Monday, March 06, 2023

எதிரிகளை மன்னிக்கும் மேலான குணம்

ஆதவன் 🌞 769🌻 மார்ச் 07,  2023 செவ்வாய்க்கிழமை 

"அவன் எனக்குச் செய்தபிரகாரம் நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்த செய்கைக்குத்தக்கதாக நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே." ( நீதிமொழிகள் 24 : 29 )

ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு (மத்தேயு 5:39) என்று போதித்தது மட்டுமின்றி அதனைச் செயலிலும் காட்டியவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அதாவது பழி வாங்குதல் கூடாது என்பதே வேதம் நமக்குக் கற்றுத்தரும் பாடம். 

இன்று உலகில் மனிதர்கள் பிறர் தங்களுக்கு எதிராகச் செய்யும் செயலை மன்னிப்பது என்பது அரிதிலும் அரிதாகிவிட்டது. தினசரி பத்திரிக்கைச் செய்திகளைப் படித்தால் பழிக்குப் பழி வாங்கும் கொலைகள் நடைபெறாத நாளே இல்லை என்று எண்ணத் தோன்றுகின்றது. இந்தச் செயல்பாடுகளில் ஈடுபடும் பலர் கிறிஸ்தவர்களாகவும் இருக்கின்றனர்.  

"பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார்....." ( ரோமர் 12 : 19 )

"ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்." ( எபேசியர் 4 : 32 )

பழிவாங்குதல் பிசாசின் குணம்; மாறாக மன்னித்து மறப்பது தெய்வீக குணம். எதிரியை மன்னித்து அவனுக்கு நாம் நன்மை செய்யும்போது அதுவே அவனுக்குத் தண்டனையாகின்றது. எனவேதான் அப்போஸ்தலனாகிய பவுல் அடிகள், "அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்கு போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்." ( ரோமர் 12 : 20 ) என்று கூறுகின்றார். 

இந்த உலக அரசியல்வாதிகளைப் பார்த்தாலே பல உண்மைகள் நமக்குப் புரியும். மன்னிக்கும் குணமின்றி பழிவாங்கும் நடவடிக்கைகளிலேயே காலத்தைக் கழித்த அரசியல் தலைவர்கள் தடமிழந்து போன வரலாறுகள் பல உண்டு. அதேநேரம் அமைதியாக நேர்மையாக நடந்து எதிரிகளுக்கும் பதவிகள் கொடுத்து நிலைத்த பெயர் பெற்றவர்களும் உண்டு.

சாதாரண உலகத் தலைவர்களே இப்படி இருக்கும்போது கிறிஸ்துவை பிரதிபலிக்க அழைக்கப்பட்ட நாம் எவ்வளவு சிறப்பாக இந்தக் குணத்தைக் கொண்டவர்களாக இருக்கவேண்டும்?

நாம் நம்மையே சோதித்து நமது தவறுகளை எண்ணிப் பார்ப்போம். உலக ஆசீர்வாதங்களுக்கே ஜெபிக்கும் நாம் எதிரிகளை மன்னிக்கும் மேலான குணம் நமக்கு கிடைக்கவேண்டி ஜெபிப்போம். இத்தகைய ஜெபங்களே  தேவனது பார்வையில் மேலான ஜெபங்கள். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712


No comments: