Tuesday, January 17, 2023

பிதாவாகிய தேவன் பெருமை பேசுபவரல்ல

ஆதவன் 🌞 721 🌻 ஜனவரி 18,  2023 புதன்கிழமை

"நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்." ( யோவான் 12 : 49 )

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்தபோது பேசிய பேச்சுக்கள் செயல்கள் அனைத்துமே பிதா தனக்குக் கூறியபடியே இருந்தன. இப்படி அவர் இருந்ததால் பிதா அவரைத் தனியே இருக்கவிடவில்லை. நமக்கு இது ஒரு முன்னுதாரணம். நமது பேச்சுகளும் செயல்களும் இப்படி பிதாவாகிய தேவனுக்கு ஏற்புடையனவாக இருக்கவேண்டியது அவசியம். இப்படி இருப்போமானால் நாம் பேசும்போது நமது சுய பெருமைகள் நம்மைவிட்டு அகன்றிடும். 

"சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை." ( யோவான் 7 : 18 ) என்று வசனம்  கூறுகின்றது. இன்றைய கிறிஸ்தவ ஊழியர்களின் பேச்சுக்களை நாம் ஆராய்ந்துபார்ப்போம். பல கிறிஸ்தவ ஊழியர்களது பேச்சுக்கள் பல வேளைகளில் தங்களது சுய பெருமைகளைப் பேசுவனவாகவே உள்ளன. 

தங்களால் செய்யப்பட்ட  அற்புதங்கள், அதிசயங்கள், இத்தனைபேர் தங்களால் குணமானார்கள், தான்  கூறிய தீர்க்கதரிசனங்கள் இதனை நிறைவேறின என்று தங்களைத் தாங்களே புகழ்வனவாக இருக்கும். இத்தகைய பேச்சுக்கள் இவர்கள்  பிதாவாகிய தேவன் அருளியபடி பேசவில்லை தங்கள் சுயமாகவே பேசுகிறார்கள் என்பதற்கு அத்தாட்சியாக இருக்கின்றன. ஏனெனில் பிதாவாகிய தேவன் இப்படிப் பெருமை பேசுபவரல்ல; பேசுபவர்களை கனம் பண்ணுவதுமில்லை.

பெரும்பாலான ஊழியர்கள் இப்படி சுய புராணங்கள் பேசக்காரணம் பெருமை. தங்களை மற்றவர்களைவிட மேலானவர்கள் என்று மக்கள் கருதவேண்டும், அதன்மூலம் கூட்டமும் காணிக்கைகளும் தங்களுக்குச் சேரவேண்டும் என்பதற்காகவே. 

தேவனுக்கு நாம் முதலிடம் கொடுத்து வாழும்போது நாம் பேசவேண்டியதை பரிசுத்த ஆவியானவரே நமக்குப் போதித்து வழிநடத்துவார். "என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்." ( யோவான் 14 : 26 ) என்றார் இயேசு கிறிஸ்து. 

பரிசுத்த ஆவியானவரோடு தொடர்பில்லையானால் நாம் சுய புராணங்களையே பேசிக்கொண்டிருப்போம். நமது  பேச்சுகளும் செயல்களும் நம்மை உயர்த்துவதாக, நம்மைப் பெருமைப்படுத்துவனவாகவே இருக்கும். அத்தகைய சுய பெருமைக்காரன் சாதாரண அரசியல்வாதியைப்போலவே இருப்பான். 

"நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்." என்று இயேசு கிறிஸ்து கூறிய வார்த்தையின்படி வாழ்வதே மெய்யான ஊழியன் செய்யவேண்டியது. ஊழியர்களுக்கு மட்டுமல்ல சாதாரண விசுவாசிகளுக்கும் இதுவே ஏற்புடையது. 

இன்று பிரபலமான கிறிஸ்தவ  ஊழியர்களுக்கு இந்த அனுபவம் இல்லாததால் அவர்களது பேச்சுக்கள் மற்றவர்களால் கேலிபேசக்கூடிய அளவுக்கு மாறிவிடுகின்றன. நமது பேச்சுக்களையும் எழுத்துக்களையும்  வெறும் ஐந்துபேர் கேட்டாலும் படித்தாலும் போதும், நாம் பிதாவாகிய தேவன் அருளிய சத்தியத்தின்படி பேசுவதே சிறப்பு. 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: