Monday, March 13, 2023

எதார்த்தமாக இருக்கப் பழகுவோம்.

ஆதவன் 🌞 776🌻 மார்ச் 14,  2023 செவ்வாய்க்கிழமை 

"நாங்கள் தூரத்திலிருக்கும்போது எழுதுகிற நிருபங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோமோ அப்படிப்பட்டவர்களாகவே சமீபத்திலிருக்கும்போதும் கிரியையிலும் இருப்போம் என்று சிந்திக்கக்கடவன்." ( 2 கொரிந்தியர் 10 : 11 )


பொதுவாக இந்த உலகத்தில் மனிதர்கள் பேசுவது ஒன்று செய்வது ஒன்று என  வாழ்கின்றனர். தொலைபேசியில் பேசும்போது அன்பொழுகப் பேசுவார்கள். ஆனால் அவர்களது இடத்தில சென்று தங்கும்போது அவர்களது செயல்பாடுகள் வித்தியாசமானதாக இருக்கும்.  

நாம் எவ்வளவுதான் நண்பர்களாக இருந்தாலும் தொலைவில் இருக்கும்வரைதான் நமது உறவுகள் சிறப்பாக இருக்கும். ஒரே அறையில் சேர்ந்து தங்கும்போது பல்வேறு மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. காரணம், தொலைவிலிருந்து பேசும்போது நட்புக்காக நமது சில குணங்களை மற்றவர்களிடம் மறைத்துவிடுகின்றோம். சேர்ந்து வாழும்போதுதான் நமது குறைகள் நம்மை அறியாமலேயே வெளிப்படும்.  "ஐயோ, இவரை நாம் எப்படியெல்லாமோ நினைத்தோமே, இவர் இப்படிப்பட்டவராக அல்லவா இருக்கின்றார்" என எண்ணுவோம். 
\
ஆனால் பவுல் அடிகள் தான் அப்படிப்பட்டவன் அல்ல என்று கூறுகின்றார். எனவேதான், "நாங்கள் தூரத்திலிருக்கும்போது எழுதுகிற நிருபங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோமோ அப்படிப்பட்டவர்களாகவே சமீபத்திலிருக்கும்போதும் கிரியையிலும் இருப்போம்" என்கின்றார். 

பவுலின் நிரூபங்களும் போதனைகளும் கடினமானவை; ஆனால் வல்லமையுள்ளவை. பவுலின்  உடல் பலவீனமான உடல். அவரது எழுத்தாற்றலோடு ஒப்பிடும்போது பேச்சாற்றல் குறைவுள்ளது. ஆனால் இவைகளை மாய்மாலமாக மக்களிடம்  மறைக்காமல் தொலைவிலிருக்கும்போது இருப்பதுபோலவே அவர்களோடு இருக்கும்போதும் இருப்பேன் என்கின்றார். இதனையே இன்றைய தியான வசனத்தின் முந்தின வசனத்தில், "அவனுடைய நிருபங்கள் பாரயோசனையும் பலமுமுள்ளவைகள்; சரீரத்தின் தோற்றமோ பலவீனமும், வசனம் அற்பமுமாயிருக்கிறதென்கிறார்களே." ( 2 கொரிந்தியர் 10 : 10 ) என்று குறிப்பிடுகின்றார். 

ஆனால் இன்று ஆவிக்குரிய சபைகளில் ஊழியர்களிடம் இந்தக் குணம் பொதுவாக இருப்பதில்லை. அவர்கள் சபைக்கு நாம் செல்லும்போது மாய்மால அன்புடன்,  வித்தியாசமான பேச்சுவழக்கில் நம்மோடு பேசுவார்கள். இவர்கள் பேசும் தமிழே வித்தியாசமாக இருக்கும். இப்படிப்பேசுவதே ஆவிக்குரிய பேச்சு என எண்ணிக்கொள்கின்றனர். ஆம், சுய முகங்களை மறைத்து தங்கள் சபைகளுக்கு மக்கள் வரவேண்டுமென்பதற்காகவே இந்த மாய்மாலம். 

அன்பானவர்களே, பவுல் அடிகள் கூறுவதுபோல எதார்த்தமாக இருக்கப் பழகுவோம். நமது பேச்சும் செயல்பாடுகளும் எப்போதும் ஒரேபோல இருக்கட்டும். நய வசனிப்பாலும், மாய்மால பேச்சினாலும் அரசியல் கட்சிகளுக்கு ஆள் சேர்பதுபோல நாம் ஆள் சேர்க்கவேண்டிய அவசியமில்லை. 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: