Wednesday, February 01, 2023

"ஆண்டவரே, உமது கிருபை எனக்குப் போதுமையா"

ஆதவன் 🌞 737 🌻 பிப்ருவரி 03,  2023 வெள்ளிக்கிழமை 

"நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்." ( 2 கொரிந்தியர் 12 : 10 )

அப்போஸ்தலரான பவுல் அடிகள் தனது உடலிலிருந்த  "முள்" நீங்கும்படி தேவனிடம் வேண்டுதல் செய்கின்றார். அது என்ன வேதனை அல்லது  நோய்  என்பதை அவர் குறிப்பிடவில்லை. ஆனால், அது நீங்கும்படி தேவனை நோக்கி மூன்று முறை வேண்டுதல் செய்தபோது தேவன் அவருக்கு, "என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் " ( 2 கொரிந்தியர் 12 : 9 ) என்று பதில் கூறிவிட்டார். ஆனால்,  பவுல் அடிகளின் வேதனை மறையவில்லை.

அதனைக் குறித்தே அவர் இன்றைய தியானத்துக்குரிய வசனத்தை எழுதுகின்றார், "நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்." ( 2 கொரிந்தியர் 12 : 10 ) அதாவது, எனது வேதனை நீங்காவிட்டாலும் இந்த வேதனைகளில் நான் கிறிஸ்துவோடு நெருக்கமாய் இருப்பதை  உணர்கின்றேன். எனவே எனக்கு வரும் நெருக்கங்களிலும் துன்பங்களிலும் பிரியப்படுகின்றேன் என்கின்றார். 

அன்பானவர்களே, ஆவிக்குரிய வாழ்வில் அனுபவம் உள்ளவர்கள் எல்லோருமே இந்த அனுபவத்தை அறிந்திருக்கலாம். எனது வாழ்வில் இதனை உணர்ந்துள்ளேன். வேலையில்லாமல், பணமில்லாமல் நெருக்கத்தின் காலத்தில் இருந்த நாட்களில் கிறிஸ்துவின் பிரசன்னமும் உடனிருப்பும் அதிகம் உணரத்தக்கதாய் இருந்தது. அந்த நெருக்கங்களே கிறிஸ்துவை இன்னும் அறியவும், அவரோடுள்ள அனுபவங்களில் வளரவும் உதவின. 

அதாவது செழிப்பான காலங்களைவிட செழிப்பில்லாத காலங்களில் மனிதர்களைத் தேவன் அதிகம் தங்கி நடத்துகின்றார். ஆம், பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் " எனும் தேவ வார்த்தைகள் உண்மையும் நம்பிக்கை தருவதுமான வார்த்தைகள். 

இதுவே கிறிஸ்துவின் வாழ்வில் நடந்தது என்று ஒப்பிட்டுக் கூறுகின்றார் பவுல் அடிகள். "அவர் பலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும், தேவனுடைய வல்லமையினால் பிழைத்திருக்கிறார். ( 2 கொரிந்தியர் 13 : 4 )

இதனை வாசிக்கும் சகோதரனே சகோதரியே, நோய், வறுமை, வேலையில்லாமை, கடன் பிரச்சனைகள் போன்ற பலவீனங்களால் ஒருவேளை நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். "ஆண்டவரே, உமது கிருபை எனக்குப் போதுமையா" என வேண்டுதல் செய்யும்போது அவர் தனது கிருபையால் ஆறுதலும் தேறுதலும் தருவார். உங்களது இந்த பலவீனம் தேவனை மேலும் அதிகமாக அறிந்திட உதவலாம். அப்போது  பவுலிடம் தேவன் கூறிய வார்த்தைகள் உண்மையானவை என்பதை பின்னாட்களில் உணர்ந்து தேவனை மகிமைப்படுத்துவீர்கள். 

உலக காரியங்களுக்காக ஓடி ஓடி அலைந்துவிட்டு "கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்." என்று நாம் சொல்ல முடியாது. ஆவிக்குரிய வாழ்வு வாழ்ந்து, தேவனை மேலும் அறியவேண்டும் எனும் ஆர்வமிருந்தால் மட்டுமே இப்படிச் சொல்ல முடியும்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: