Sunday, January 01, 2023

நான் உபத்திரவப்பட்டது நல்லது

ஆதவன் 🌞 706 🌻 ஜனவரி 03,  2023 செவ்வாய்க்கிழமை

"நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதனால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்." ( சங்கீதம் 119 : 71 )

உபத்திரவங்கள் தேர்வு போலானவைகள். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்குத் தேர்வுகள் நடத்துவார்கள். தேர்வுகள் ஒரு சோதனை. இந்த மாணவன் அல்லது மாணவி மேற்கொண்டு மேற்படிப்புக்குத் தகுதியானவர்தானா என சோதிக்கும் சோதனை. ஒரு சோதனையினை நாம் மேற்கொள்ளும்போது வாழ்வின் அடுத்தக் கட்டத்துக்கு முன்னேறுகின்றோம். 

மேலும் இந்தத் தேர்வுகள் நம்மை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்லும்போது நமது மகிழ்ச்சி அதிகமாகும். உதாரணமாக, நாம் வேலைக்கு விண்ணப்பிக்கும்போது நடக்கும் பல்வேறு தேர்வு நிலைகள், நேரடித் தேர்வுகள் ஒரு துன்பமாக நமக்குத் தெரியும். ஆனால் அந்தத் தேர்வுகளை நாம் வெற்றிகரமாக முடித்துவிட்டோமெனில் நல்ல வேலைக்குத் தகுயுள்ளவர்கள் ஆகின்றோம். 

இதனையே பக்தனான யோபுவும், "அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன் " (யோபு 23:1) என்று கூறுகின்றார்.  தங்கச் சுரங்கத்தில் இருந்து வெட்டியெடுக்கப்படும் தங்கம் முதலில் சாதாரண மண்போலவே இருக்கும். அதனையே நெருப்பிலிட்டு உருக்கி தங்கமாக மாற்றுகின்றனர்.  நகைக் கடைகளில் அழகுடன் மின்னும் தங்க நகைகள் கடந்துவந்த துன்பத்தின் பாதைகள் நமக்குத் தெரியாது. அக்கினியில் புடமிடப்பட்டு, அடித்து வளைத்து நகையாக உருவாக்கப்படுகின்றன. அதன்பின்னரே அவை அழகுடன் நகைக்கடைகளில் பார்வையாளர்களைக் கவரும்வண்ணம் மின்னுகின்றன. 

நமது ஆவிக்குரிய வாழ்விலும் நாம் தேவனுக்கு ஏற்புடையத் தகுதியுள்ளவர்கள் ஆகவேண்டுமானால் தேவன் தரும் சோதனைகளில் வெற்றி பெற வேண்டியது அவசியம்.  இதனையே அப்போஸ்தலரான யாக்கோபு, "சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்." ( யாக்கோபு 1 : 12 ) என்று கூறுகின்றார்.

இதனை உணர்ந்ததால் சங்கீத ஆசிரியர் "நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்." என்று கூறுகின்றார். தேவனது பிரமாணங்களை அதாவது கட்டளைகளைகளுக்குக்  கீழ்ப்படியும் முறைகளை  நாம் உபாத்திரங்களின்மூலம் கற்றுக்கொள்கின்றோம்.  எனவே அப்படி நான் உபத்திரவப்பட்டது நல்லது என்கின்றார் இந்தச் சங்கீத ஆசிரியர். 

அன்பானவர்களே, நாம் துன்பங்கள், துயரங்களில் அகப்படுவது இயற்கை. ஆனால் நாம் மற்றவர்களைப்போல் துன்பங்களைக்  கண்டு சோர்ந்துபோகாமல் அந்தத் துன்பங்கள் மூலம் தேவன் நமக்கு அளிக்கும் செய்திகளை அறிந்துகொள்ள முயலவேண்டும். நமது வாழ்க்கைப் பாதைகளைத் திருத்திக்கொள்ள முயலவேண்டும். ஆம், நாம் உபத்திரவப்படுவது நல்லது, அதனால் தேவனது பிரமாணங்களைக் கற்றுக்கொள்கின்றோம், நித்திய ஜீவனுக்குத் தகுதியுள்ளவர்கள் ஆகின்றோம். 

தேவ செய்தி:- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: