Thursday, January 05, 2023

எங்களுடனே தங்கியிரும்

ஆதவன் 🌞 710 🌻 ஜனவரி 07,  2023 சனிக்கிழமை

"நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார்." ( லுூக்கா 24 : 29 )

இயேசு கிறிஸ்து பாடுபட்டு மரித்து உயிர்த்தபின்பு எருசலேமிலிருந்து எம்மாவு எனும் கிராமத்துக்குச் சென்ற தனது இரண்டு சீடர்களோடு ஒரு வழிப்போக்கனைப்போல பேசிக்கொண்டு நடந்து சென்றார். அந்தச் சீடர்களுக்கு அவர் யார் என்று  தெரியவில்லை. கிறிஸ்து பாடுபட்டு மரிக்கவேண்டியது குறித்து வேதத்தில் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களை அவர்களுக்கு எடுத்துக்கூறி விளக்கியபடி நடந்து சென்றார். அவர்கள் போய்ச் சேரவேண்டிய இடம் வந்ததும் அவர் மேலும் எங்கோ செல்லவேண்டியதுபோல காட்டிக்கொண்டார். 

அப்போது அந்தச் சீடர்கள் அவரிடம், "நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார்." ( லுூக்கா 24 : 29 )

அன்பானவர்களே, இன்று நமக்கு இது ஒரு செய்தியைக் கூறுகின்றது. வழியில் இயேசு கூறிய செய்திகளும் விளக்கங்களும் சீடர்களது மனதை அனல்கொள்ளச் செய்தன. எனவேதான் அவர்கள், "ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டார்கள். ( லுூக்கா 24 : 32 ) என வாசிக்கின்றோம்.

இன்று நமது வாழ்வும் ஒருவேளை சீடர்கள் இயேசுவை அழைத்த அந்த மாலைநேரத்தைப்போல பொழுதுபோனதாக இருக்கலாம். ஒருவேளை நமது வயது இப்போது அறுபத்தைந்து, எழுபது, எழுபத்தைந்து என பொழுதுபோனதாக இருக்கலாம். நமது வாழ்வின் அந்திவேளையில் நாம் இருக்கலாம். ஆனால் நாம் சீடர்களைப்போல அவரை அழைக்கவேண்டியது அவசியமாய் இருக்கின்றது.  "நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று" என்று அந்தச் சீடர்களைப்போல அவரை நமது வாழ்வில் அழைப்போம். 

ஒரு பரிசுத்தவானுடைய  சாட்சியை நான் வாசித்துள்ளேன். அவர் தனது அறுபத்தைந்தாவது வயதுவரை குடியிலும் கேளிக்கைகளிலும் செலவழித்து துன்மார்க்க வாழ்வு வாழ்ந்தார். ஆனால் அவரது அந்தி வேளையில் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டபோது கிறிஸ்துவைப் பற்றிக்கொண்டார். அற்புதமாகக் குணமானார். அவரது வாழ்வு கிறிஸ்து நிறைந்த வாழ்வாக மாறியது. அதன்பின்னர் அவர் இருபது ஆண்டுகள் கிறிஸ்துவுக்காக வைராக்கியமாக ஊழியம்செய்தார். 

நமது வாழ்வில் வயது அதிகமாகிவிட்டது எனக் கலங்கவேண்டாம். இனி வாழ்க்கை அவ்வளவுதான் என எண்ணவேண்டாம். வேத வார்த்தைகளை ஆவலுடன் வாசித்துத் தியானிப்போம். சீடர்களது இருதயம் கொழுந்துவிட்டு எரிந்ததுபோல நமது இருதயமும் எரியட்டும்.  "நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று" என்று உண்மையான மனதுடன் அழைப்போம். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார்என்று கூறியுள்ளபடி நமது உள்ளத்திலும் வருவார். 

ஆபிரகாமின் வாழ்க்கையில் அவர் ஏறக்குறைய நூறு வயதுள்ளவராகவும் அவரது மனைவி சாராள் வயது முதிர்ந்து கர்ப்பம்தரிக்க இயலாத நிலையில்  உள்ளவராகவும் இருந்தபோது தேவன் ஈசாக்கை மகனாகக் கொடுத்து ஆசீர்வதித்ததைப் பார்க்கின்றோம்.  

ஒருமுறை ஒரு பெரியவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது வேதத்தைக்குறித்த உண்மைகளை எடுத்துக்கூறி மீட்பு அனுபவம் பற்றி விளக்கும்போது அவர் கூறினார், "எனக்கு வயது எழுபதாகப்போகிறது. இவ்வளவுநாள் வாழ்ந்ததுபோலவே வாழ்ந்துவிட்டுப்போகிறேன்" என்றார். அன்பானவர்களே, இத்தகைய எண்ணம் நமக்கு இருந்தால் கிறிஸ்துவை வாழ்வில் அறியாதவர்களாகவே மரிக்க நேரிடும். தேவனுக்கு வயது பெரிதல்ல;  எந்த வயதினரையும் அவரால் உருமாற்றி உபயோகப்படுத்த முடியும். "நீர் எங்களுடனே தங்கியிரும், எனது வாழ்க்கை சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று" என்று உண்மையான மனதுடன் அழைப்போம்.

தேவ செய்தி:- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: