ஆதவன் 🌞 716 🌻 ஜனவரி 13, 2023 வெள்ளிக்கிழமை
"நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப்போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்கு கட்டளையிட்டேன்." ( 1 இராஜாக்கள் 17 : 9 )
இக்கட்டு இடர்களில் தனது ஊழியர்களையும் தனக்கு ஏற்புடையவர்களாக வாழும் மக்களையும் தப்புவிக்க தேவன் உதவிசெய்கிறார். தேவனது அந்த உதவியைப் பெறுவதற்கு நாம் தகுதியுள்ளவர்களாக மாறவேண்டியதே அவசியம். இன்றைய வசனம் பஞ்சகாலத்தில் தனது ஊழியக்காரனாகிய எலியாவுக்கு தேவனால் அருளப்பட்டதாகும்.
ஐயோ பஞ்சம் வந்துவிட்டதே, பணமோ உணவோ இல்லையே எனக் கலங்கிடாதே, நான் உனக்காக, உனக்கு உணவளிக்க ஒரு விதவையை ஏற்கெனவே ஏற்பாடுசெய்துவிட்டேன் என்று எலியாவைத் திடப்படுத்தி அனுப்புகின்றார் தேவன்.
தேவன் அனுப்பும்போது எந்தக் குறைவும் இன்றி அவர் வாக்களித்த உணவு எலியாவுக்குக் கிடைத்ததுபோல நமக்கும் கிடைக்கும். ஆனால் சரியான இடத்துக்கு நாம் செல்லவேண்டும். இந்தப் பஞ்சகாலத்தில் பணக்காரர்களே உணவில்லாமல் தவிக்கிறார்கள் ஏழை விதவை எப்படி நமக்கு உணவுத்தருவாள்? என்று எலியா எண்ணியிருந்தால் உணவு கிடைத்திராது.
இன்று இதுபோல ஆவிக்குரிய வாழ்வில் நாம் சோர்ந்துபோயிருக்கலாம், அல்லது ஆவிக்குரிய உணவு நமக்குப் போதுமான அளவு கிடைக்காமல் இருக்கலாம். அல்லது இத்தனை வயதாகியும் நமக்கு ஆவிக்குரிய உணவைக்குறித்து அறிவில்லாமலிருக்கலாம். பல்வேறு தேவர்களையும் பல்வேறு ஊழியர்களையும் தேடி ஓடி சலிப்படைந்திருக்கலாம். ஆனால் நாம் தயங்கிடத் தேவையில்லை.
"நானே வானத்திலிருந்திறங்கின ஜீவஅப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே" ( யோவான் 6 : 51 ) என்று வாக்களித்த இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதியை நம்புவோம். அன்று யூதர்கள் இயேசுவின் வார்த்தையால் இடறலடைந்தார்கள். "நமக்கு இவன் எப்படித் தனது உடலைத் தரமுடியும்? என்றனர். இது கடினமான உபதேசம் என்று பலர் அவரைவிட்டுப் பிரிந்தனர்.
தேவனுடைய வார்த்தையை நம்பி சாறிபாத் விதவையைநோக்கி எலியா சென்றதுபோல கல்வாரி நாதரை நோக்கி நாம் செல்லவேண்டியது அவசியமாய் இருக்கிறது.
விருந்துகளில் சற்று தாமதமாக நாம் சென்றால் சில உணவு வகைகள் நமக்குக் கிடைக்காமல் போகும். சிலவேளைகளில் எதுவுமே கிடைக்காமல் போகலாம். ஆம், உலக விருந்துகளுக்கு காலம், இடம், நேரம் முக்கியம். சரியான காலத்தில், சரியான வேளையில் சென்றால் மட்டுமே உணவு கிடைக்கும். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எவரையும் புறம்தள்ளுவதில்லை. நமது வயது நமக்குத் தடையல்ல. எனவே தைரியமாக அவரை நோக்கிச் செல்வோம்.
"நானே வானத்திலிருந்திறங்கின ஜீவஅப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான். " ( யோவான் 6 : 51 ) என்று வாக்களித்துள்ளார் அவர்.
"வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப்போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான்." ( யோவான் 6 : 58 )
அவரைப் புசிப்பது என்பது, நமது பாவங்களுக்காக அவர் தனது இரத்தத்தைச் சிந்தி பலியானார் அவரது இரத்தம் நமது பாவங்களைக் கழுவி சுத்திகரிக்கும் என்பதை விசுவாசித்து ஏற்றுக்கொள்வதுதான்.
நீ எழுந்து, கல்வாரி நாதரான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் போ. அவரோடே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அவரே உன்னோடு இருந்து நடத்துவார்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712
No comments:
Post a Comment