Wednesday, March 29, 2023

தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல

ஆதவன் 🌞 793🌻 மார்ச் 31, 2023 வெள்ளிக்கிழமை














"போஜனமானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒரு மேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை." ( 1 கொரிந்தியர் 8 : 8 )

உண்ணும் உணவைக்குறித்து இன்று பல்வேறு சர்ச்சைகள் நாட்டில் நிலவுகின்றன. காய்கறி உண்பவர்கள்தான் மெய்யான ஆன்மீகவாதிகள் என்று ஒரு மாயமான பிரம்மை உருவாக்கப்பட்டுள்ளது.  மேலும், குறிப்பிட்டக் காலங்களில் அசைவ உணவைத் தவிர்ப்பது மேலானது என்று ஒரு கருத்து பலரிடையே உள்ளது. 

இத்தகைய கருத்துக்கள் உண்மையில் மனிதனது மூளையில் உதித்த கருத்தே தவிர இதற்கும் ஆன்மீகத்துக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. நமது உள்ளான மனதையே தேவன் பார்க்கின்றார். ஆம், உணவானது நம்மை கடவுளுக்கு ஏற்ப்புடையவர்கள் ஆக்கிடாது.  புசிப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை அல்லது மேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு மேன்மையுமில்லை அல்லது குறைவுமில்லை.

நமது இருதயமானது உணவினால் அல்ல மாறாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையினால் பலப்படவேண்டும். அதுவே நல்லது.  "போஜன பதார்த்தங்களினாலல்ல, கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது; போஜனபதார்த்தங்களில் முயற்சிசெய்கிறவர்கள் பலனடையவில்லையே." ( எபிரெயர் 13 : 9 ) 

ஆவியின் கனிகள் உள்ளவனே ஆவிக்குரியவன்.   அவனே கிறிஸ்தவன். "ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை." ( கலாத்தியர் 5 : 22,23 ) இந்த ஆவிக்குரிய கனிகள் ஒருவருக்கு அசைவ உணவுகளைத் தவிர்ப்பதால் வந்திடாது; மாறாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைச் சார்ந்துகொள்வதால் மட்டுமே வரும். 

இன்று கிறிஸ்தவர்களில் பலரும்கூட குறிப்பிட்ட காலங்களில் மீன், இறைச்சி போன்ற அசைவ உணவுகளைத் தவிர்ப்பது தேவனுக்கு ஏற்றச் செயல் என்று கருதிக்கொள்கின்றனர். அன்பானவர்களே, இவை உடலுக்கு நன்மையாக இருக்கலாம். ஆனால், இவைகளைத் தவிர்த்துவிட்டு  மேற்கூறிய ஆவியின் கனிகள் இல்லாமல் வாழ்ந்து என்ன பயன்?

"போஜன பதார்த்தங்களினாலல்ல, கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது" என்று எபிரெயர் நிருப ஆசிரியர் கூறுவதுபோல நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையில் பலப்பட முயலவேண்டும்;  தேவனது கிருபையினைச் சார்ந்து ஆவிக்குரிய வாழ்வு வாழ முயலவேண்டும்.  உணவுக் கட்டுப்பாட்டு முயற்சிகள் நமது உடலைப் பேணலாமேத்தவிர ஆவிக்குரிய வாழ்வைப் பேண உதவாது.  

ஆம், ஆவிக்குரிய வாழ்க்கையும் தேவனுடைய ராஜ்யமும். சாப்பிடுவது, குடிப்பது இவற்றின் அடிப்படையானது அல்ல. "தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது." ( ரோமர் 14 : 17 )

அற்பமான உணவு விஷயத்துக்கு முன்னுரிமைக் கொடுப்பதைவிட பரிசுத்த ஆவியினால் உண்டாகும் நீதி, சமாதானம், சந்தோஷத்தையே தேடுவோம்.  

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: