ஆதவன் 🌞 728 🌻 ஜனவரி 25, 2023 புதன்கிழமை
நாம் நமது பாவங்களிலிருந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் மீட்கப்படும்போது பரிசுத்த ஆவியானவரை முத்திரையாகப் பெற்றுக்கொள்கின்றோம். இந்த ஆவியானவர் நமக்குள்ளேயே இருக்கின்றார். நமக்கு வழிகாட்டுகின்றார், நாம் எப்படி நடக்கவேண்டுமென்று போதிக்கின்றார்.
ஆனால் தேவன் வலுக்கட்டாயமாக தனது எண்ணத்தை மனிதர்களிடம் திணிப்பது கிடையாது. அவர் மனிதர்களுக்கென்று தனிப்பட்ட உரிமையையும், முடிவெடுக்கும் திறனையும் கொடுத்துள்ளார். நமக்கு அறிவுரையும், வழிகாட்டுதலும் ஆவியானவர் தருவாரேத் தவிர நம்மை அவற்றைக் கடைபிடிக்க வலுக்கட்டாயப் படுத்தமாட்டார்.
எனவேதான் அப்போஸ்தலரான பவுல், தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள் என்று கூறுகின்றார். நாம் தேவ வழிகளைவிட்டு விலகும்போது, தேவனுக்கு ஏற்பில்லாத செயல்களைச் செய்யும்போது, பேசும்போது அது ஆவியானவரைத் துக்கப்படுத்துகின்றது.
நமது தாய், தகப்பன்களை உதாரணமாகக் கொண்டு இதனை நாம் புரிந்துகொள்ளலாம். நமது பெற்றோர்கள் நம்முடனேயே இருந்தாலும் நமது சில செயல்கள் அவர்களைத் துக்கத்துக்குள்ளாக்குகின்றது. காரணம் அவர்கள் அவற்றில் பிரியப்படுவதில்லை. நமது பார்வையில் நாம் செய்வதும் பேசுவதும் சரிபோலத் தெரிந்தாலும் அது சில வேளைகளில் அவர்களைத் துக்கப்படச் செய்கின்றது.
இதுபோலவே, நமது செயல்பாடுகள் தேவனைத் துக்கப்படுத்துகின்றன. ஆவியானவர் உடனேயே நம்மைவிட்டு விலகிச் சென்றுவிடுவதில்லை. அவர் வேதனையோடு அமைதியாக இருக்கின்றார். ஆனால் நாம் தொடர்ந்து தேவனுக்கு எதிரானச் செயல்பாடுக்கைச் செய்யும்போது ஆவியானவரின் தொடர்பினையும் ஆலோசனைகளையும் இழந்துவிடுகின்றோம். தேவனைவிட்டு விலகிவிடுகின்றோம்.
அன்பானவர்களே, ஆவியானவரின் குரலைக்கேட்கும் அனுபவத்தையும் அப்படிக் கேட்டபடியே நடக்கவும் நாம் முற்படவேண்டும். இல்லையெனில் சாதாரண உலக மனிதர்களுக்கும் நமக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும்.
"நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் கிட்டச் சேராத புத்தியில்லாக் குதிரையைப்போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம்." ( சங்கீதம் 32 : 8, 9 )
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712
No comments:
Post a Comment