ஆதவன் 🌞 713 🌻 ஜனவரி 10, 2023 செவ்வாய்க்கிழமை
"பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார்." ( மத்தேயு 9 : 6 )
இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்தபோது நன்மைகள் செய்தவாறு சுற்றித் திரிந்தார் என்று வேதம் கூறுகின்றது. அவர் பல்வேறு அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்தது இரண்டே காரணத்தினால்தான். ஒன்று அவரது மனதுருக்கம், இன்னொரு காரணம் பாவங்களை மன்னிக்கத் தனக்கு அதிகாரம் உண்டு என்பதை மக்களுக்கு உணர்த்தி தான் காட்டும் வழியில் மக்கள் அவரைப் பின் செல்லவேண்டும் என்பதற்காகத்தான். ஏனெனில் இந்த உலக வாழ்க்கைக்குப்பிறகு நாம் நித்திய வாழ்வைத் சுதந்தரிக்கவேண்டுமானால் நாம் பாவமற்றவர்களாக இருக்கவேண்டடியது அவசியமாயிருக்கிறது.
ஆத்தும மரணமில்லாத வாழ்வு - அதுதான் நித்தியஜீவன் எனும் நிலைவாழ்வு. அதனை அடையும் வழியை இயேசு கிறிஸ்துக் காட்டினார். அதனை அடைந்திட முதல்படி நமது பாவங்கள் மன்னிக்கப்படுவதுதான். ஆனால் மக்கள் அவருக்கு பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டு என்பதை எப்படி உணர்ந்துகொள்வார்கள்? எனவே, மக்களது பாவங்களை மன்னிக்கத் தனக்கு அதிகாரம் உண்டு என்பதை உணர்த்தவே அவர் பல அற்புதங்களைச் செய்தார்.
ஒருமுறை ஒரு திமிர்வாதக்காரனைக் குணப்படுத்துமுன் இயேசு கிறிஸ்து அவனிடம் "உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன" என்று கூறியபோது யூதர்கள், "இவன் இப்படித் தேவதூஷணம் சொல்லுகிறதென்ன? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்." ( மாற்கு 2 : 7 )
இப்படி, பாவங்களை மன்னிக்க இவன் யார்? என்று எண்ணிய மக்களுக்குத் தான் தேவன்தான்; தனக்கு பாவங்களை மன்னிக்க அதிகாரம் உண்டு என்பதை உணர்த்தவே இயேசு கிறிஸ்து அற்புதங்கள் செய்தார்.
"நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்." ( 1 யோவான் 2 : 2 ) என எழுதுகின்றார் அவரது அன்புச் சீடர் யோவான்.
அன்பானவர்களே, நமக்கு உடலில் பல்வேறு நோய்கள் இருக்கலாம், பல ஆண்டுகளாக அந்த நோயின் தாக்கத்தால் நாம் தவித்துக்கொண்டு ஆயிரக்கணக்கான பணத்தை மருத்துவர்களுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கலாம். எல்லா நோய்க்கும் மருத்துவரான பரம வைத்தியராகிய அவரைப் பற்றிக்கொண்டு ஜெபிப்போம்.
"அன்பு ஆண்டவரே, நான் உமக்குப் பிரியமில்லாத எந்தப் பாவம் செய்திருந்தாலும் அவற்றை மன்னியும். (ரகசியப் பாவங்கள் செய்திருந்தால் அந்தப் பாவத்தை அறிக்கையிட்டு ஜெபியுங்கள்) நான் இனிமேல் உமக்கு ஏற்புடையவனாக, உமக்கு மட்டுமே சொந்தகமானவனாக வாழ முடிவெடுக்கிறேன். எனது பாவங்களை மன்னியும்; எனது தீராத நோயைக் குணமாக்கும். இனிமேல் உமக்குச் சாட்சியுள்ள ஒரு வாழ்க்கையை வாழ்வேன்". என நாம் ஜெபிக்கும் ஜெபத்துக்கு அவர் நிச்சயம் பதில் தருவார். "ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்."( சங்கீதம் 50 : 15 ) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.
தேவ செய்தி:- சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712
No comments:
Post a Comment