ஆதவன் 🌞 731 🌻 ஜனவரி 28, 2023 சனிக்கிழமை
"நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்." ( லுூக்கா 6 : 45 )
இயேசு கிறிஸ்து கூறிய இந்த வசனத்தின் பொருளில் ஒரு தமிழ் பழமொழியும் உண்டு. அது, "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது. நம்மிடம் இருப்பதுதான் நம்மிலிருந்துவெளிப்படும்; நம்மிடம் இருப்பதைத்தான் நாம் பிறருக்குக் கொடுக்க முடியும்.
இதனை நாம் நமது அனுபவங்களில் பார்க்கலாம். பலர் கூடியுள்ள வீட்டு நிகழ்ச்சிகளிலோ கடைவீதிகளில் சந்திக்கும்போதோ சிலர் எப்போதும் சொத்துகளைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். "அங்கே ஒரு அரை ஏக்கர் கிடக்கிறது, இங்கே ஒரு பத்து சென்ட் நிலம் கிடக்கிறது..." என்பதாக இருக்கும் இவர்களது பேச்சு.
பெண்கள் பெரும்பாலும் சேலைகள், நகைகள் பற்றியே பேசுவார்கள். சிலர் எப்போதும் பக்கத்து வீட்டுக்காரர்களைப்பற்றியே பேசுவார்கள். அவர்களது குறைகள், அல்லது அவர்கள் வீட்டில் அடக்கும் நிகழ்ச்சிகள் இவைகளையே பேசுவார்கள். மேலும் சிலர் தங்களைப்பற்றி, தங்கள் குடும்பம், பிள்ளைகள், தங்களது தொழில், பதவி இவைகளைப்பற்றியே பேசுவார்கள். மற்றவர்கள் இவர்கள் பேசுவதைக் கவனிக்கிறார்களா என்றுகூட இவர்கள் பார்ப்பதில்லை.
ஆம், இவர்கள் ஏன் இப்படிப் பேசுகிறார்கள் என்று பார்ப்போமானால் அந்த எண்ணங்களே இவர்களது இருதயத்தில் நிறைந்துள்ளது என்று பொருள். அவையே வார்த்தைகளாக வெளிவருகின்றன.
ஆவிக்குரிய காரியங்களிலும் இதுவே நடைபெறுகின்றது. தங்களை ஆவிக்குரியவர்கள் என்று கூறிக்கொண்டாலும் பண ஆசை உள்ளவர்கள், பேசும் பேச்சுக்கள் ஜெபங்கள் இவை அனைத்தும் இவர்களது இந்த ஆசையைத் தீர்ப்பதற்காகவே இருக்கும்.
உலக ஆசீர்வாதங்களை மட்டுமே பிரசங்கிக்கும் ஊழியர்களின் இருதயமும் உலக இச்சையால் நிரம்பியவையே. இத்தகைய ஊழியர்களால் கிறிஸ்துவின் ஆவிக்குரிய சத்தியங்களைப் பிரசங்கிக்க முடியாது. தங்களது இருதயத்தின் ஆசையையே அவர்கள் மற்றவர்களுக்குப் போதனையாகக் கொடுப்பார்கள். அவர்களது போதனைகள் மற்றும் செயல்பாடுகள் இவை இன்னும் அதிகம் பணம் சேர்க்கும் எண்ணத்தின் அடிப்படையிலேயே இருக்கும்.
நமது இருதயத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக பாடுகள் பட்டு உருவாக்கிய இரட்சிப்பு குறித்த ஆர்வமும், அவர்மேல் உண்மையான அன்பும் இன்னும் நாம் ஆவிக்குரிய வளர்ச்சிநிலையினை அடையவேண்டும் எனும் எண்ணமும் இருக்குமானால் அவை குறித்தே பேசுவோம். அவைகள் குறித்தே சிந்திப்போம்.
அன்பானவர்களே, நமது இருதயத்தில் எத்தகைய சிந்தனைகள் இருக்கின்றன என்பதை நிதானித்துப்பார்ப்போம். இன்னமும் இருபத்திநான்கு மணி நேரமும் உலக காரியங்களையே சிந்தித்து, அவைகளையே பேசிக்கொண்டிருப்போமானால் நாம் நம்மை ஆவிக்குரிய மக்கள் என்று கூறிக்கொள்வது பொய். நமது உண்மை நிலையினை தேவன் அறிவார். "நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்."
( 1 யோவான் 3 : 20 )
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712
No comments:
Post a Comment