ஆதவன் 🌞 735 🌻 பிப்ருவரி 01, 2023 புதன்கிழமை
"கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்." ( நீதிமொழிகள் 14 : 26 )
கர்த்தருக்குப் பயப்படுவதனால் ஏற்படும் நன்மைகளை இந்த வசனம் விளக்குகின்றது. இந்த வசனத்தின்படி முதலாவது, கர்த்தருக்குப் பயப்படுவதால் நமது வாழ்க்கையைக்குறித்த உறுதியான நம்பிக்கை நமக்கு ஏற்படுகின்றது. இந்த உலகத்தில் நமக்கு ஏற்படும் பாடுகள், பிரச்சனைகள் இவற்றைத் தாங்கி நடக்க இந்த நம்பிக்கை நமக்கு உதவுகின்றது.
மட்டுமல்ல, கர்த்தருக்குப் பயப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ்வதால் நமது சந்ததி நல்ல அடைக்கலமான நிலையில் வாழ்வார்கள். அதாவது நமது பிள்ளைகளுக்கு இதன்மூலம் நாம் ஆசீர்வாதத்தைச் சேர்த்துவைக்கின்றோம்.
சரி, கர்த்தருக்குப் பயப்படுதல் என்பதுதான் என்ன? அது ஒரு மாணவன் தனது ஆசிரியரைப்பார்த்து பயப்படுவதுபோல பயப்படுவதையோ, அல்லது திருடன் ஒரு போலீஸ் அதிகாரியைப் பார்த்துப் பயப்படுவதைப் போல் பயப்படுவதையோ அல்லது பணியிடத்தில் நமது உயரதிகாரியைப் பார்த்துப் பயப்படுவதுபோல பயப்படுவதையோ குறிக்கவில்லை. கர்த்தருக்குப் பயப்படுதல் என்பது, தீமையான காரியங்களுக்கு விலகி, அவைகளை வெறுத்து வாழ்வதையே குறிக்கின்றது.
"தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்."( நீதிமொழிகள் 8 : 13 ) என்று வாசிக்கின்றோம். பெருமை, அகந்தை, தீய வழி, புரட்டு வாய் என இந்த வசனம் சில காரியங்களைக் குறித்துக் கூறுகின்றது. நாம் கர்த்தருக்குப் பயப்படுகின்றவர்கள் என்றால் நாம் இப்படியுள்ளத் தீய குணங்களை செய்யாமலும் அவைகளை வெறுகிறவர்களாகவும் இருப்போம்.
இப்படிக் கர்த்தருக்குப் பயப்படுகிற வாழ்க்கை வாழ்வோமானால் நமது வாழ்க்கையில் நமக்குத் திடநம்பிக்கை உண்டு. எந்த எதிர்மறையான காரியங்கள் நமது வாழ்க்கையில் நடந்தாலும் உறுதியுடன் அவற்றைத் தாங்கிக்கொள்வோம். காரணம் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் என்கின்ற உறுதியான நம்பிக்கை. மட்டுமல்ல, நமது பிள்ளைகளுக்கும் வாழ்வில் மேலான அடைக்கலம் கிடைக்கும்.
அற்ப உலக ஆதாயத்துக்காக குறுக்கு வழியில் நடந்து, ஏமாற்று, புரட்டு, கபடம் போன்ற காரியங்கள் செய்து பணம் சம்பாதித்து அதுவே ஆசீர்வாதம் என்று எண்ணி வாழ்வோமானால் இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ளதற்கு எதிரான காரியங்களே நமக்கு நடக்கும். ஆம், அப்போது நமது வாழ்க்கை குறித்தே நம்பிக்கை இல்லாமலும், சிறிது தோல்வியைக்கண்டாலும் தற்கொலை எண்ணங்களும் தான் நமக்கு ஏற்படும். மட்டுமல்ல நமது சந்ததியும் அடைக்கலமில்லாமல் அலைந்து திரியும் சந்ததிகளாக இருக்கும்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712
No comments:
Post a Comment