Wednesday, March 01, 2023

'ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்"

 ஆதவன் 🌞 765🌻 மார்ச் 03,  2023 வெள்ளிக்கிழமை 

"ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்." ( எபிரெயர் 13 : 15 )

இன்றைய வசனத்தில்,  ஸ்தோத்திரம் செய்வதை உதடுகளின் கனி என்று கூறப்பட்டுள்ளது. நமது உதடுகளால் நாம் பல வேளைகளில் தேவையில்லாத காரியங்களை பேசிவிடுகின்றோம். சிலரது வாயில் எப்போதும் அடுத்தவரைக்குறித்து குறைகூறுவதும் சாபங்களும் புறப்பட்டுவரும். இவை உண்மையில் நம்மை தேவனைவிட்டுப் பிரித்துவிடுகின்றன.   ஆனால் நமது உதடுகள் தேவனைத் துதிக்கப் பழகிவிட்டால்  அது நமக்கு மிகப்பெரிய ஆசீர்வாதமாக மாறும். 

சிலவேளைகளில் நாம் ஜெபிக்கமுடியாத அளவுக்குத் துன்பங்களும் பிரச்சனைகளும் நம்மை நெருங்கிவிடுவதுண்டு. அத்தகைய வேளைகளில் நாம் துதிக்கமட்டுமே முடியும். ஆனால் துன்பவேளையில் தேவனைத் துதிக்கும்  அத்தகைய துதி மிகுந்த வல்லமையுள்ளதாக இருக்கும். காரணம், இத்தகைய இக்கட்டிலும்  எனது பிள்ளை என்னை மறக்காமல் இருக்கின்றானே (ளே) என எண்ணுவதுதான்.  இத்தகைய நேரத்தில் தேவன் விரைந்து செயல்படுகின்றார். 

நமது கர்த்தருக்கு ஒரு பெயர், "துதிக்குத் தகுதியுள்ளவர்" என்பது. "ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி இரட்சிக்கப்படுவேன்." ( 2 சாமுவேல் 22 : 4 ) என்று கூறப்பட்டுள்ளது. 

சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த பவுலும் சீலாவும் நடு ராத்திரியில் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 16 : 25, 26 )

"கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது." ( சங்கீதம் 147 : 1 ) என்கின்றார் சங்கீத ஆசிரியர். எனவே அவரது படைப்புகளை அனைத்தும் அவரது செயலைத் துதிக்கும் என்று வசனம்  கூறுகின்றது.  "கர்த்தாவே, உம்முடைய கிரியைகளெல்லாம் உம்மைத் துதிக்கும்; உம்முடைய பரிசுத்தவான்கள் உம்மை ஸ்தோத்திரிப்பார்கள்." ( சங்கீதம் 145 : 10 )

அன்பானவர்களே, துன்பங்கள், மனச் சோர்வுகள் ஏற்படும்போது, ஜெபிக்கமுடியாத தருணங்கள் ஏற்படும்போது வேறு எதுவும் செய்யவேண்டாம், ஸ்தோத்திரம் சொன்னாலே போதும். கர்த்தர் மிகப்பெரிய விடுதலையினைத் தருவார். சங்கீதம் 136 துதியின்  சங்கீதமாகும். அதில் 23 ஆம் வசனம்  கூறுகின்றது, "நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது." ( சங்கீதம் 136 : 23 ) 

ஆம், தாழ்வில் நம்மை நினைக்கின்ற அருமையான கர்த்தர் நமக்குண்டு. அவரையே துதிப்போம். மேலும் நமது ஜெபங்களில் ஸ்தோத்திரபலிக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டியது அவசியம். அப்போஸ்தலனாகிய பவுல் அடிகள் இப்படியே ஜெபித்தார். எனவேதான் அவர் கூறுகின்றார், "நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல்செய்கிறோம்." ( கொலோசெயர் 1 : 5 ) என்று.

அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம். 'ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்" ( சங்கீதம் 50 : 23 ) என்கின்றார் பரிசுத்தராகிய கர்த்தர்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: