Saturday, March 18, 2023

துன்பங்கள்

 ஆதவன் 🌞 781🌻 மார்ச் 19,  2023 ஞாயிற்றுக்கிழமை 

"இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன்" (ஏசாயா 54: 7)

இந்த உலகத்தில் துன்பங்கள் சோதனைகளை அனைவருக்கும் பொதுவானவை. கிறிஸ்துவினிடம் நம்பிக்கைக் கொண்டுள்ளதால் நமக்குத் துன்பங்கள் வராது என்று நாம் சொல்ல முடியாது. மிகக் கடுமையான துன்பங்கள், உலக மனிதர்கள் அடையாத துன்பங்கள் ஆவிக்குரிய மக்களுக்கு ஏற்படலாம். 

பக்தனான யோபு இப்படித் துன்பத்தை அனுபவித்தவர்தான். ஆனால் அவரது துன்பம் கர்த்தரால் அனுமதிக்கப்பட்டத்  துன்பம். அவரைப் பொன்னைப்போல மாற்றிட அனுப்பப்பட்டத்  துன்பம். இதுபோலவே ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் நமக்கும் வாழ்க்கையில் துன்பங்கள் ஏற்படலாம். அவை நம்மைத் தேவன் புடமிட்டு தனக்கு ஏற்புடையவராகத் தெரிந்துகொள்ளவேண்டிய துன்பமாக இருக்கலாம். "இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப்போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன்." ( ஏசாயா 48 : 10 ) என்கின்றார் கர்த்தர். 

தனக்கு ஏற்புடையவர்களாக வாழ்பவர்களைத் தேவன் அப்படியே துன்பத்தில் கைவிட்டுவிடுபவரல்ல. இன்றைய வசனம் கூறுகின்றது, "இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்" என்று. அதாவது ஒரு கண் இமைக்கும் அளவுக்கு மட்டுமே அவர் நம்மைக் கைவிடுகின்றார்.  நமது காலக்கணக்குக்கும் தேவனது காலக்கணக்குக்கும்  வித்தியாசம் உண்டு. நமக்கு நமது துன்பங்கள் நீண்டகாலம் தொடர்வதுபோலத் தெரியலாம். ஆனால், தேவனுக்கு அது ஒரு இமை நொடிபொழுதுதான். ஆம், கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் ஆண்டுகள்போலவும் ஆயிரம் ஆண்டுகள் ஒரு நாள் போலவும் இருக்கின்றது. (2 பேதுரு 3:8)

சில வேளைகளில் குழந்தைகள் தவறு செய்யும்போது தாய், "நான் உன்னுடன் பேச மாட்டேன் போ" என்கின்றாள், அல்லது சிறிதாகத் தண்டிக்கின்றாள். ஆனால் மறுநிமிடமே அந்தக் குழந்தையினை அணைத்துக்கொள்கின்றாள்.  நமது தேவனும் இதுபோலவே இருக்கின்றார். 

அன்பானவர்களே, இன்றைய வசனத்தில், "உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன்" என்று கர்த்தர் கூறுகின்றார். அவரது இரக்கம் அளவிடமுடியாதது. அவர் என்றுமே கோபமாய் இருப்பதில்லை; நம்மை அவர் அழித்துவிடுவதில்லை. அவருடைய கிருபையால் நம்மைச் சேர்த்துக்கொள்வார். ஆம்,  "நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை." ( புலம்பல் 3 : 22 )

எனவே அன்பானவர்களே, துன்பங்களைக்கண்டு சோர்ந்துபோகவேண்டாம். நம்மை அவர் கைவிட்டுவிடுவதுபோலத் தெரிந்தாலும் அது ஒரு இமைப் பொழுதுதான். நம்மை அவர் மீண்டும் சேர்த்துக்கொள்வார். துன்பநேரங்களில் கர்த்தரை மகிழ்ச்சியாய்த் துதிப்போம். பவுலும் சீலாவும் சிறையில் துதித்தபோது கட்டுகள் அறுக்கப்பட்டு விடுதலையாகவில்லையா? (அப்போஸ்தலர்பணி - 16:25,26) கர்த்தர்மேலுள்ள விசுவாசத்தைக் காத்துகொண்டு துன்பங்களை எதிர்கொள்வோம். 

"சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்." ( யாக்கோபு 1 : 12 )

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: