இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Monday, January 30, 2023

நம்மைத் திருத்திக்கொள்வோம்.

ஆதவன் 🌞 736 🌻 பிப்ருவரி 02,  2023 வியாழக்கிழமை 

"இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார்." ( மத்தேயு 18 : 10,11 )

காணாமல்போன ஆடு பற்றிய உவமையைக் கூறுமுன் இயேசு கிறிஸ்து இந்த வசனத்தைக் கூறுகின்றார். நூறு ஆடுகள் உடைமையாகக் கொண்ட ஒருவன் ஒரு ஆடு காணாமல்போனாலும் அதனைத் தேடித் கண்டுபிடிக்க முயல்வதைப்போல இயேசு கிறிஸ்து காணாமல்போன, தன்னைவிட்டுத் தூரமாய்ப்போன ஆடுகளான மனிதர்களைத் தேடிக்  கண்டுபிடிக்க ஆர்வமாயுள்ளார். நாம் வெறும் மனிதனாக ஒருவனைப் பார்க்கின்றோம்; ஆனால் இயேசு கிறிஸ்து அவனது ஆத்துமாவைக்குறித்து எண்ணுகின்றார். ஆத்துமா அழிவில்லாத எரி நரகத்திற்குள் சென்றுவிடக்கூடாது என்று அவர் கவலைகொள்கின்றார்.  

ஒருவரது பாவச் செயல்கள் நம்மை ஒருவரை அற்பமாக எண்ணச்செய்கின்றது. குடிகாரனாக, ஏமாற்று பேர்வழியாக, இருபத்துநான்கு மணிநேரமும் கெட்டவார்த்தைகள் பேசுபவனாக, விபச்சாரக்காரனாக, விபச்சாரியாக  ஒருவர்  இருக்கலாம். ஆனால் இப்படி எவரையும் அற்பமாக எண்ணக்கூடாது என்கின்றார் இயேசு கிறிஸ்து.      

இந்த வசனத்தில் மேலும் ஒரு சத்தியத்தை இயேசு கிறிஸ்து கூறுகின்றார். அதாவது, "அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள்." என்கின்றார். நல்லவனோ கெட்டவரோ நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு தேவதூதன் உண்டு. அவர்கள் பிதாவின் சமூகத்தைத் தரிசிக்கிறவர்களாக இருக்கின்றார்கள் எனும் உண்மையினை இயேசு இங்குக் குறிப்பிடுகின்றார். எனவேதான் அற்பமாக ஒருவரையும் எண்ணக்கூடாது என்கின்றார். ஏனெனில் இந்தத் தூதர்கள் ஒருவரைக்குறித்து பிதாவுக்கு அறிக்கை கொடுக்கின்றனர். அதன் அடிப்படையில் கிருபையால் அவர் எந்தப் பாவியையும் இரட்சிக்க முடியும். 

பாவிகளை மட்டுமல்ல, இந்த உலகத்தில் நம்மை அறியாமலேயே நாம் சிலரை அற்பமாக எண்ணுகின்றோம். ஒருவரது குடும்பப் பின்னணி, பொருளாதார நிலைமை, அவர் செய்யும் வேலை, அவரது உடல் தோற்றம் இவைகளின் அடிப்படையில் நாம் மனிதர்களை எடைபோடுகின்றோம். இப்படி எடைபோட்டு ஒருவரை அற்பமாக எண்ணுவதும் தவறுதான். 

நல்லவர்களை மீட்க இயேசு கிறிஸ்து உலகினில் வரவில்லை. பாவிகளை இரட்சிக்கவே உலகினில் அவர் வந்தார். இதனையே இன்றைய வசனத்தில் அவர் கூறுகின்றார், "மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார்." ஆம், நீதிமான்களுக்காக அவர் வரவில்லை. 

நாம் அன்றைய பரிசேயர்களைப்போல நம்மை நல்லவர்கள் என்று எண்ணிக்கொண்டு வாழ்வோமானால் நமது எண்ணங்களை மாற்றிக்கொள்வோம்.  இயேசு கிறிஸ்து கூறினார், "ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 21 : 31 ). இது நமக்கு எச்சரிக்கையாக இருக்கட்டும்.

பொதுவாக நாம் எல்லோருமே (என்னையும் சேர்த்துதான்) இப்படி பாவிகளை அற்பமாகத்தான் எண்ணிக்கொள்கின்றோம். நம்மைத் திருத்திக்கொள்வோம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: