Wednesday, December 14, 2022

நீதியுமுள்ள வாழ்க்கை

ஆதவன் 🖋️ 687 ⛪ டிசம்பர் 15,  2022 வியாழக்கிழமை

"எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 28 )

இந்த உலகத்தில் வாழும் நாம் பல்வேறு இன, மத,  மொழி, நாடுகளைச்சார்ந்த மக்களோடு வாழவேண்டியிருக்கிறது. எல்லோரும் ஒரே குணம் உடையவர்கள் அல்ல. எல்லோரும் தீயகுணம் உள்ளவர்களுமல்ல. நாம் நமது விசுவாசத்தால் கிறிஸ்துவை அறிந்து ஏற்றுக்கொண்டாலும் அவரை அறியாத பலர் நீதியோடும் நேர்மையோடும் வாழ்வதைப் பார்க்கலாம். தங்களைக் கிறிஸ்தவர்கள் என்றும் அதுவும் ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்றும் கூறிக்கொள்ளும் பலரைவிட மேலான நல்ல குணங்களுக்கவர்கள் உலகினில் உண்டு. 

மேலும் கிறிஸ்துவை இன்று அறியாதவர்களாய் பாவத்தில்வாழும் மக்கள்கூட ஒருநாள் மனம்திரும்பி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு நம்மைவிட மேலான ஆவிக்குரிய நிலைமையை அடையலாம். எனவேதான் இயேசு கிறிஸ்து, "ஆகிலும், முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள் என்றார்." ( மத்தேயு 19 : 30 )

இந்த உண்மையினை தேவன் அப்போஸ்தலரான பேதுருவுக்கு விளக்கினார். இதனால்தான் அப்போஸ்தலரான பேதுரு, "எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்." என்று கூறுகின்றார். 

ஆம், "எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 35 ) என்கின்றார். காரணம், கிறிஸ்துவை அறியாத, நீதி வாழ்க்கை வாழ்ந்த  கொர்நேலியுவுக்கு தேவன் பேதுருமூலம் தன்னை வெளிப்படுத்தினார்.  

கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் நீதிவாழ்க்கை வாழாதவர்கள் கிறிஸ்துவை அறியமுடியாது. அவர்கள் இறுதிவரை பெயர் கிறிஸ்தவர்களாகவே இருப்பார்கள். ஆனால் தேவனுக்குப் பயந்து நீதியோடு வாழ்ந்து தேவனைத் தேடும்போது தேவன் தன்னை அவர்களுக்கு மேலும் மேலும் வெளிப்படுத்துவார். 

மட்டுமல்ல, தேவன் ஒருவருக்கு வெளிப்படும்போது தானாகவே அவர்மேல் விசுவாசம் வரும். அப்படி "அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவான்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 43 )

அன்பானவர்களே, இதனை வாசிக்கும் நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாகவும் இருக்கலாம். கிறிஸ்துவை வெறுப்பவர்களாகக்கூட இருக்கலாம். ஆனால் உண்மையும் நீதியுமுள்ள வாழ்க்கை வாழ்ந்து மெய்யான தேவனை அறியவேண்டுமெனும் எண்ணம் கொண்டவர்கள் என்றால் கிறிஸ்து தன்னை உங்களுக்கு வெளிப்படுத்துவார். 

ஆம், முதலில் நீதி வாழ்க்கை வாழவேண்டும். இரண்டாவது மெய்யான தேவனை அறியவேண்டும் எனும் ஆவல் வேண்டும். அப்படி நீதியாய் வாழ்ந்து தேவனைத் தேடியும் அவர் உங்களுக்குத் தன்னை  வெளிப்படுத்தவில்லையானால் உங்களது மனச்சாட்சியில் இன்னும் அழுக்கு இருக்கின்றது என்று பொருள். அப்படியானால் நீங்கள் உங்கள் வாழ்க்கையினை மறுபரிசீலனைச் செய்து பார்க்கவேண்டியது அவசியம்.   

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

No comments: