விசுவாசத்தின் பலனாகிய ஆத்தும இரட்சிப்பு

ஆதவன் 🌞 772🌻 மார்ச் 10,  2023 வெள்ளிக்கிழமை 


"அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து, உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள்." ( 1 பேதுரு 1 : 8, 9 )

இன்றைய தியான வசனத்தின் இறுதியில், விசுவாசத்தின் பலனாகிய ஆத்தும இரட்சிப்பு எனும் வார்த்தைகள் வருகின்றன. அதாவது, இரட்சிப்பு ஏற்பட முதலாவது விசுவாசம் வேண்டும் என்பது இதன்மூலம் தெரிகின்றது. விசுவாசம் என்பது நாம் காணாததை நம்புவது. அதில் உறுதியாக இருப்பது. "விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது." ( எபிரெயர் 11 : 1 ) என்று வாசிக்கின்றோம். 

நாம் காணாமல் விசுவாசத்தினாலே இரட்சிப்பட்டுள்ளோம். எல்லாவற்றையும் கண்டால்தான் நம்புவேன் என்று கூறிக்கொண்டிருக்கமுடியாது. காணக்கூடியதை நம்புவது பெரிதல்ல. "நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டியதென்ன?" ( ரோமர் 8 : 24 )

பனிப் பகுதிகளில் பனிக்கட்டியினால் பாலம்போல நீர் உறைந்திருக்கும். அதன் அடியில் நீரானது ஓடிக்கொண்டிருக்கும். நாம் பனிப்பாலத்தில் நடக்கலாம். இதனை நாம் எல்லோரும் பார்த்ததில்லை. ஆனால் அதனைப் பார்த்த மனிதர்கள் நம்மிடம் கூறும்போது அவற்றை நம்புகின்றோம். அதுபோலவே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நாம் கண்டதில்லை. அவர் செய்த அற்புதங்களைப் பார்த்ததில்லை. ஆனால் அவரோடு இருந்து அவற்றைப் பார்த்து எழுதிவைத்துள்ள வேதாகமச் செய்திகளைக் கேட்டு; பார்த்து அவரை  நாம் நம்பும்போது இரட்சிக்கப்படுகின்றோம்.

இதனையே அப்போஸ்தலரான பேதுரு இன்றைய தியான வசனத்தில், "அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து, உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள்." என்று கூறுகின்றார். 

நமது அன்பு ஆண்டவரும் அப்போஸ்தலனாகிய தோமாவிடம், "தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்." ( யோவான் 20 : 29 ) ஆம் அன்பானவர்களே, இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளின்படி பார்ப்போமானால் இன்று அவரைக் காணாமலிருந்தும் விசுவாசிக்கும் நாம் அனைவருமே பேறுபெற்றவர்கள்தான். 

இன்று கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலருக்கும்கூட   கிறிஸ்துவிடம் முழு விசுவாசம் இல்லை. ஊழியம் செய்யும் பலரும்கூட பிழைப்புக்கான ஒரு தொழிலாக இதனைச் செய்கின்றார்களே  தவிர கிறிஸ்துவின் அன்பை உணர்ந்து; அவரை அறிந்து செய்யவில்லை.  உண்மையாய்க் கிறிஸ்துவிடம் விசுவாசம்கொண்டு அவரை அறிந்துகொள்ளும்போதே நாம் இன்றைய வசனத்தில் பேதுரு கூறுவதுபோல  விசுவாசத்தின் பலனாகிய ஆத்தும இரட்சிப்பை அடைய முடியும்; மட்டுமல்ல, அப்போது வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள வசனங்கள் நமது வாழ்க்கையில் செயல்பட்டு மாபெரும் மாற்றத்தை நமது வாழ்வில் கொண்டுவரும். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்