ஜீவ விருட்சத்தின் கனியை உண்டு மகிழ்வோம்.

ஆதவன் 🌞 788🌻 மார்ச் 26, 2023 ஞாயிற்றுக்கிழமை















"ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன்" ( வெளிப்படுத்தின விசேஷம் 2 : 7 )

ஆதியில் ஏதேன் தோட்டத்தில் தேவன் இரண்டு முக்கியமான மரங்களை வைத்திருந்தார். ஒன்று ஜீவ விருட்சம் இன்னொன்று நன்மைதீமை அறியத்தக்க விருட்சம். இதனை நாம் ஆதியாகமத்தில் வாசிக்கலாம். "தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்." ( ஆதியாகமம் 2 : 9 )

இதில் நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியைத்தான் சாப்பிடக்கூடாது என்று தேவன் ஆதாமுக்கும்  ஏவாளுக்கும் கட்டளைக் கொடுத்திருந்தார். ஆனால் அங்கு ஜீவ விருட்சம் எனும் ஒரு மரமும் இருந்தது. அதுகுறித்து தேவன் எந்தக் கட்டளையும் கொடுக்கவில்லை.  ஆதாமும் ஏவாளும் அந்த மரத்தின் கனியை உண்பதில் ஆர்வமும் காட்டவில்லை. 

ஆனால் தேவ கட்டளையை ஆதாமும் ஏவாளும் மீறியபோது தேவன் ஜீவ விருட்சத்தின் கனியை அவர்கள் உண்டுவிடக்கூடாது என்று தடுத்தார். காரணம், தேவனுக்கு எதிரான பாவம் செய்த மனிதன் அதனைச்  சாப்பிடக்கூடாது; அப்படிப் பாவியான மனிதன் என்றென்றும்  வாழக்கூடாது என்று தேவன் கருதினார்.  

"இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று," ( ஆதியாகமம் 3 : 22 )  "அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்." ( ஆதியாகமம் 3 : 24 )

அன்பானவர்களே, ஆதாம் ஏவாள் தங்கள் பாவத்தால் சுவைக்காமல் இழந்துபோன ஜீவ விருட்சத்தின் கனியை ஆவிக்குரிய வாழ்வில் வெற்றிபெறும் அனைவர்க்கும் தருவேன் என்கின்றார் தேவன்.  ஆம், வெற்றிபெறுபவன் எவனெவனோ அவனுக்கு / அவளுக்கு இந்தக் கனி உண்ணக்கொடுக்கப்படும் என்கிறார் கர்த்தர். 
"ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன்"  என்கின்றார்.

"முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்." ( 1 கொரிந்தியர் 15 : 47 ) முதலாம் மனிதனாகிய ஆதாமினால் இழந்துபோன இந்த ஆசீர்வாதம் இரண்டாம் ஆதாமாகிய வானத்திலிருந்து வந்த கர்த்தராகிய  இயேசு கிறிஸ்துவினால் நமது பாவங்கள் கழுவப்பட்டு நாம் பரிசுத்தமாகும்போது நமக்குக் கிடைக்கின்றது. 

மற்ற உலக பந்தயங்களில் ஒருவருக்கு மட்டுமே பரிசு கிடைக்கும். ஆனால் ஆவிக்குரிய ஓட்டத்தில் வெற்றிபெறும் அனைவருமே பரிசு பெறலாம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே பற்றிக்கொண்டு பரிசுத்தமான வாழ்வு வாழ்வோம். ஜீவ விருட்சத்தின் கனியை உண்டு மகிழ்வோம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்