Thursday, March 02, 2023

ஐந்துவகை ஊழியங்கள்

ஆதவன் 🌞 766🌻 மார்ச் 04,  2023 சனிக்கிழமை 

"அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்." ( எபேசியர் 4 : 13 )

திருச்சபையில் அப்போஸ்தல ஊழியம், தீர்க்கதரிசன ஊழியம், சுவிசேஷ ஊழியம், மேய்ப்பர் ஊழியம், போதக ஊழியம் எனும்  ஐந்துவகை ஊழியங்கள் உண்டு என்று இந்த வசனம் கூறுகின்றது. 

ஐந்துவகை ஊழியங்களாய் இருந்தாலும் இவை அனைத்தின் நோக்கமும் ஒன்றே.  ஆனால், இன்று அந்த நோக்கத்தைச் சரியாக    நிறைவேற்றுகின்றார்களோ இல்லையோ ஒவ்வொருவருக்கும் வீண் பெருமைகளுக்கு   மட்டும் குறைவில்லை. 

சரி இந்த ஐந்துவகை ஊழியங்களின் நோக்கம்தான் என்ன? அதனை அப்போஸ்தலரான பவுல் இன்றைய வசனத்தைத் தொடர்ந்து எழுதும்போது கூறுகின்றார். அதாவது, "நாம் குழந்தைகள்போல  பல்வேறு தந்திரமான போதகங்களால் அடிபட்டு அலையாமல் தலையாகிய கிறிஸ்து இயேசுவுக்குள் வளரவேண்டும் என்பதற்காகவே" என்கின்றார்.

"நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்." ( எபேசியர் 4 : 14, 15 )

எனவே இந்த ஐந்து வகை ஊழியமும் ஒரே நோக்கம் கொண்டவையே. இறையியல் கல்லூரியில் படித்த ஒருவர் இந்த நோக்கத்தை நிறைவேற்றாமல் உலக காரியங்களைப் போதிப்பவராக, சமூக மேம்பாடு எனக் கூறிக்கொண்டு பிசாசின் வலையில் வீழ்ந்து கிடக்கலாம்.  சமூக மேம்பாட்டுக்காக ஒருவன் இறையியல் படிக்கத் தேவையில்லை.  அதேசமயம் உண்மையாய் இயேசு கிறிஸ்துவை வாழ்வில் ருசித்து அறிந்தவர் கிறிஸ்துவின் நோக்கத்தை நிறைவேற்றுபவராகஇருக்கக்கூடும்.  

மேலும், இந்த ஐந்து  வகை ஊழியங்களின்  நோக்கமாகிய "தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படி" என்பது நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. அதாவது, கிறிஸ்துவுக்குள் நாம் எல்லாவற்றிலும் வளர வேண்டும்.எல்லாவிதத்திலும் கிறிஸ்துவைப்போலாகவேண்டும். இந்த ஊழியங்களைச் செய்பவர்கள் இதனையே மனதில் கொண்டு செயலாற்றவேண்டும். 

அன்பானவர்களே, ஊழியர்களோ ஊழியங்களோ உயர் பதவிகளோ ஒருவரை மகிமைப்படுத்தாது. அது உலக மக்கள்முன் மதிப்புமிக்கதாக இருக்கலாம். ஆனால், கிறிஸ்து மனிதர்கள் பார்ப்பதுபோல பார்ப்பதில்லை. ஒருவர் மக்களுக்கு எப்படிக் கிறிஸ்துவை அறிவிக்கின்றார், எப்படி கிறிஸ்துவுக்குள் விசுவாசிகள் வளர்ச்சியடைய உதவுகின்றார் என்பதையே அவர் பார்க்கின்றார். அதற்கு இந்த ஐந்து வகை ஊழியம் செய்பவர்களும் கிறிஸ்துவை தனிப்பட்ட விதத்தில் அறிந்தவர்களாக இருக்கவேண்டியது அவசியம். ஆனால் இன்று பெரும்பாலும் இந்த ஊழியங்களைச் செய்பவர்கள் அப்படி இல்லை என்பது வருந்தத்தக்க விஷயம். 

கிறிஸ்துவின் ஊழியத்தைச் செய்யும் இந்த ஊழியர்கள் கிறிஸ்துவையும் சத்தியத்தையும்  அறிந்திடவேண்டி ஜெபிக்கவேண்டியது விசுவாசிகளின் கடமையாக இருக்கின்றது. காரணம்,  இன்று இந்த ஊழியர்களைவிட பல விசுவாசிகள் கிறிஸ்துவை அதிகம் அறிந்தவர்கள்; கிறிஸ்துவோடு அதிக நெருக்கமாக உள்ளவர்கள். ஊழியர்களுக்காக ஜெபிப்போம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: