Tuesday, December 27, 2022

காணிக்கைகளைப் பிறகு பார்க்கலாம்

ஆதவன் 🖋️ 700 ⛪ டிசம்பர் 28,  2022 புதன்கிழமை

"எங்கள் தேவனுக்கு ஆலயத்தைக்கட்டுகிறதற்கு உங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை; பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் ராஜா எங்களுக்குக் கட்டளையிட்டபடி. நாங்களே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு அதைக் கட்டுவோம்." ( எஸ்றா 4 : 3 )

கர்த்தருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழாதவர்கள் கர்த்தருக்கென்று அளிக்கும் காணிக்கைகளையும் அவர்கள் செய்யும் உதவிகளையும் ஆலயக்  காரியங்களையும் தேவன்   அங்கீகரிப்பதில்லை.  கோடி கோடியாக ஆலயங்களுக்குக் கொட்டிக்கொடுத்தாலும், இரவு பகல் பாராமல் ஆலயக் காரியங்களுக்கு உழைத்தாலும் தேவன் அதனை அங்கீகரிப்பதில்லை. காரணம், தேவன் ஒன்றுமில்லாத தரித்திரனோ நம் உதவினால்தான் நிறைவடைபவரோ அல்ல.

தேவன் நமது மனம் திரும்பிய வாழ்கையினையே மேலாக  விரும்புகின்றார். மேலும், மற்றவர்கள் செய்வதைப்பார்த்து போட்டிபோட்டு தேவனுக்கென்று செய்வதை தேவன் அங்கீகரிப்பதில்லை.

பாபிலோனிலிருந்து கோரேஸ் ராஜாவால் விடுவிக்கப்பட்டு எருசலேமுக்கு வந்த யூதர்கள் செருபாபேல்,  யெசுவா தலைமையில் எருசலேம் ஆலயத்தை பழுதுபார்த்து கட்டத்துவங்கினர். அதனைப்பார்த்த யூதர்களுக்கு எதிராக அதுவரை  செயல்பட்டவர்களும் வந்து, "உங்களோடுகூட நாங்களும் கட்டுவோம்; உங்களைப்போல நாங்களும் உங்கள் தேவனையே நாடுவோம்" (எஸ்றா - 4:2) என்றார்கள்.  அவர்களுக்கு மறுமொழியாக செருபாபேலும்  எசுவாவும் இன்றைய வசனத்தைக் கூறுகின்றனர். 

தேவனுக்கு ஆலயம் கட்டுவதில் அவர்கள் உதவ முன்வந்தது நல்லச்  செயல்தான் ஆனால் யூதர்கள் அதனை விரும்பவில்லை. இன்று உள்ள ஊழியர்களை இந்நேரத்தில் நாம் நினைத்துப்பார்ப்போம். அவர்கள் தங்கள் ஊழியத் தேவைகளுக்கும் செலவுகளுக்கும் எந்த துன்மார்க்கன், எம்மாற்றுக்காரன் உதவினாலும் அதனைப் பெற்றுக்கொண்டு அவனுக்கு ஆசீர்வாத வார்த்தைகளைக் கூறத்தயாராக உள்ளனர். 

ஆவியானவரின் துணையோடு உண்மையான ஊழியம்செய்யும் ஊழியர்கள் இத்தகைய காணிக்கைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள், செருபாபேலும்  எசுவாவும் கூறியதைப்போல இத்தகையோர் அளிக்கும் காணிக்கைகளை தவிர்த்துவிடுகின்றனர். 

நான் முன்பு ஆராதனைக்குச் செல்லும் சபை பாஸ்டர், ஜாண்சன் டேவிட் அவர்கள் அவருக்குக் காணிக்கைக் கொடுக்க முன்வரும் சிலரிடம், "தம்பி, முதலில் நீங்க ஆண்டவர்பக்கம் வாருங்க, உங்க வாழ்க்கையை அவருக்கு ஒப்புகொண்டுங்க, காணிக்கைகளைப் பிறகு பார்க்கலாம்" என்று கூறிவிடுவார். அவர்களது மனம்திரும்புதலுக்காக ஜெபிப்பார். இதுவே உண்மை ஊழிய செய்யக்கூடிய செயல். 

எவ்வளவு பெரிய பணத் தேவைகள் இருந்தாலும், "நாங்களே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு அதைக் கட்டுவோம்" என்று துணிவுடன் இருந்து யூதர்கள் ஆலயத்தைக் கட்டினர்.  

நாம் காணிக்கை அளிக்கும் பணத்தை நாம் நேர்மையான வழியில் சம்பாதித்தோமா இல்லை ஏமாற்று வழிகளிலும் துன்மார்க்க முறையிலும் சம்பாதித்தோமா என்று சிந்தித்துப்பார்த்து மனம்திரும்புதலடைந்து காணிக்கை அளிப்பதிலும் ஆலய பணிகளிலும் ஈடுபடுவோம்.  "எங்கள் தேவனுக்கு ஆலயத்தைக்கட்டுகிறதற்கு உங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை." என்ற வார்த்தைகள் நம்மை சிந்திக்கத் தூண்டி மனம்திரும்புதலைக் கொண்டுவரவேண்டும்.

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                      தொடர்புக்கு- 96889 33712

No comments: