Sunday, December 04, 2022

சர்வ வல்லவரான கர்த்தராகிய இயேசு கிறிஸ்து

ஆதவன் 🖋️ 678 ⛪ டிசம்பர் 06,  2022 செவ்வாய்க்கிழமை

"பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்." ( எபிரெயர் 2 : 14 )

"தேவன் ஆவியாயிருக்கிறார்".  (யோவான் 4:24) அந்த ஆவியான தேவன் மனித உடலெடுத்து மனிதர்களைப்போல இரத்தமும் சதையுமானவராக மாறினார். ஆனால் மனிதர்கள் அவரது மனித தோற்றத்தை மட்டுமே மனதில் கொண்டு அவரை இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் உலகத்தில் பிறந்த சாதாரண மனிதன் என்று எண்ணிக்கொள்கின்றனர். கிறிஸ்தவர்கள் பலரும்கூட இயேசு கிறிஸ்துதான் உலகத்தைப் படைத்தார் (எபிரெயர் 1:2) எனும் சத்தியம் தெரியாமல் இருக்கின்றனர். எனவேதான் அவரை சர்வ வல்லவராக அவர்களால் பார்த்து விசுவாசிக்கமுடியவில்லை. 

சரி, இப்படி சர்வ வல்லவராக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஏன் இரத்தமும் சதையுமான மனிதனாக மாறினார்? அதனையே இன்றைய தியானத்துக்குரிய வசனத்தைத் தொடர்ந்து வாசிக்கும்போது நாம் அறியலாம். அதாவது இந்த வசனம் இப்படித் தொடர்கின்றது, "மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற் குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்."( எபிரெயர் 2 : 14, 15 )

அதாவது மரணத்தின் அதிபதியான சாத்தானை அழித்து, மரண பயத்தினால் அடிமைப்பட்டிருந்த மக்களை அதிலிருந்து விடுவிக்க அவர் மனித உடலெடுத்தார் என்று கூறப்பட்டுள்ளது. எனவே ,இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து,  அவர் நமக்காக மனித உடலெடுத்து நமக்காகப் பாடுபட்டார் என்பதையும்  விசுவாசிக்கும்போது  நாம் பாவத்திலிருந்தும், சாத்தானின் பிடியிலிருந்தும் மரண பயத்திலிருந்தும்  விடுதலை  பெறுகின்றோம்.

கிறிஸ்தவத்தின்  ஆரம்ப காலத்தில் பலரும் இயேசுவை மனிதராகக் கண்டிருந்ததால் அவர்களுக்கு கிறிஸ்துவை தேவனாக ஏற்றுக்கொள்வதில் பல சந்தேகங்கள், சிக்கல்கள்  இருந்தன.  எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்." ( 2 கொரிந்தியர் 5 : 16 ) என்று கூறுகின்றார். 

அன்பானவர்களே, அவரது கால மக்கள் அவரை மரியாளின் மகனாக, யோசேப்பின் மகனாக எண்ணியதுபோல நாமும் எண்ணிக்கொண்டிருக்கக் கூடாது. வேதாகமத்தில் கிறிஸ்து உலகத்தில் வாழ்ந்தபோது பேசிய பேச்சுக்கள், செயல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை வாசித்து அவரது மனிதத் தன்மையை மட்டும் நாம் எண்ணிக்கொண்டு அவரது சர்வ வல்லமையையும், உலகத்தோற்றத்துக்குமுன்னே அவர் இருக்கின்றார் எனும் சத்தியத்தையும் மறந்துவிடக்கூடாது. 

அப்படி நாம் கிறிஸ்துவை விசுவாசித்து வாழும்போதுதான் மெய்யான தேவனையும் அவரது மீட்பினையும் தேவ ஆசீர்வாதங்களையும் பெற்றவர்களாக மாற முடியும். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712


No comments: