ஆதவன் 🌞 711 🌻 ஜனவரி 08, 2023 ஞாயிற்றுக்கிழமை
"இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 16 )
ஆவிக்குரிய வாழ்வின் மூன்று நிலைகளை இன்றைய வசனம் எடுத்துக் கூறுகின்றது. ஒன்று ஆவியில் குளிர்ந்த நிலை. அதாவது, ஆவிக்குரிய வாழ்வு என்றால் என்ன என்று தெரியாமல் அல்லது அந்த நிலையினை அதிகம் உணராது உள்ள மக்களது நிலைமை. இத்தகைய மக்கள் தங்களது சுய பக்தி முயற்சியில் தேவனைத் தேடுபவர்கள். தேவனிடம் உண்மையான ஆவிக்குரிய அன்பு இல்லாவிட்டாலும் சிறந்த பக்தியுள்ளவர்கள். இத்தகைய மனிதர்கள் ஒருவேளை தேவனை தங்களது வாழ்க்கையில் பிற்பாடு அறிந்துகொண்டு சிறந்த ஆவிக்குரிய மக்களாக மாறிட முடியும்.
இன்னொன்று ஆவியில் அனலாய் இருக்கும் நிலைமை. ஆவிக்குரிய வைராக்கியமாக, தேவனிடம் உண்மையான அன்புசெலுத்தி ஆவிக்குரிய வாழ்வு வாழ்பவர்கள். ஆம், நாம் ஆவிக்குரிய வாழ்வில் வைராக்கியமாக அனலுள்ளவர்களாய் இருக்கவேண்டியது அவசியம். இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்." ( ரோமர் 12 : 11 ) என்று கூறுகின்றார். அனலுள்ள ஆவிக்குரிய வாழ்கையினையே தேவன் விரும்புகின்றார். இவர்கள் ஆவிக்குரிய மக்கள்.
மூன்றாவது இன்றைய வசனம் கூறுவது ஆவிக்குரிய வாழ்வில் வெதுவெதுப்பான நிலைமை. இத்தகைய மக்கள் இரண்டும்கெட்டான் ரகத்தைச் சார்ந்தவர்கள். அதாவது ஆவிக்குரிய சத்திய வசனங்களை வெறுமனே வசனங்களாக மட்டுமே அறிந்துகொண்டு அதுபற்றிய எந்த ஆர்வமும் இல்லாமல் ஏனோதானோ என்று வாழ்பவர்கள்.
இவர்கள் மாய்மாலக்காரர்கள். இவர்களிடம் நாம் சுவிசேஷம் அறிவிக்க முடியாது. ஏனெனில் வசனங்களை கணித பார்மலாப்போல அறிந்துள்ளதால் நாம் இவர்களிடம் பேச முற்பட்டால் நாம் துவங்குமுன் வசனத்தை ஒப்புவிப்பார்கள். ஆனால் அந்த வசனத்தின் வல்லமை அல்லது அதன் உண்மையான அனுபவபூர்வமான தன்மை இவர்களுக்குத் தெரியாது தெரிந்துகொள்ளவும் முயற்சிக்கவுமாட்டார்கள். சிறுவயதுமுதல் அறிந்துள்ள வசனத்தைக் கிளிப்பிள்ளைபோலச் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.
அன்பானவர்களே, ஆவிக்குரிய அனலுள்ள வாழ்வையே தேவன் விரும்புகின்றார். அதேநேரம் ஆவிக்குரிய குளிர்ந்த நிலையில் உள்ளவர்கள் சரியான சத்தியத்தை அறிந்து அனலுள்ளவர்களாக மாறிட வாய்ப்புமுண்டு. ஆனால், வெதுவெதுப்பான வாழ்க்கை வாழ்பவர்கள் தேவனை அறிந்திட வாய்ப்புகள் மிகமிகக் குறைவு. எனவேதான் இன்றைய வசனம் கூறுகின்றது, "இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்." என்று.
ஆவிக்குரிய அனலுள்ள வாழ்க்கை வாழ்பவர்கள் அந்த அனல் குறைந்திடாமல் தக்கவைத்துக் கொள்ளவேண்டியும் அதனை இன்னும் அதிகரிக்க வேண்டியதும் அவசியம். குளிர்ந்த நிலையில் நமது ஆவிக்குரிய வாழ்க்கை இருக்குமேயானால் ஆண்டவரே, நான் உம்மை அறிந்து ஆவிக்குரிய அனலுள்ள வாழ்க்கை வாழ எனக்குக் கிருபையைத் தாரும் என வேண்டுதல் செய்யவேண்டியது அவசியம்.
ஒருவேளை இதனை வாசிக்கும் மக்களது வாழ்க்கை நாம் மேலே பார்த்ததுபோல அனலுமின்றி குளிருமின்றி வெதுவெதுப்பாக இருக்குமேயானால், மாய்மால எண்ணங்களைவிட்டுவிட்டு தேவனிடம் திரும்பவேண்டியது அவசியம். "ஆண்டவரே, நான் படித்து அறிந்துள்ள வசனங்களின் உண்மையினை நான் ருசிக்கும்படி எனக்குக் கிருபைதாரும். மெய்தேவனாகிய வார்த்தையான தேவனை நான் அறிந்துகொள்ளக் கிருபைதாரும் என தங்கள் ஆவிக்குரிய அறியா நிலைமையை ஒத்துக்கொடு ஜெபிக்கவேண்டியது அவசியம். வசனங்கள் மட்டும் நம்மை இரட்சிக்காது; வசனங்கள் நம்மில் செயல்பட அனுமதிக்கும்போதுமட்டுமே நாம் அனலுள்ளவர்களாக மாறமுடியும்.
குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருந்து வசனங்களை மட்டுமே வாயினால் கூறிக்கொண்டிருந்தால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன் என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.
தேவ செய்தி:- சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712
.jpg)
No comments:
Post a Comment