இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Sunday, March 19, 2023

நாம் விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.

ஆதவன் 🌞 783🌻 மார்ச் 21,  2023 செவ்வாய்க்கிழமை

மனுஷனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடியினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள். ( ஏசாயா 52:14)

உலகின் மிகச் சிறந்த ஓவியரான லியானார்டோ டாவின்சி அவர்கள் 1490 களில் வரைந்த ஓவியங்களில் மிகப் பிரபலமான ஓவியம் கிறிஸ்துவின் இறுதி இரா உணவு ஓவியமாகும். இந்த ஓவியத்தை வரைவதற்கு இயேசு கிறிஸ்துவுக்கு மாடலாக கிறிஸ்துவின் முக அமைப்புக்கு ஏற்ற ஒரு முகமுள்ள மனிதனைப் பல ஆண்டுகளாகத்  தேடி  இறுதியில் அப்படி அழகும் கனிவுமான முக அமைப்புள்ள ஒரு மனிதனைக் கண்டுபிடித்து அவனைக் கிறிஸ்துவாக வரைந்தார். பின் எல்லா அப்போஸ்தலர்கள் படத்தையும் வரைந்தார். இறுதியில் யூதாஸ் இஸ்காரியோத் முகத்தை வரைந்திட அதற்கேற்ற முக அமைப்புள்ள ஒரு மனிதனைத் தேடி அலைந்து இறுதியில் ஒருவரைக் கண்டுபிடித்தார்.  

தனது ஓவிய அறையில் அவர் அவனை நிறுத்தி அவனது முகத்தைப் பார்த்து யூதாஸின் முகத்தை வரைந்தார். அப்போது அந்த மனிதன் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. டாவின்சி அவனிடம், "ஏன் அழுகின்றாய்" என்று கேட்டார். அவன் கூறினான், "ஐயா ஒரு சில ஆண்டுகளுக்குமுன் என்னைத்தான் நீங்கள் கிறிஸ்துவுக்கு மாடலாக நிறுத்தி வரைந்தீர்கள்; இப்போது என்னையே யூதாஸாக வரைகின்றீர்கள்.....எனது பாவப் பழக்கம் என் முகத்தையே அந்தகாரப்படுத்திவிட்டது " என்றான்.  ஆம், பாவம் மனிதனது ஆத்துமாவை மட்டுமல்ல, உடலையும் கெடுக்கின்றது. 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக்குறித்து "அவர் முற்றிலும் அழகுள்ளவர்" ( உன்னதப்பாட்டு 5 : 16 ) என வாசிக்கின்றோம். அப்படி முற்றிலும் அழகுள்ளவர்மேல் மனுக்குலத்தின் ஒட்டுமொத்தப் பாவங்கள் சுமத்தப்பட்டதால் அவர் தனது அழகை இழந்தார்; அந்தகாரமடைந்தார். அவரது தோற்றத்தைத் தரிசனமாகக் கண்ட ஏசாயா, "அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது." (ஏசாயா 53:2) என்று எழுதுகின்றார். 

"மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்" (ஏசாயா  53:4)

முற்றிலும் அழகுள்ள இயேசு  கிறிஸ்து நமக்காக பாவியானபோது தனது அழகினை இழந்தார்.  இது கிறிஸ்து நமக்காக எவ்வளவு அன்பு வைராக்கியம் பாராட்டுகின்றார் என்பதை நமக்கு உணர்த்துவதுடன் பாவப் பழக்கம் நம்மை எப்படி உடல்ரீதியாகவும் கெடுக்கின்றது, நம்மை அலங்கோலப்படுத்துகின்றது என்பதனை உணர்த்துகின்றது. நமது ஊரில்கூட அழகானத் தோற்றமுள்ள சிலர் பாவப் பழக்கங்களால் அலங்கோலமடைந்து நம் கண்முன் வாழ்வதை நாம் பார்த்திருக்கலாம். 

கிறிஸ்து நமக்காக தன்னையே இழந்து  பலியாக்கின அன்பதனை எண்ணிப்பார்ப்போம். அவருக்கு நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுப்போம். நாம் நமது மனதினில் எண்ணுவதற்கும் மேலாக பரிசுத்தமாய் வாழ நமக்கு உதவிசெய்ய அவர் வல்லவராய் இருக்கின்றார்.  தனது அழகு, அந்தஸ்து, தெய்வீகம் அனைத்தையும் நமக்காக இழந்தவர் நம்மைக் கைவிடுவாரா?
 
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: