விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்

ஆதவன் 🌞 780🌻 மார்ச் 18,  2023 சனிக்கிழமை 

"ஒன்றைமாத்திரம் உங்களிடத்தில் அறிய விரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதனாலே ஆவியைப் பெற்றீர்கள்? ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா? (கலாத்தியர் 3:2,3) 

காலாத்திய சபையில் அப்போஸ்தலரான பவுலின் உபதேசத்தைக்கேட்டு விசுவாசிகளானவர்களிடம் சில ஊழியர்கள் வந்து பல்வேறு யூத பாரம்பரியங்களைப் பின்பற்றவேண்டுமென்று கற்பித்தனர். மோசேயின் நியாயப்பிரமாணக் கட்டளைகளை அவர்கள் மேன்மையாக எண்ணிக்கொண்டனர். 

இன்றும் இதுபோலவே பல கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர். பத்துக் கட்டளைகளுக்கு எதிரான பாவம் நான் செய்யவில்லை என்று கூறித் தங்களைத்  தாங்களே ஏமாற்றிக்கொண்டு வாழ்கின்றனர். அன்பானவர்களே, கட்டளைகளுக்குக் கீழ்படிவந்தால் மட்டும் எவரும் தேவனுக்குமுன் நீதிமானாவதில்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான கிருபையின் பிரமாணம் நியாயப்பிரமாணக் கட்டளைகளைவிட வேலானது. ஆம், இயேசு கிறிஸ்து பத்துக் கட்டளைகளைவிட மேலான கட்டளைகளை நமக்குத் தந்துள்ளார். அவற்றுக்குக் கீழ்படியும்போதே நாம் தேவனுக்கு ஏற்புடையவர்கள் ஆகின்றோம்.  எனவேதான் அப்போஸ்தலரான பவுல்,  "நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே." (கலாத்தியர் 2 : 16 ) என்று கூறுகின்றார். 

மேலும், மோசேயின் கட்டளைகளே போதுமென்றால் இயேசு கிறிஸ்து உலகத்துக்கு வந்திருக்கவேண்டிய அவசியமேயில்லை. அவர் பாடுபட்டு மரித்ததும் வீண். கட்டளைகள் பெலனற்றுப் போனதாலேயே இயேசு கிறிஸ்து உலகினில் வந்து  பாடுகள் பட்டு நித்திய மீட்பினை ஏற்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனையே, "நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே." ( கலாத்தியர் 2 : 21 ) என்று அப்போஸ்தலரான பவுல் அடிகள் எழுதுகின்றார். 

நாம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு மீட்பு அனுபவத்தைப் பெறும்போது புதிய மனிதர்கள் ஆகின்றோம்.  ஆவிக்குரிய மனிதர்கள் ஆகின்றோம். அதே ஆவிக்குரிய நிலையில் நாம் தொடர்ந்து பயணிக்கவேண்டும். காலத்திய சபையினர் தவறான உபதேசத்தால் ஆவிக்குரிய வழியைவிட்டுத் தடம் மாறினார்கள். எனவேதான் அப்போஸ்தலரான பவுல், கட்டளைகளுக்குக் கீழ்படிந்ததினாலா அல்லது விசுவாசத்தினாலா, எதனாலே ஆவியைப் பெற்றீர்கள்? ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா? என்று கேட்கின்றார். 

"நியாயப்பிரமாணமானது (கட்டளைகள்) ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது; அந்த நம்பிக்கையினாலே (விசுவாசத்தினாலே) தேவனிடத்தில் சேருகிறோம்." ( எபிரெயர் 7 : 19 )

கட்டளைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை கிறிஸ்துவின்மேல் வைக்கும் விசுவாசத்துக்கு நாம் மொடுக்கவேண்டும். அப்போது கிறிஸ்துவின் ஆவியானவர் நம்மை ஆவிக்குரிய மேலான வழியில் நடத்துவார்.  "நியாயப்பிரமாணத்தினாலே (சட்டம் சார்ந்த செயல்களால்)  ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே." ( கலாத்தியர் 3 : 11 )

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்