Sunday, December 11, 2022

வெள்ளியும், பொன்னும் டாலர்களும் இருக்கின்றன; ஆனால் கிறிஸ்து இல்லை.

ஆதவன் 🖋️ 684 ⛪ டிசம்பர் 12,  2022 திங்கள்கிழமை

"வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 3 : 6 )

இன்றைய உலகினில் மனிதன் எல்லாவற்றையுமே பணத்தினால் தான் எடைபோடுகின்றான். சாதாரண மனிதர்கள் இப்படி இருப்பதில் எந்த அதிசயமும் இல்லை, அவர்கள் அப்படிதான் இருப்பார்கள். ஆனால் இன்று கிறிஸ்தவ ஊழியத்திலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதால் பிற இன மக்கள்முன் கிறிஸ்தவம் அவமானப்படுத்தப்படுகின்றது.

ஊழியம் என்பது கிறிஸ்து தனது இரத்தத்தால் ஏற்படுத்திய மீட்பினை மக்களுக்கு அறிவிப்பதுதான். இதற்கு பெரிய அளவில் பணம் தேவையில்லை. ஆனால் சமீபத்தில் தமிழகத்தின் பிரபல ஊழியர் ஒருவரது மனைவி ஊழியத்துக்கு பணம் இல்லை என கண்ணீர்விட்டு அழாதகுறையாக பேசிய வீடியோ காட்சியொன்று அனைத்துச் சமூக ஊடகங்களிலும் உலாவந்தது. பிரபல ஊழியரான இவரின் தந்தையார் இறந்தபோது (அவரும் பிரபல ஊழியர்தான்) அடக்கச் செலவு மிக அதிகமாகிவிட்டது, எனவே பணம் தாருங்கள் என இறந்துபோன தகப்பனது உடலை வைத்துப் பணம் கேட்டார் மகன். 

பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரி என பல நிறுவனங்களை நடத்தும் இந்த ஊழியரது மனைவி சமீபத்தில் வெளியான வீடியோ காட்சியில்:- "எல்லோரும் எங்களைப் பணக்கார ஊழியர் எனக் கூறுகின்றனர்......அன்பானவர்களே, இது சரியல்ல, பணம் இருந்தாலும் நாங்கள் எவ்வளவு தான் கை காசை  செலவழித்து ஊழியம்செய்ய முடியும்.?    எங்களது ஊழியத் தேவை மிக அதிகம். அதிக அளவு பணம் எங்கள் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கவேச் செலவாகின்றது...." என அழுகின்றார் அந்தப்பெண்மணி. சுமார் 15 நிமிடம் இதே ஒப்பாரிதான். பிற மத சகோதரர்கள் இதனை அதிகம் பகிர்ந்து கிறிஸ்துவை மீண்டும் சிலுவையில் அறைந்தார்கள்.

அன்பானவர்களே, இத்தகைய ஊழியர்களும் இவர்களை ஆதரிக்கும் ஏமாளி விசுவாசிகளும்  கவனிக்கவேண்டிய வசனமே இன்றைய தியானத்துக்குரிய வசனம். அப்போஸ்தலரான பேதுரு மடி நிறைய பணத்தைக் கட்டிவைத்துக்கொண்டு ஊழியம் செய்யவில்லை. ஆனால், அவரது பிரசங்கத்தைக்கேட்டு மூவாயிரம், ஐயாயிரம் என கூட்டம் கூட்டமாக மக்கள் கிறிஸ்துவிடம் திரும்பினர்.  

பேதுரு கூறுவது, "வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை" என்பது. ஆனால் அவர் கூறாமல் செயலில் காட்டியது, அவரோடு கிறிஸ்து இருந்தார் என்பதை. ஆம், அவரிடம் வெள்ளியும் பொன்னும் இல்லை மாறாக கிறிஸ்து இருந்தார். ஆனால் நேர் மாறானது இன்றைக்கு நடக்கின்றது. இவர்களிடம் வெள்ளியும், பொன்னும் டாலர்களும் மிக அதிகமாகவே இருக்கின்றன. ஆனால் கிறிஸ்துதான் இல்லை. 

பணம் இல்லாவிட்டாலும் கிறிஸ்து தன்னிடம் இருந்ததால் அவரைக்கொண்டு பேதுரு முடவனை நடக்கச்செய்தார்.  "அவருடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப்பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய விசுவாசமே உங்களெல்லாருக்கும் முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 3 : 16 ) எனத்  தைரியமாக யூதர்களுக்குமுன் கிறிஸ்துவை அறிக்கையிட்டார். ஆனால் இன்றைய பிரபலங்களோ மக்களைக் குருடாக்கி படுகுழிக்குள் தள்ளுகிறார்கள். 

அன்பானவர்களே, இவர்களது மனக்கண்கள் திறக்கும்படி ஜெபிப்பது நமது அனைவரது கடமை. மட்டுமல்ல, பணமில்லாவிட்டாலும் நாம் எல்லோருமே நமது வாழ்க்கையால் கிறிஸ்துவின் பணியைச் செய்யமுடியும். ஆம், நமது சாட்சியுள்ள வாழ்க்கையே மேலான சுவிசேஷ அறிவிப்பு. நாமே அவரது நிருபங்களாய் இருக்கிறோம். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712


No comments: