பாலைவனச் சோலைபோல.....

ஆதவன் 🌞 764🌻 மார்ச் 02,  2023 வியாழக்கிழமை 

"கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்." ( ஏசாயா 58 : 11 )

கர்த்தருக்கு நம்மை ஒப்புக்கொடுத்து அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது கிடைக்கும் மேலான ஆசீர்வாதத்தை இன்றைய வசனம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது. 
 
கர்த்தருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது, கர்த்தரே நம்மை நடத்துவார். நமது வாழ்க்கை தேவனால் நடத்தப்படுகின்ற  வாழ்க்கையாக இருக்குமானால் நாம் எதனைப்பற்றியும் கவலையோ நிம்மதியின்மையோ படமாட்டோம்.  ஆம், அவரே நமது வறட்சியான காலங்களில் நமது ஆத்துமாவைத் திருப்தியாகி நமது எலும்புகளை வலிமையுள்ளவையாக்குவார். 

மிகக் கொடிய பாலைவனத்திலும் சில இடங்கள் செழிப்புள்ளதாக இருக்கும். அவைகளைப் பாலைவனச் சோலை என்பார்கள். அன்பானவர்களே, நாம் கர்த்தரைச் சார்ந்து வாழும்போது எத்தகைய கொடிய துன்பங்கள், வருத்தங்கள் நமக்கு வந்தாலும் பாலைவனச்  சோலைபோல துன்பங்களுக்கிடையிலும் நமது ஆத்துமாவுக்கு  இனிய இளைப்பாறுதல் உண்டு.

இன்று அப்படி கர்த்தருக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்பவர்களைப்பார்த்துக்   கர்த்தர் கூறுகின்றார், "நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்." என்று.

உலகத்தில் தேவனற்று வாழும் பெரிய செல்வந்தர்களை நாம் பார்க்கின்றோம். புகழும் பணமும் அதிகமுள்ள பல மனிதர்களை பார்க்கின்றோம். ஆனால் அவர்களது வாழ்க்கை இருளானதாக, நிம்மதியற்றதாக, மெய்யான செழிப்பு இல்லாததாக இருக்கக் காண்கின்றோம். சமாதானமற்ற வாழ்க்கைதான் பலருக்கு. எனவேதான் குடியிலும், இதர பாவச் செயல்களிலும் ஈடுபட்டு பலர் எந்த நிம்மதியுமின்றி தற்கொலை செய்து மடிகின்றனர். 

கர்த்தருக்கு ஏற்புடையவன் அவருக்கேற்ற காரியங்களைச் சிந்திப்பான், அவரது வார்த்தைகளைத் தியானிப்பான். அப்படிக் கர்த்தரது  வார்த்தைகளை ஒருவன் இரவும் பகலும் தியானித்து வாழ்வானானால்,  "அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்." ( சங்கீதம் 1 : 3 ) என்று வசனம் கூறுகின்றது.

அன்பானவர்களே, வேத வசனங்கள் தேவனால் அனுப்பப்பட்டவை. அந்த வார்த்தைகள் பொய்ச்சொல்லாது. அவற்றை விசுவாசிக்க வேண்டும். அப்படி விசுவாசித்து அவருக்கேற்ற வாழ்க்கை வாழ்ந்து அவரது வார்த்தைகளைத் தியானித்து வாழ்வாக்கும்போது இன்றைய வசனம் கூறும் ஆசீர்வாதம் நமக்கு உண்டு. கர்த்தர் நித்தமும் நம்மை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் நமது ஆத்துமாவைத் திருப்தியாக்கி, நமது எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நாம் நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்போம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்