ஆதவன் 🌞 730 🌻 ஜனவரி 27, 2023 வெள்ளிக்கிழமை
"தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன. வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுடாமோ?" ( யாக்கோபு 2 : 19, 20 )
இந்த உலகத்திலுள்ள மக்கள் பெரும்பாலும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான். ஏதாவது ஒரு மதத்தைப் பின்பற்றுபவர்களாகவே இருக்கின்றனர். இவர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை அற்பமாக எண்ணுவதும், கேலி பேசுவதும் உண்டு.
ஆனால் இந்த உலகத்தில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான் அதிக பாவச் செயல்களில் ஈடுபடுகின்றார்கள். நான் கம்யூனிச இயக்கத்தில் இருந்தபோது பல கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களைப் பார்த்துள்ளேன். பெரும்பாலானவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களைவிட நல்ல நேர்மையான வாழ்க்கையே வாழ்கின்றனர். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எல்லோருமே நல்லவர்களாய் இருந்திருந்தால் இந்த உலகம் அமைதிப் பூங்காவாக இருந்திருக்கும். ஆனால் அப்படி இல்லை.
இதனையே அப்போஸ்தலரான யாக்கோபு இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் தெளிவுபடுத்துகின்றார். அதாவது நீ உன்னை கடவுள் நம்பிக்கை உள்ளவன் என்று கூறிக்கொள்கிறாய், அது நல்லதுதான் ஆனால் பிசாசுகளும் கூட கடவுள் ஒருவர் உண்டு என நம்பி நடுங்குகின்றன. நீ உனது செயல்களை மாற்றிடாமல் இருந்தால் உனக்கும் பிசாசுக்கு வித்தியாசமில்லை என்பதே அவர் கூறுவது.
தேவனை விசுவாசிக்கிறேன் என்று கூறிக்கொண்டு ஆலயங்களுக்குச் செல்வதும், ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்வதும், காணிக்கைகள் கொடுப்பதும், வேதாகமத்தை வாசிப்பதும் மட்டும் போதாது. நமது செயல்பாடுகள் தேவனுக்கேற்ற செயல்பாடுகளாக இருக்கவேண்டும்.
தேவனை விசுவாசிக்கும் நாம் நேர்மையாக வாழ்ந்து பிறருக்குச் சாட்சியாக விளங்கவேண்டும். தேவனையும் ஆராதித்துவிட்டு வாழ்க்கையில் துன்மார்க்கச் செயல்பாடுகள் இருக்குமானால் நாம் தேவன்மேல் கொண்டுள்ள விசுவாசமும், நமது தேவ பக்தியும் வீண். நாம் ஒரு செத்த வாழ்க்கையே வாழ்கின்றவர்களாக இருப்போம். அதனையே இந்த வசனம், "வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டாமோ?" என்று கூறுகின்றது.
கடவுள்மேலுள்ள நமது விசுவாசம் உண்மையானால் அவரை முற்றிலும் நம்புகிறவர்களாக இருப்போம். அவரால் எனது வாழ்க்கையில் தேவையான அனைத்தையும் தர முடியும் என்று நம்புகிறவர்களாக இருப்போம்.
இன்றைய வசனத்தைத் தொடர்ந்து யாக்கோபு ஆபிரகாமின் விசுவாசத்தை எடுத்துக்கூறுகின்றார். ஆபிரகாம் தேவனை வெறுமனே விசுவாசிக்கமட்டும் செய்யவில்லை; விசுவாசத்தைச் செயலில் காட்டினார். ஜீவனுள்ள தேவனை விசுவாசிக்கும் நாமும் நமது விசுவாசத்தை வாழ்வில் வெளிப்படுத்துவோம்; அப்போதுதான் மற்றவர்களும் தேவனை விசுவாசிக்கமுடியும்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712
No comments:
Post a Comment