுமே நாம் செய்யவேண்டும்.
வயது எத்தனை ஏறினாலும் சிலர் திருந்தாத ஜடங்களாகவும் அல்லது மனிதநேயமற்றவர்களாகவும் இருக்கின்றனர். அத்தகைய பெற்றோரை, நம் பெற்றோர் என்பதால் வீட்டில் ஏற்றுக்கொள்வோம்; அவர்களைப் பராமரிப்போம். ஆனால் அவர்களது அநியாய சிந்தனைக்கும் அறிவுரைக்கும் கீழ்படியாமலிருப்போம். நமது பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படிவோம், இது நியாயம்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712
No comments:
Post a Comment