Thursday, March 23, 2023

நாம் யாருக்கு அடிமைகள்?

ஆதவன் 🌞 787🌻 மார்ச் 25, 2023 சனிக்கிழமை








"மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?" ( ரோமர் 6 : 16 )


"பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான்" (யோவான் - 8:34) என்றார் இயேசு கிறிஸ்து.  அடிமை என்பவன் சுய சித்தம் செய்ய உரிமை இல்லாதவன். தன்னை அடிமைப்படுத்தினவனுக்கு அவன் அடிமை ஆதலால்  தொடர்ந்து அவனுக்கே அடிமையாக உழைப்பான். 

இங்கு பவுலடிகள் இரண்டு எஜமானுக்கு நாம் அடிமைகளாய் இருக்கமுடியுமென்று கூறுகின்றார். ஒன்று பாவம்,  இன்னொன்று  நீதிகேதுவான கீழ்ப்படிதல். இந்த இரெண்டுபேரில் யாருக்கு நம்மை அடிமையாக்கிட நம்மை ஒப்புக்கொடுப்போமோ அவர்களுக்கே தொடர்நது அடிமைகளாய் இருப்போம் என்கின்றார். 

பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகி நாம் தேவனுக்கு அடிமைகளாகும்போது நம்மை அவர் பரிசுத்தமாக்குகின்றார். மட்டுமல்ல அதன் பலனாகிய நித்திய ஜீவனைப் பெறுகின்றோம்.  "இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்." ( ரோமர் 6 : 22 ) என்று கூறுகின்றார் பவுல் அடிகள். 

கிறிஸ்துவை அறிவதற்குமுன் நம்மையும் நமது உடலையும் நாம் பாவத்துக்கும் அசுத்தத்துக்கும் ஒப்புக்கொடுத்ததுபோல இனி நமது உடலை பரிசுத்தத்துக்கு ஒப்புக்கொடுத்து  நீதிச் செயல்கள் செய்ய ஒப்புக்கொடுக்கவேண்டும். "முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்." ( ரோமர் 6 : 19 )

இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும் (1 யோவான் 1:7) என்று வேதம் கூறுகின்றது. அவர் தனது இரத்தத்தினால் பாவமன்னிப்பாகிய சுத்திகரிப்பை உண்டுபண்ணியுள்ளார். எனவே நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்பு கேட்டு அவருக்கு அடிமையாகும்போது நாம் பரிசுத்தமாகின்றோம் 

தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். அன்பானவர்களே, எனவே எதற்குக் கீழ்ப்படியும்படி நம்மை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறோமோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறோம்.  நாம் கர்த்தருக்கே அடிமைகளாயிருக்க நம்மை ஒப்புக்கொடுப்போம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: